அபி இராவணன்

Saturday, May 2, 2020

ஃபுக்குஷிமா (ஒரு பேரழிவின் கதை)

ஃபுக்குஷிமா (ஒரு பேரழிவின் கதை)
மிக்காயேல் ஃபெரியே
# பிரெஞ்சிலிருந்து தமிழில்
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்.

# இந்நாவலை வாசிக்கையில் இறுக்கமான ஒரு மனநிலையையே நான் உணர்கிறேன். இயல்பான மன நிலையிலிருந்து மாறி பேரழிவின் உச்சத்தில் நின்று கொண்டு எந்த உணர்வும் சலனமும் அற்ற தனி ஒருவனாக இந்த நாவலைக் கடக்க முயற்சி செய்கிறேன்.

பேரழிவுகள் மூலம் மனிதர்களுக்கு இயற்கை தன் பாடத்தைப் புகட்டிக் கொண்டே தான் இருக்கிறது. இன்றைய சூழலில் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல்.  முன்னேற்பாடுகளுடன் நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வைத்துக்கொள்ளவேண்டும் என்ற முன் எச்சரிக்கையை விடுகிறது இந்நாவல்.

நிலநடுக்கம், பூகம்பம், ஆழிப்பேரலை, புயல், பெருமழை, வெள்ளம், தீ போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மனிதன் தன்னை காத்துக்கொள்ள எவ்வாறெல்லாம் போராடுகிறான் என்பதை உணர்ந்து கொண்டாலும் அவற்றிலிருந்து தப்பிக்க வழிகளை கற்றுக் கொண்டாலும் மனிதனுடைய அனைத்து முயற்சிகளும் ஏதோ ஒரு புள்ளியைத் தோல்வியின் படிக்கட்டுகளைத் தொட்டுவிட்டுத் தான் வருகின்றன. இயற்கை விதியின் முன் மனிதனின் சக்தி சிறு புள்ளி என்பதை உணர முடிகிறது இந்நூலை வாசிக்கையில்.

ஃபுக்குஷிமா (ஒரு பேரழிவின் கதை) ஒரு நடந்த சம்பவம் வரலாற்றில் பதிவாகிப் போன ஒரு சோகமான கதை அதை வாழ்ந்து அனுபவித்த ஒருவரால் எழுதப்படும்போது உண்மை தடையாக அமைகிறது.

வரலாற்றில் இன்று நேற்றல்ல காலம்தோறும் பேரழிவுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதைத் தீர்க்கவும் அல்லது முன்னெச்சரிக்கைக்கான வழியைத் தெரிந்து கொள்ள அறிஞர்கள் அரும்பாடுபட்டு மனித சமுதாயத்தைக் காக்கக் காலந்தோறும் போராடி வருகின்றனர். உதாரணமாக கி.பி 132 ஜங் ஹெங் என்பவர் நிலநடுக்கங்களை அறியும் முதல் கருவியைக் கண்டுபிடித்தார். ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளாமலும் அவர் கண்டுபிடிப்பைப் பற்றி அவதூறு பேசி அவரை அழித்து ஒழிக்கவும் தான் செய்தனர். இது அன்று தொடங்கி இன்று வரை இதே நிலைதான் தொடர்கதையாகத் தொடர்கிறது. அறிஞர்கள் பின்னாளில் நம்மை தன் கண்டுபிடிப்பை நிரூபித்து வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது வரலாறு...

மூன்று பகுதிகளாகக் கதை அமைந்துள்ளது.

1. விசிறியின் கைப்பிடி 
2. தண்ணீரிலிருந்து தப்பித்த கதைகள்
3. அரை ஆயுள் - வாழும் முறை

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள் ஒரு வெள்ளிக்கிழமை என்று கதை தொடங்குகிறது. அதிலிருந்து நிலநடுக்கம், சுனாமி, அணு உலை வெடிப்பு வரை மாட்டிக்கொண்ட ஒருவரின் மனநிலையை அப்படியே தத்ரூபமாக உணர்வுப்பூர்வமாக அசைவின் அத்தனை மாறுதல்களையும் கண்முன்னே கொண்டுவந்து காட்சிப்படுத்தி விவரிக்கிறார் நூலாசிரியர். இடையே சரியான நேரம் , காலம், ஆண்டு, புள்ளி விவரங்கள் எனத் தரவுகளோடு எழுதி இருப்பது ஒரு வரலாற்று நூல் போல் எண்ணத் தோன்றுகிறது.

ஒரு இலக்கியவாதி என்றால் அவனுக்குக் கணிதம், அறிவியல், வானசாஸ்திரம், இலக்கணம், மொழியியல், பண்பாட்டியல் என அனைத்தையும் ஒருசேரப் பெற்றவனாக இருக்க வேண்டும். காரணம் ஒரு இலக்கியப் படைப்பை உருவாக்குவதற்கு இவ்வளவும் தேவைப்படுகிறது. அதனால் தான் படைப்பாளர்கள் அவர்களுக்குக் கல்வி என்பது மிக விரிந்தது தளத்தைக் கொண்டது...

இந்நாவல் ஆசிரியரும் அத்தகைய தன்மை கொண்டவர் ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழி பேராசிரியராக பணிபுரிந்த சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் கூடுதலாகத் திரட்டிய தகவல்கள் அனைத்தையும் கொண்டு எழுதி இருப்பது இதன் சிறப்பு.

வாழ்வின் யதார்த்தத்தை உணராத மனிதர்கள் இம்மாதிரியான பேரழிவுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள் என்ற எதார்த்த சம்மட்டி கொண்டு ஓங்கி நம் தலையில் அடிக்கும் விதமாக நடந்ததை நடந்தவாறு பதிவு செய்துள்ளார். வாசிப்பதற்கு ஒரு புனைவு போலத் தோன்றினாலும் வரலாற்றில் அதன் தடத்தையும் கோபுரத்தையும் விளங்கிக் கொள்வதற்கு இந்நூல் சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது.

# இந்நூலாசிரியர் மிக்காயேல் ஃபெரியே 

இவர் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர், கட்டுரையாளர் இவருடைய பாட்டி ஒரு இந்தியர். தாத்தா மொரிஷியர். பிரான்சில் 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தன் இளம் வயதைக் கழித்து பாரிசின் புகழ்மிகு சொர்போன் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவருடைய படைப்புகளில் கலை இசை தத்துவம் விமர்சனம் ஆகிய பன்முகத் தன்மைகளைக் காணமுடியும்.

# மொழிபெயர்ப்பாளர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்.

இவர் புதுச்சேரியில் 1963 ஆம் ஆண்டு பிறந்தவர். புதுச்சேரி அரசு கல்லூரியில் பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சுவிட்சர்லாந்து பிரெஞ்சு எழுத்தாளர் "பிலேஸ் சாந்த்ரார் படைப்புகளில் விலகித்தப்புதல்" எனும் ஆய்வினை முடித்து பிரெஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.

குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை ஆகிய சங்க நூல்களை முழுமையாகப் 
பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். பல நவீனத் தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் இவர் பல பிரெஞ்சு நாவலாசிரியர்களின் புனைவு இலக்கியங்களைப் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர்.

இந்நூலாசிரியரின் படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளை மீது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வும் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அபி இராவணன்

No comments:

Post a Comment