அபி இராவணன்

Friday, May 8, 2020

"டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி" (Totto-chan, the Little Girl at the Window)

"டோட்டோ-சான்
ஜன்னலில் ஒரு சிறுமி"
(Totto-chan, the Little Girl at the Window)
🌹🌹🌹

✍️ஜப்பானிய மொழியில்:
டெட்சுகோ குரோயாநாகி
✍️தமிழில்:
# அ. வள்ளி நாயகம்
சொ. பிரபாகரன்

📚வெளியீட்டு:
முதல் பதிப்பு:1982 
தமிழ் முதல் பதிப்பு: 1996
5ஆம் பதிப்பு: 2018
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

📎டெட்சுகோ குரோயாநாகி என்ற டோட்டோ-சான் எழுதிய தனது பதின் பருவ பள்ளி நினைவுகளின் தொகுப்பு "டோட்டோ-சான் – ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற இந்நூல் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடந்த கதை ஆகும்.

📌ஜப்பானில் இந்தப் புத்தகம் ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகிது

திரு.கோபயாஷி பள்ளியின் தலைமை ஆசிரியர். இவரை நினைவுகூரும் விதமாக இந்நூலாசிரியர் எழுதிய நூலே இந்நாவல். இது வெறும் நாவல் அல்ல தன்வரலாற்றுப் புனைவிலக்கியம் எனலாம். 
இப்பள்ளிகூடம் மற்ற பள்ளிக்கூடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

ரயில் பெட்டிகள், நீளமான வாகனங்கள் பள்ளி வகுப்பறையாக்கலாக்க மாற்றப்பட்டிருந்தன, விவசாயப் பாடம் நடத்த விவசாயி ஒருவர் சிறப்பு ஆசிரியராகத் தனது வயலில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். சுதந்திரமான பாடமுறை. மதிய உணவு முறையில் (கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்), கற்பிக்கும் முறையில் புதுமை,  திறந்தவெளி வகுப்புகள் (விளையாட்டு, பள்ளி நடை, இசை) என அற்புதமான கல்விச்சூழலை உருவாக்கியது இப்பள்ளி.

டோட்டோ-சான் கதை உண்மையில் சிறுவர் இலக்கியம் அல்ல. தன் பதின்பருவ நினைவுகளின் வழி எதிர்கால தலைமுறைக்கு விட்டுச்செல்லும் பாடம். குழந்தைகளிடத்தில் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை உணர்த்தும் நூல். அதேவேளையில் குழந்தைகளுக்கான கல்வி என்பது அவர்களாகவே கற்றுக் கொள்ளும் சுய அனுபவக் கல்வியை மையமாக கொண்டது.

டோட்டோ சானை வாசித்த பின் அம்மாதிரியான பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் அல்லது இம்மாதிரியான கல்விச் சூழலை நம் மண்ணிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்நூலை வாசிப்பவர்கள் நிச்சயம் பெறுவர். அதன் விளைவாக தற்போது இது போல ரயில் பெட்டியை வகுப்பறையாகக் கொண்ட ஒரு பாலர் பள்ளி கோவையில் உருவாகிக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உந்துதலாக இருந்தது டோட்டாசான் எனத் தனது நண்பர்கள் கூறியதாக எஸ்.ராமகிருஷ்ணன் இந்நூல் பற்றி தம் இணையத்தில் பதிவு செய்துள்ளார். 

மேலும் கவிஞர் மனுஷியும் இந்நூலை வாசித்து இதனடிப்படையில் திருவண்ணாமலையில் ஒரு பள்ளி செயல்படு வருவதாகவும் என்னோடு இந்நூல் பற்றி உரையாடும் போது குறிப்பிட்டார்.

மேலும், புதுவை ஆரோவில் அருகிலும் இயற்கை சூழலில் இத்தகைய புதுமை கல்விக்கூடம் ஒன்று அமைந்ததாகவும் ஆனால் தொடர இயலவில்லை என்றும் தகவல். பிரெஞ்சு பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரும் குறிப்பிட்டு கூறினார்.

இதுவரை டோட்டோ சான் புத்தகத்தை வாசிக்காத பெற்றோர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், இலக்கிய  வாசகர்கள் என அனைவருக்கும் ஏதோ ஒன்றை நிச்சயமாக இந்நூல் வழங்கும் என்பது திண்ணம். நீங்கள் குழந்தைகளை அணுகுவதற்கும் குழந்தைகளைக் குழந்தைகளாக புரிந்துகொள்வதற்கும் ஒரு உளவியல் சார்ந்த பாடத்தை நிச்சயம் கற்றுத்தரும். இந்நூலைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உடனே வாசித்துவிடுங்கள். 


இதை வாசித்தவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத தாம் வாசித்த நூல்களில் ஒன்றாக நிச்சயம் இது இருக்கும். காரணம் நம் பதின் பருவத்தை நோக்கி மீண்டும் நாம் பின்னோக்கி பயணப்பட முடியாத அந்த காலத்தை, நினைவுகளை நோக்கி நம்மை அழைத்து செல்லும் ஓர் அற்புதமான காலசக்கரம் இந்நூல் என்பது என் மதிப்பீடு.

அபி இராவணன்

No comments:

Post a Comment