அபி இராவணன்

Saturday, May 2, 2020

"சித்தார்த்தன்"

வாழ்வில் ஞானத்தை உயரிய சிந்தனையை அடைய முயலும் பரிபூரணத்தை அல்லது ஓர் உன்னத இடத்தைப் பற்றிய தேடல் உடையவர்கள் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய நூல் "சித்தார்த்தன்" - ஹெர்மன் ஹெஸ்ஸெ. தமிழில் திருலோக சீதாராம்.

இது புத்தரைப் பற்றிய நாவல் அல்ல. அதே வேளையில் புத்தர் அடைந்த வழியை நோக்கிய தேடல் கொண்ட ஒரு புத்த பயணியின் கதை.

சித்தார்த்தன் என்ற கதாபாத்திரம் ஞானத்தை அடையும் பொருட்டு எல்லா சமய வழிகளிலும் ஏதோ ஒன்றைத் தேடியும் ஒவ்வொரு சமயத்திலும் கூறப்பட்டுள்ள நெறிகளைக் கடைப்பிடித்தும் அவை கூறிய வழிகளில் சென்று பார்த்தும் தத்துவ சமய சடங்குகளைச் செய்தும், அதன்வழி யாரோ ஒருவர் சென்ற வழிகளைத்தான் அவை போதிக்கின்றனவோழிய! ஒருபோதும் ஞானத்தையோ அல்லது ஞான நிலையையோ பெற உதவப் போவதில்லை என்கிற புரிதலைச் சித்தார்த்தன் மூலமாக இந்நாவல் பயணப்படுகிறது...

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்நாவலில் வரும் சித்தார்த்தன் என்பவன் நான் தான் என்பதை உணரமுடிகிறது. இதில் வரக்கூடிய எல்லா சம்பவங்களும் என் ஆழ்மனதில் ஓர் உணர்வை ஆன்மாவை எழுப்பிவிடுகிறது. சில நேரங்களில் என் செயல்களில் நான் யோசிக்கும் விஷயங்களில், சமயம் பற்றிய என் கண்ணோட்டத்தில், தெய்வம் பற்றிய புரிதலில், குருவைக் கண்டடையும் வேட்கையில், வாழ்வின் எதார்த்தத்தை உணரும் தறுவாயில், அதற்கு முந்தைய பிந்தைய நிலைகளை, ஒரு மாறுபட்ட கோணத்தில் கதையின் தொடக்க நிலையை நோக்கிய கதை அமைப்பின் வழி சென்று முடிவதுதான் நாவலின் மிகச் சிறப்பு...

ஞானம் என்பது மேலிருந்து கீழாகச் செல்வது. அது தன்னை உணர்ந்து கொள்வது. தன்னை வெளிக்காட்டிக் கொள்வது அல்ல. தன்னை தான் என்ற அடையாளத்தை அழித்துக் கொள்வது. தன்னை முன்னிறுத்திக் கொள்வது அல்ல. பேச்சாலும் செயலாலும் அல்லது தன்னையோ தன் சார்ந்த எந்த ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ள முயலும் எதுவும் ஞானத்தை அடையும் வழி ஆகாது. அல்லது ஞானம் பெற்றவன் செயலாகாது. 

புத்தரின் கடைசி புன்னகை இதைத்தான் சொல்லிச் செல்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளாத வரையில் ஞானம் என்பது கைகூடுவது சாத்தியமில்லாத ஒன்று.

கதாபாத்திரங்கள்:
சித்தார்த்தன் 
நண்பன் -கோவிந்தன் 
கௌதம புத்தர்
விலைமகள் - கமலா  (சித்தார்த்தன் காதலி)
காமஸ்சுவாமி - வணிகன்
தோணிக்காரன் - வாசுதேவ்
சின்ன சித்தார்த்தன் - (கமலா சித்தார்த்தன் மகன்)

அபி இராவணன்

No comments:

Post a Comment