அபி இராவணன்
Monday, April 26, 2021
விருந்தாளி
நாரத ராமாயணம்
நாரத ராமாயணம்
#புதுமைப்பித்தன்
முதல் பதிப்பு: 1955
கிண்டில் பதிப்பு: 2020
இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பல பரிமாணங்களில் பல மொழிகளில் பலரால் தொடர்ச்சியாக எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வந்துள்ளன.
இதுவரை 300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அவற்றில் குறிப்பாகத் தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இராமாயணங்கள் கதைகளாகக் காவியங்களாக, நாடகங்களாக, சிற்றிலக்கியங்களாகப் பல பரிமாணங்களில் ராமாயணம் தொன்றுதொட்டு படைப்பாளர்கள் தங்கள் விருப்பப்படி கையாண்டு வருகின்றனர். அதன் வழி இராமாயணம் பலநூறு வடிவங்களில் மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகின்றன.
அதில் குறிப்பாகப் புதுமைப்பித்தன் எழுதிய நாரத ராமாயணம் மிக வித்தியாசமான பகடி இலக்கியத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
பகடி இலக்கியம் நக்கலும் நையாண்டியும் ஒரு கேளிக்கை இலக்கியமாகக் கருதப்படுகிறது அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நாரத ராமாயணம்.
புதுமைப்பித்தன் மனதில் இப்படியான ஒரு வித்தியாசமான கதையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தின் காரணம் அன்றைய சூழலில் ராமாயணத்தை ஒரு கதையாக மட்டுமல்லாமல் கடவுளின் அவதாரமான ராமனின் சரித்திரத்தையும் இந்திய வரலாற்றையும் பேசுபொருளாகக் கொண்ட இராமாயணத்தை உண்மை வரலாறு போலக் கட்டமைத்த விதத்தை தலைகீழாக மாற்றி அதில் ராமன் சீதை அனுமன் பரதன் சுக்ரீவன் லவன் முதலிய கதாபாத்திரங்கள் வழி எதார்த்தமான நையாண்டி தன்மையோடு கூடிய முறையில் பாரதியைப் பின்பற்றியே புதுமைப்பித்தன் நாரத ராமாயணத்தைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாரத இராமாயணம் இந்திய இராமாயணங்களை எள்ளி நகையாடும் தொனியோடு எழுதப்பட்டது மட்டுமல்லாமல் இராமனை ஒரு அடாவடி பேர்வழியாகச் சித்தரித்தும் அனுமனை பாவப்பட்ட ஒருவனாகக் காண்பித்தும் கதையை கூறி இருப்பது கவனிக்க வேண்டியது.
பரதன் சுக்ரீவன் லட்சுமணன் இவர்களின் வாரிசுகள் போராடி ராம ராஜ்ஜியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேற்று நாட்டவர்களுடன் போராடி தோற்ற கதையைக் காண்பித்திருப்பது உண்மையில் இலக்கிய அரசியலைப் பேசுவதாக மட்டும் நின்று விடாமல் அதன்வழி பரதகண்டம் ராம ராஜ்ஜியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வலுவற்ற வாரிசுகளின் தோற்ற கதையையும் பின்பு போராடி வென்ற கதையையும் கேலியும் கிண்டலுமாகக் கதையை அமைத்து இருப்பது வேடிக்கை.
இதுவரையில் இராமாயணத்தை யாரும் இப்படி எழுதி இருப்பார்களா? என்று எண்ணும் அளவிற்குப் புதுமைப்பித்தனின் மொழி நடை, கதை கூறும் முறை, கதையின் தொடக்கம் முதலியன வித்தியாசமான முறையில் அமைந்துள்ளன.
பகடி இலக்கியத்தின் அத்தனை சிறப்பும் நாரத ராமாயணம் பெற்றுள்ளது. இதுபோன்றே பாரதியார் இயற்றிய குதிரைக்கொம்பு என்ற சிறுகதையும் பகடி இலக்கியத்திற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம்.
தமிழில் நையாண்டி இலக்கியங்கள் பற்றி விரிவான ஆய்வுகளும் கதைத் தொகுப்புகள் முழுமையாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.
பகடி இலக்கியம் குறித்து ஒரு சிறந்த கட்டுரையை ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் அந்த காலத்தில் காப்பி இல்லை என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.
நையாண்டி பாடல்கள் என்ற தலைப்பில் தனி புலவர்களுடைய பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த இரண்டைத் தவிர விரிவான ஒரு கட்டுரையோ அல்லது ஆய்வு நூல்கள் குறித்த பதிவுகளோ இல்லை.
அபி இராவணன்
26.04.2021
Thursday, April 22, 2021
"நீலப்படம்"
#நீலப்படம்
#லஷ்மிசரவணகுமார்
இரண்டாம் பதிப்பு 2019
நீலப்படம் என்ற "யாருக்கும் சொல்லாத கதை"யைதான் ஆசிரியர் பகிரங்கமாகச் சொல்கிறார்.
நாவலின் பொதுப் புத்தி வரையறையைக் கடந்து இதுவரை பேசப்படாத அல்லது விதிமீறலான அல்லது விதி விலக்கான அல்லது புறநடையான கோட்பாட்டில் எழுதப்பட்ட கதை என்ற தன்மையில் வைத்துக்கொண்டுதான் அணுக முடிகிறது இந்நாவலை.
எந்த ஒரு சமூகத்திலும் விதிகளும் விதி விளக்குகளும் கலந்தே இருக்கும். அதுவே அச்சமூகத்தின் இயல்பாகும். அப்படியான விதி விலக்குகள் வகுக்கப்பட்டாலும் அவை வழக்கில் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அவை மையமானதாக இருந்ததில்லை. அப்படியான சமூகத்தில் தொலைந்து போன பலநூறு கதைகளில் நீலப்படமும் ஒன்று.
தனிமனித அந்தரங்க வாழ்க்கை என்பது அந்த சமூகத்தின் உண்மையான முகம் என்று கூறலாம்.
அப்படியான அந்தரங்க கதைகள்தான் உண்மையின் மிக அருகாமையில் இருக்கக்கூடிய கதைகள். இச்சமூகத்தின் தோலை உரித்துக் காட்டக்கூடிய முதன்மையான ஒன்றாகும்.
தன்வரலாறுகள் பெரும்பாலும் அந்தரங்க வாழ்கையை அவ்வளவு எளிதில் படம் பிடித்துக் காட்டுவதில்லை. அதன் சுயத்தை வெளிக்காட்ட அனுமதிப்பதில்லை. இதிலிருந்து விதி விலக்கான நீலப்படம் பட்டை தீட்டப்படாத ராவான ஒரு கதை. உண்மையில் ஒரு பெண்ணின் அந்தரங்க கதை. அதில் அவள் தன்னை மறைக்கவோ புனிதமாக் காட்டவோ இல்லாமல் இயல்பான மனநிலையை வெளிப்படையாக தன் உடலைப் போலவே உள்ளதை உள்ளபடி காட்டிவிட்டு இச் சமூகத்தின் முகத்திலும் பார்வையிலும் காரி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறாள்.
நீலப்படம் தற்கால திரைத்துறையின் கதையை பேசுவதாகவும் அதே சமயத்தில் திரைமறைவில் பெண்கள் மீது இச்சமூகம் நடத்திய அல்லது நடத்திவரும் வன்முறையை, வன்மத்தை அப்பட்டமாகப் பேசக்கூடிய நாவலாக எழுந்துள்ளது.
இக்கதையில் வரும் ஆனந்தி; சத்யா என்ற பாப்பு போன்ற மனுஷிகள் இன்னுமும் பாபு போன்ற மிருகங்களிடம் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் அகப்பட்டு நசுங்கி மூச்சுத்திணறியே அன்றாடமும் போராட்டத்துடனே வாழ்கையை கடத்தி வருகின்றனர் என்பதற்கு உதாரணமாக நீலப்படத்தைக் கைகாட்டலாம். என்றாலும் பெண்ணின் இருப்பையும் அவளின் வலிமையையும் நிலை நாட்ட முடியும் என்றும் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
லஷ்மி சரவணகுமார் உண்மையில் அதி அற்புதமான கதையை மிக நேர்த்தியாக வரைந்துள்ளார். கயிற்றில் நடப்பதுபோல மிகக் கவனமாக இந்நாவலைப் படைத்துள்ளார். சிறிய கவனக்குறைவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
ஒரு படைப்பாளியின் சமூக அக்கறையை இதைவிடச் சிறப்பாக வெளிக்காட்டிவிட முடியாது.
கதைக் களம் மிகச் சுவாரஸ்யமான ஒன்று. இதை வாசிக்கையில் இம்மாதிரியான படைப்புகளை அங்கிருந்து அதை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை இச்சமூகத்திற்கு இருக்க வேண்டும். நம் சமூகம் உண்மையில் உயர்வடைய ஒருவழி உண்மையை உயர்த்தி பிடிப்பது மட்டுமே.
அபி இராவணன்
22.04.2021
11.38 pm