அபி இராவணன்

Saturday, May 2, 2020

"காச்சர் கோச்சர்"

"காச்சர் கோச்சர்"
✍️
#கன்னடத்தில்
விவேக் ஷான்பாக்
~~~~~~~~~~~~~~~~
#தமிழில் 
கே. நல்ல தம்பி

இந்நாவலை வாங்குவதற்கு முதல் காரணம் இந்நூலின் தலைப்பு அது என்ன "காசர் கோச்சர்"…என்ற கேள்வி என்னுள்ளே எழுந்தது? ஆனால் அதன் விபரீதம் நாவலை வாசித்து முடித்த பின்னர் அறிந்து கொண்டேன் நான் எதிர்பார்க்காத ஒன்று இந்நூலின் தலைப்பு. கொஞ்சம் விரசம் கலந்தது என்றாலும் கதைக்கு மிக பொருத்தமான தலைப்பு என்றே எண்ணத் தோன்றியது வாசிப்பின் நிறைவில்.

சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்ல காத்துக் கொண்டிருந்த சமயத்தில் கண்ணில்பட்டது ஒரு புத்தகக் கடை (புக் ஸ்டால்) உள்ளே சென்று வேடிக்கை பார்க்கலாம் இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்கலாம் என்று தேடியபோது கையில் கிடைத்தது இந்நூல். கன்னட நாவல் தமிழ் மொழிபெயர்ப்பு சரி பரவாயில்லை வாங்கிப் படிப்போம் என்று கழிவு விலையில்லாமல் முழு பணத்தையும் கொடுத்து வாங்கினேன். பிற மொழி மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பற்றிய புரிதலும் அதன் அவசியத்தையும் நான் டெல்லியில் கற்றுக்கொண்டேன்.

இந்நாவல் பெங்களூரைக் கதைக்களமாகக் கொண்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதை...

என் மன ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு நாவல். மனிதர்களின் குரூர மனம்  அவ்வப்போது வெளியே வரும்பொழுது அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே மூலகாரணம். அதை நாம் சில நேரங்களில் ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும், அதனால் விளைந்த விளைவுகளை நாம் நம் வாழ்வில் அனுபவித்துத்தான் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்நாவல்.

மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற்றம் என்று எதைக் கருதி கொண்டு எங்கு? எதற்காக ஓடுகிறான்? எதைச் செயல்படுகிறான்? என்று அறியாமல் செய்வதால் அவனுக்குப் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. பணம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் அவனின் மனமே முதல் காரணம் என்ற புரிதலை நமக்கு இந்நூல் வழங்குகிறது.

நாவல் உள்ளே....

அப்பாவிற்கு திடீரென்ற வேலையிழப்பு, குடும்பத்தை நடத்த வேண்டிய இக்கட்டான சூழல், வேறு வேலை தேட வேண்டிய ஒரு கட்டாய நிலை, அப்போது தோன்றியதுதான் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என்ற யோசனை கூறிய - சித்தப்பா வெங்கடாசலம். "சோனா மசாலா" தொழில் வளர்ச்சி, அதன் விளைவாக குடும்பம் வாடகை வீட்டிலிருந்து சொந்தமான ஒரு புதிய வீட்டிற்கு இடம்பெயர்தல், அதுவரையில் குடும்ப செலவினங்கள் அனைத்தும் பார்த்துப் பார்த்து செலவழித்த சூழலிலிருந்து கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்யும் சூழலுக்கு வளர்ந்தது. அதுவரையில் நெருக்கமாக இருந்த உறவுகள் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் தனித்து நிற்கத் தொடங்கினர் இவற்றிற்கெல்லாம் காரணம் பணத்தை மட்டும் காரணம் சொல்லி விட முடியாது. மனிதர்களின் மனம் நான் என்ற எண்ணம் இன்னும் எத்தனையோ...

கதை தொடக்கம் முடிவு இவற்றுக்கு இடைப்பட்ட கடந்த கால நினைவுகள். கடைசிவரையில் சித்தப்பாவுக்கும் அந்த பெண்ணிற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசாமலே போனது. வாசகருக்கு இடத்தை விட்டு நகர்ந்து செல்லும் படைப்பாக்க உத்தி. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம்  அதன் முக்கியத்துவம். கணவன் மனைவி இடையேயான உறவு விரிசல். பிரிவு. எது நடந்தாலும் குடும்பம் மட்டுமே முக்கியம் என்று கருதும் அம்மா. தொழிலில் மட்டும் அதிக  கவனம் செலுத்தும் அப்பா. படித்து முடித்து நல்ல உத்தியோகத்திற்குச் செல்லவேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த அண்ணன். தேவையான பொருளாதார குடும்பத்தில் நிலவியதும் வெளியில் எங்கும் வேலை செய்யாமல் தங்கச் சொந்தமாகத் தொடங்கிய தொழிலில் வேலை. கணவனை (ரவி) பிரிந்த  மாலதி - ஒரு புதிய சூழலில் திருமணமான பெண்ணின் எதிர்பார்ப்பு. புதிராகவே புகுந்தவீட்டுச் சூழலைச் சமாளிக்கவோ அல்லது பழகிக் கொள்ளவோ முடியாத சூழ்நிலை ஏற்படும் சண்டைகள். இன்னும் பல பல மன ரீதியான உணர்வுகளை அச்சுப்பிசகாமல் அழகாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர்.

குடும்பம் எனும் சிக்கலிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மனிதர்கள். அதே வேளையில் அந்த சிக்கலிலிருந்து கொண்டே எல்லாம் சரியாக இருப்பதாகப் பாவனையோடு வாழும் போலி மனிதர்கள் உண்மையில் சிக்கல்களை உடைத்துவிட்டு வெளியேறவே எண்ணுகின்றனர் என்பதைக் குறியீடாக உணர்த்துவதே கதை. 

இந்நூல் மொழி பெயர்ப்பு நூல் என்று சொல்ல முடியாது அவ்வளவு இயல்பான மொழிநடை எங்கும் சலிப்புத் தட்டாமல் இல்லாமல் வாசிப்பதற்கு இலகுவாக அமைந்திருப்பது மொழிபெயர்ப்பாளரின் மொழிப்புலமை நாவலை ஒரு சிறந்த வெற்றி நாவலாக மாற்றியிருக்கிறது.

நூலின் தலைப்பு நாவலை முழுமையும் வாசித்து முடித்தபின் வாழ்க்கையின் சிக்கலைக் குறிப்பதாக உணர்ந்தாலும் அந்த "காச்சர் கோச்சர்" என்ற சொல்லுக்கு உண்மையில் பொருளில்லை. அது குழந்தைத் தனத்தின் வெளிப்பாடு. அதுவரையில் இந்த சொற்களை யாரும் பயன்படுத்தியதில்லை. பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவனின் வாயிலிருந்து வந்த சொல். நூல் சிக்கிக் கொண்டதைப் பிரித்து எடுக்க முடியாத சூழலில் அவன் கூறியதைக் கேட்டு அனைவரும் இது என்ன (பாஷை) வார்த்தை என்று கேட்க அவனே அதற்குப் பொருள் தெரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கையில் அன்று உருவானது அந்த சொல். குடும்பத்தில் அந்த நால்வருக்கும் மட்டுமே அதுவரை தெரிந்த பொருள். சிக்கலாகிப் போன அந்த நூலினை குறிப்பாக அந்த சிறுவன் பயன்படுத்திய வார்த்தை. திருமணமான பிறகு அனிதா தன் கணவனுடன் முதல் இரவில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்த அவள் தன் கணவன் தன் பாவாடையின் நாடாவை அவிழ்க்கத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது அவள் நாடாவை அவிழ்க்க முயன்று முடியாமல் போக "கோச்சர் காச்சர்" என்று அவள் கூற அது என்ன வார்த்தை என்று அவன் கேட்க அதற்கு தன் சிறுவயதில் நடந்த நிகழ்வைக் கூறி முடிக்கிறாள்.

அபி இராவணன்

No comments:

Post a Comment