அபி இராவணன்

Saturday, May 2, 2020

"நவபாஷாண சித்தர்"

சித்தர்களை நோக்கிய என் பயணமும் நவபாஷாண சித்தரைப் பற்றி நான் எழுதியதும்.

இன்றைய கொரோனாவும்
சந்தி குப்பம் நவபாஷாண சித்தரும்.

சித்தர்கள் நம்மை அழைக்காமல் அவர்களுடைய ஜீவ சமாதிக்கு நாம் செல்ல முடியாது. நீண்ட நாட்களாக சித்தர்களைப் பற்றிய சிந்தனையோடு இருந்த நான் இன்று சற்குரு நவபாஷாண சித்தர் பீடம் - சந்தி குப்பம் என்ற ஊருக்குச் சென்றிருந்தேன்.
விவசாய நிலத்திற்கு நடுவில் அமைந்திருந்தது. உள்ளே சென்று ஜீவசமாதியை வணங்கிவிட்டு கோயிலின் பின்புறமாகச் சென்றேன். தென்னை மரம், நாவல் மரம், அத்திமரம், கொய்யா மரம், நெல்லிக்காய் மரம், வெள்ளெருக்கு, துளசிச் செடி, செம்பருத்தி பூ செடி எனப் பலவகையான செடிகளும் மரங்களும் இயற்கை சூழலில் அமைந்திருந்தது. அதுமட்டுமன்றி அந்தக் கோயிலைச் சுற்றியும் சவுக்கை, அவித்து கீரை, தென்னந்தோப்பு, சாமந்திப்பூ தோட்டம், வாழைத்தோப்பு பார்ப்பதற்கே கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. உச்சிப் பொழுது சரியாக மணி 1:30 (pm) அங்கிருந்தவர்கள் வேலையை முடித்துவிட்டு அந்த கோவில் பின்புறமாக இருந்த தென்னை மரத்தடியில் ஒன்று கூடினார்கள். ஒரு அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் என் எதிரே வந்து அமர்ந்தார். எந்த ஊர் தம்பி நீங்க? என்று கேட்டார். என் ஊர்ப் பெயரைச் சொன்னேன். நானும் அவரிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்ன படிக்கிறபா? இல்லை வேலை பார்க்கிறாயா? என்று கேட்டார். Ph.d படித்து முடித்து விட்டேன் என்றேன். ஒருகணம் மனதில் எங்க இதெல்லாம் இந்த முதியவருக்குப் புரியப் போகிறது என்று யோசித்த பொழுது. உடனே அவர் தனது மனைவி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்ப்பதாகக் கூறினார். தானும் விழுப்புரம் அரசு கல்லூரியில்  படித்ததாகவும் கூறினார். எனக்கு மேலும் வியப்பு. ஆடையின்றி வெறும் கோவணத்தோடு வயலில் வேலை பார்த்துவிட்டு வந்து என்னோடு அமர்ந்து பேசிய பெரியவரை ஒரு நிமிடம் கண்கள் விரியப் பார்த்தேன். எனக்கு மிகுந்த ஆச்சரியம். இந்த எதார்த்தமான பேச்சுக்கள் எல்லாம் கிராமப்புறத்தில் தான் சாத்தியம். நகர்ப்புறங்களில் நிச்சயம் இப்படி ஒரு உரையாடல் நிகழ வாய்ப்பே இல்லை. என்று தோன்றியது. கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்கப் பெண்கள் இருவர் ஏதோ குடும்பக் கதை பேசிக் கொண்டிருப்பதை அவர்களின் உரையாடலிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. என்ன வேலை செய்கிறீர்கள்? பெரியவரே என்று நான் கேட்டதும். அவர் "அது வாப்பா அதோ தெரிகிறது அந்த சவுக்கு நம்மதுதான்இந்தாண்டா வாழ நம்மதுதான் பின்னாடி எள்ளு காயப் போட்டு இருக்கேன்பா என்று சாதாரணமாகக் கூறினார். உடனே அவர் தொடர்ந்து அவர் படித்த காலத்தில் அவருக்கு அரசு வேலை கிடைத்ததாகவும் அது உள்ளூரில் உள்ள சிலரின் காழ்ப்புணர்ச்சியால் அது கிடைக்காமல் போனதாகவும் கூறினார். ஏன் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வீட்டில் இரண்டு பேருக்கு அரசு வேலை எப்படி கோப்பார்கள் என்று கூறினார். யாரோ? ஒருவர் ஆட்சியரிடம் மனுகொடுத்து வேலையைத் தடுத்ததாகவும் கூறினார். அதனால் அந்த வேலை அன்று கிடைக்காமல் போனதாகவும் கூறினார். பின்பு மீண்டும் முயற்சி செய்தும் கைக்குக் கிடைத்த வேலை மீண்டும் கிடைக்காமல் போகவே தன் ஜாதகத்திலே அரசு வேலை கிடைக்காது என்றும் அவருக்கு யாரோ சொன்னது பலித்தது என்று கூறி சிரித்தார். இருந்தாலும் பரவாயில்லை ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாதான் இருக்கிறோம். என்று கூறி துண்டை உதறி அங்கு விரித்து அதன் மீது அமர்ந்து. ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டார். என்ன சாப்பிடப் போகலையா என்று நான் கேட்க தன்னுடைய பெரிய மகன் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதாகவும் கூறினார். அவர் கூறிய ஐந்து நிமிடத்தில் அவரது மகன் சாப்பாடு கொண்டு வந்திருந்தார். கூடவே பெரியவரின் பெயர்த்தி வந்திருந்தாள். அவளது பெயர் அவந்திகா. இங்கே வா உன் பேர் என்ன சொல்லு? என்ன படிக்கிற என்று கேட்டேன். நாணு இன்னும் பள்ளிக்குப் போல என்று மெதுவாகக் கூறிவிட்டு தன் தாத்தாவின் மடியில் போய் ஏறி அமர்ந்து கொண்டாள். மூன்று வயது இருக்கும் அந்த குழந்தைக்கு. தாத்தா சாப்பிடு என்று சொல்லிக்கொண்டே பையை தன் பக்கமாக இழுத்தாள். அந்த பெரியவர் எங்கே கீழே விழுந்து விடப்போகிறது என்று அவள் கையிலிருந்து வாங்கி உள்ளிருந்த சாப்பாட்டை வெளியிலெடுத்து சாப்பிடத் தயாரானார். கீரை குழம்பு உருளைக்கிழங்கு பொரியல். டப்பாவிலிருந்து உருளைக்கிழங்கு இரண்டு துண்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவள். தாத்தாவின் மடியிலேயே உட்கார்ந்து சாப்பிட்டாள்.

ஶ்ரீ நவபாஷாணம் சித்தர் செவிவழி வரலாற்று.

கடலூர் மாவட்டம் கிளிஞ்சிக் குப்பம் பஞ்சாயத்து உட்பட்ட சந்திக் குப்பம் கிராமத்தில் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னால் வடலூரிலிருந்து புறப்பட்டு வந்த சித்தர்களில் ஒருவர் தான் இந்த நவபாஷாண சித்தர்.

வடலூரிலிருந்து தல யாத்திரை  புறப்பட்ட சித்தர் பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு சந்தி குப்பம் அருகில் உள்ள புண்ணிய தலமான திருக்காஞ்சி காசிவிஸ்வநாதரை தரிசிக்க வந்தார். 

அப்போது சந்திக்குப்பம் மக்களை மர்மமான நோய் ஒன்று தாக்கி பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருந்தது நோய்க்கு ஏற்ற மருந்து தெரியாததால் தகுந்த சிகிச்சையும் அளிக்க முடியவில்லை. அந்த கிராமத்தில் சாவு என்பது தொடர் நிகழ்வாகிக் கொண்டிருந்தது.

அதிகாலையில் அவ்வூரிலுள்ள சங்கராபரணி ஆற்றில் நீராடிய சித்தர் சூரிய வழிபாட்டினை முடித்துவிட்டு ஆற்றங்கரை ஓரமாகச் சுடுகாட்டை வந்தடைந்தார்.

அங்கே முதல் நாளுக்கான பிணங்களைப் புதைத்தும் எரித்தும் இருந்த நிலையில் மக்கள் கூட்டத்தில் ஒவ்வொருவரும் அழுகையும் ஓலமுமாய் இருந்தனர்.

சித்தர் அங்கிருந்தவர்களை நோக்கி ஏன் இப்படி இங்கு இவ்வளவு சடலங்களைப் புதைக்கிறீர்கள் ஒரே நாளில் இவ்வளவு மரணங்களா? என்று கேட்க.

ஐயா எங்கள் ஊரில் இன்னதென்று தெரியாத ஒரு மர்ம நோய் தாக்குதலால் எல்லோரும் கும்பல் கும்பலாய் மடிந்து கொண்டிருக்கிறார்கள். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாததால் சிகிச்சையும் இல்லை யாரிடமும் சொல்லி முறையிடுவது என்றும் தெரிய இல்லை என்று கூறினர்.

சரி வாருங்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கலாம் என்னால் முடிந்த சிகிச்சையை நான் செய்கிறேன் என்று கூறினார்.

எல்லா வகையான நோய்களையும் தீர்க்கும் படியான கூட்டு மருந்தினை சித்தர்கள் எப்போதும் கைவசம் வைத்திருப்பார். அப்படியான நவபாஷாணத்தைப் பக்குவப்படுத்திக் கூட்டு மருந்துகளைச் சேர்த்து உண்ணும் விதத்தில் பக்குவப்படுத்தி வைத்திருந்தார்.

அந்த நவபாஷாணத்தினை தண்ணீரில் போட்டு சில மணிநேரம் கழித்து அந்த நீரை நோய்த்தொற்று உடையவர்களுக்குக் கொடுத்தார். தண்ணீரில் போட்டாலும் அந்த நவபாஷாணம் நீரில் கரையாது. ஒரு குண்டுமணி போலவே கிடக்கும்.

நோய்த் தொற்று உடையவர்கள் பூரணமாகக் குணமடைந்தனர். இந்த செய்தி அவ்வூரை மட்டுமல்லாமல் பக்கத்து ஊர்களிலும் பரவவே மக்கள் கூட்டம் சந்திக்கும் இடத்தை நோக்கிப் படையெடுத்தனர்.

அப்படி இருந்த சமயத்தில் பெரும்பாலான நேரங்களில் சித்தர் தியான நிலையிலேயே இருப்பார் அவரை தேடி வருபவர்களுக்குக் குறைகளைக் கேட்டு அதற்கு மருந்தாக மண்ணை அள்ளி அவர்கள் கையில் கொடுப்பார். அதை நெற்றியில் பூசி அவர்களுக்கும் அதை மருந்தாக உட்கொண்டார்கள். தங்கள் நோயும் குறையும் தீர்ந்தது என்று மக்கள் கூறவே மேலும் இந்த செய்தி காட்டுத்தீயாக எங்கும் பரவியது அன்றுமுதல் பெயர் தெரியாத அந்த சாமியார் நவபாஷாண சாமியார் என்றே மக்களால் அழைக்கப்பட்டார். 

தான் வந்த வேலை முடிந்துவிட்டது இனி ஊரிலிருந்து கிளம்புகிறேன் என்று சொல்லிக் கிளம்புகிற சமயத்தில் ஊர் மக்கள் அவரை தடுத்து நிறுத்தி தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே அங்கேயே சிலகாலம் தங்கி வாழ்ந்தார். தன்னை தேடி வருகின்ற பக்தர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தும் அவர்களுக்கு வேண்டிய ஆசிகளை வழங்கியும் வந்தார்.

ஒரு சமயம் சந்தி குப்பம் அருகிலுள்ள மனவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி சித்தரை வந்து சந்திக்க வந்தனர். அவரோ மண்ணை அள்ளி அவர்கள் கையில் கொடுத்து இதையே பிரசாதமாக உண்ணுங்கள் என்று கூறி விட்டுச் சென்றார். அவர்களும் அதைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு உண்டனர். அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டியது. என்ற செய்தியால் மிகப் பிரபலமடைந்தார்.

தான் ஜீவ சமாதி அடையப் போவதை உணர்ந்த சித்தர். ஊர் மக்களை அழைத்து எல்லோரும் சேர்ந்து பச்சரிசி பொங்கலைச் செய்து வாருங்கள் என்று அவர் கூற ஊரில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு கைப்பிடி பச்சரிசி போட்டு பொங்கலைச் செய்து வந்து அவரிடம் கொடுத்தனர். அப்பொழுது அவர் அதை வாங்கி உண்டுவிட்டு இன்னும் மூன்று தினங்களில் நான் சித்தி அடைந்து விடுவேன் என்னைச் சுடுகாட்டில் புதைக்காமல் எரிக்காமல் ஒரு மேடான இடத்தில் என்னை ஜீவசமாதி வைக்கும்படி கூறினார். 

அவர் கூறிய வண்ணமே மூன்று நாட்களில் அவர் ஜீவசமாதி அடைய ஊர்மக்களும் வயல்வெளியில் ஒரு மேடான பகுதியில் அவருக்குச் சமாதியை எழுப்பினர். 

சிலகாலம் ஊர் மக்கள் அவரை சக்தியை உணராமல் அவரை கண்டு கொள்ளாமலும் இருந்தனர். அங்கு மாடு மேய்க்கும் விளையாட்டு சிறுவன் ஒருவன் இவரெல்லாம் பெரிய சாமியாரா?  என்று சொல்லி அந்த சமாதியின் மேல் வைத்து இருந்த இளநீரை தன் காலால் எட்டி உதைக்க அந்த சிறுவனின் கால் இழுத்துக்கொண்டது. கடும் சுரத்தில் படுத்த படுக்கையானான் இதை அறிந்த அவரது பெற்றோர் அவன் செய்த தவற்றை மன்னிக்கும்படி வேண்டி சித்தரிடம் மன்றாடினார் அதன் பிறகு அந்த சிறுவன் குணமடைந்தான்.

இந்த செய்தியைக் கேட்ட ஊர்மக்கள் சுவாமிகளுக்குப் பூஜைகள் செய்தும் அவர் இருந்த சமாதியின் மேல் ஒரு லிங்கத்தை வைத்து வழிபாடும் செய்யத் தொடங்கினர். இப்படியாக அவரைப் பற்றிய செவிவழி கதைகள் உள்ளது.

இதுமட்டுமில்லாமல் மற்றொரு கதையும் உண்டு சுவாமிகள் ஜீவசமாதி அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்களிடம் அந்த நவபாஷாண மணியைக் கொடுத்து இதை வாழைப்பழத்தில் வைத்துச் சாப்பிடும் படி கூறினார். அச்சத்தில் அவர்கள் வேண்டாம் என்று கூற சரி நானே இதை உண்டு விடுகிறேன் என்று கூறி தனே அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார். அதன்பிறகே அவர் ஜீவசமாதி அடைந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு சில வாரங்கள் கழித்து வடலூரிலிருந்து சிலர் இவரைத் தேடி வந்தனர். அப்பொழுது சித்தருக்கான வழிபாட்டு முறைகளின் படி நாங்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி நாள் முழுக்க அங்கே சில பூஜைகளை நடத்திக் கொண்டிருந்தனர். அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடவை துணிகளை அந்த சமாதியைச் சுற்றிக் கட்டி வைத்துவிட்டு உள்ளே அமர்ந்து பூஜைகளைச் செய்து கொண்டிருந்தனர் பகல் பொழுது முழுக்கவும் பூஜைகள் நடந்தவாறே இருந்தன இரவும் தொடர்ந்தது. ஊர் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல யாரும் இல்லாத நேரத்தில் அந்த சமாதியைத் தோண்டி சித்தரை வெளியில் எடுத்து அவர் தொண்டையைக் கிழித்து அதிலிருந்த நவபாஷாண மணியை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கேயே புதைத்து விட்டுச் சென்று விட்டனர். காலையில் வந்து பார்த்த ஊர்மக்கள் மண்மேடு புதிதாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர். 

தொடரும்...
அபி இராவணன்

No comments:

Post a Comment