அபி இராவணன்

Saturday, May 2, 2020

"பழைய நினைவுகள்"

இந்தியச் சிறுகதைகள் (1990-2000)
தொகுப்பாசிரியர் இ.வி. ராமகிருஷ்ணன்,
தமிழில் பிரேம்,
சாகித்ய அக்காதமி வெளியீடு 2011.
விலை. 325.

பழைய நினைவுகளை மனதில் அசை போட முடிகிறது இந்தத் தொகுப்பின் ஊடாக. 
புதுச்சேரி புத்தகக் கண்காட்சியில் இந்நூலை வாங்கினேன். விலை என்னைப் பொறுத்தவரை அதிகம். காரணம் அப்போதெல்லாம் அவ்வளவு பணம் கையில் கிடைப்பது பெரிய விஷயம். அதுவரையில் புனைகதைகளை விரும்பாத நான் தன் வரலாறுகளை மட்டுமே உண்மையான கதைகள், வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் இவற்றை வாசிப்பதுதான் வாழ்க்கைக்கு  உதவும் மற்றபடி யாரோ எழுதும் பொய்யான புனைகதைகளை வாசிப்பதில் என்ன இருக்கிறது என்று நான் எண்ணியதுண்டு. முதன்முதலாகச் சிறுகதைகளை வாசிக்க என்னைத் தூண்டியதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று புனைகதை எழுத்தாளர்கள் பலரை அந்த புத்தகக் கண்காட்சியில் என்னால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. குறிப்பாகப் பிரபஞ்சன், பாவண்ணன் முதலானவர்களை. இரண்டு
நான் மயிலம் தமிழ் கல்லூரியில் பி.லிட் தமிழ் படித்துக் கொண்டிருந்த சூழலில் எனக்கு சமய இலக்கியங்கள் மீதும் இலக்கணங்கள் மீது மட்டுமே அதிக நாட்டம் இருந்தது. அதற்குக் காரணம் நான் பயின்ற கல்லூரி மற்றும் அங்கிருந்த பேராசிரியர்கள். புனைவு இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்தது முனைவர் கா. அய்யப்பன். அவர் ஒரு சமயம் பெருமாள் முருகனுடைய நாவல்களைக் கையில் வைத்திருந்தார். அப்பொழுது புனை கதைகளைக் குறித்து என்னிடம் அவர் நிறையப் பேசிக்கொண்டிருந்தார். அன்று முதல் புனைகதை இலக்கியங்களை வாசித்துத் தான் பார்ப்போமே என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. மற்றுமொரு காரணம் முதுமுனைவர் ஏ. எழிலன்வசந்தன் அவர்கள். கடற்கரையில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து செல்கையில் யாருடைய நூல்களை வாசிக்கலாம் என்று நான் கேட்க அவர் பல எழுத்தாளர்களையும் அவர்கள் படைப்புகள் பற்றி கூறினார். குறிப்பாக ஓஷோவின் நூல்களையும் வாசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். (அப்போது நான் வாங்கிய நூல் காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற நூல் வாங்கி படித்தேன்.) நான் கவிதை எழுதுவேன் ஐயா என்றதற்கு நீ சிறுகதை எழுதலாமே அதற்கு நல்ல வரவேற்பு உண்டு என்றார். அதுமுதல் என்னைப் புனைகதை வாசிக்கவும் எழுதவும் தூண்டியது. மேலும் கீழைத்தேய பிரெஞ்சிந்திய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுவரும் முனைவர் தி. இராஜரெத்தினம் அவர்களும் நானும் பல முறை நவீன புனைகதை எழுத்தாளர்கள் குறித்தும் குறிப்பாக எழுத்தாளர் ஜெயமோகன் குறித்தும் நிறையப் பேசி இருக்கிறோம். இவர்களின் சந்திப்பிற்குப் பிறகு பிரெஞ்சு பேராசிரியர் சு. ஆ. வெங்கட சுப்பராய நாயகர் அவர்கள் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த 'அப்பாவின் துப்பாக்கி' நாவலை வாசித்த பிறகு மொழிபெயர்ப்பு புனைகதைகள் மீதும் காதல் ஏற்பட்டது. பின்பு ஐயா அவர்களுடன் நிறைய உரையாடல்கள் அவரின் இல்லத்தில் நடந்திருக்கிறது.
தமிழ் இலக்கிய உலகில் புதுச்சேரியைச் சார்ந்த பிரபஞ்சனை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரிடம் இந்த தொகுப்பைக் காட்டி அதில் அவரின் கையெழுத்தைக் கேட்டபோது (இந்தியச் சிறுகதைகள்) அவர் கூறிய வார்த்தைகள் இவை "மிக முக்கியமான ஒரு தொகுப்பு வாசிக்க வேண்டிய நூல் தொடர்ந்து படியுங்கள்" என்று கூறி அதில் கையொப்பமிட்டுக் கொடுத்தார். 
முதல் பகுதி-1 1900 முதல் 1950 வரை பகுதி-2 1951 முதல் 2000 வரை எழுதப்பட்ட கிட்டத்தட்ட 21 மொழிகளின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாகப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ்ச் சிறுகதை அழியாச்சுடர் - மௌனி. பகுதி இரண்டில் இடம் பெற்ற ஒரே ஒரு தமிழ்ச் சிறுகதை கொலை - ஆசிரியர் வாஸந்தி. இந்த இரண்டு சிறுகதைகள் மட்டுமே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்ச் சிறுகதைகள். அதில் குறிப்பாக மௌனியின் சிறுகதைகள் புனைகதை உலகில் தனக்கான ஒரு தனித்த இடத்தை பெற்றது. இதற்கு முன்பே நான் ஒரு முறை இந்த சிறுகதையை வாசித்ததாக நினைவு. இரண்டாவது கொலை என்ற சிறுகதை அப்படி என்னதான் சிறப்பு? தமிழில் எத்தனையோ நூறு சிறுகதைகள் இந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பாக இந்த இரண்டு மட்டும் இடம் பெற என்ன காரணம் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. இருப்பினும் இந்த இரண்டு கதைகளில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம் என்ற ஒரு ஆவலில் வாசிக்கத் தொடங்கியதுதான் என் முதல் புனைகதை வாசிப்பு பயணம். மறக்க முடியாத நாட்கள். 
முனைவர் பட்ட ஆய்வை நான் டெல்லியில் செய்து கொண்டிருந்த சமயத்தில் சாகித்ய அகாதெமி விழாவில் கலந்துகொள்ளப் பிரபஞ்சன் அவர்கள் அப்போது டெல்லி வந்து இருந்தார். அவரிடம் இந்த நினைவுகளைக் கூறி பேசும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தில்லியில் உள்ள ஆல் இந்தியா வானொலியில் எழுத்தாளர் பிரபஞ்சனை நேர்காணல் செய்ய எனது நெறியாளர் முனைவர் சந்திரசேகரன் அவர்களுடன் நானும் சென்று இருந்தேன். தமிழ்நாடு உணவகத்தில் காலையில் சந்தித்தோம். என் நெறியாளர் அவர்களும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் நெருக்கமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். இடையில் அமைதியாக அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். காலை உணவு அங்கேயே முடித்துவிட்டு அதன் பிறகு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பிரபஞ்சன் பேசுவதாக இருந்தது மறுநாள் தில்லி ஆல் இந்தியா வானொலியில் பிரபஞ்சினைப் பேட்டி எடுக்கும் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வைப் பதிவு செய்யும் பொறுப்பு என்னிடம் என் நெறியாளர் கொடுத்திருந்தார். அதற்கு முன்பு அவரைப் பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் எழுத்தாளர் பிரபஞ்சனிடம் என்னவெல்லாம் கேட்கலாம்  குறிப்பாகக் காலனிய சூழலில் புனைகதை குறித்துப் பேசலாம் என்று நானும் என்  நெறியாளரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பிரபஞ்சனைப் பற்றிய எழுத்துப்பூர்வமாக சில குறிப்புகளை எழுதி வரும்படி எனக்கு என் நெறியாளர் அறிவுறுத்தி இருந்தார். அன்று 45 நிமிடத்திற்கும் மேல் தன்வரலாறு, புனைகதைகளின் களங்கள், மற்றும் காலனியச் சூழலில் புனைகதைகளின் இலக்கியப் போக்குகள் குறித்து மிக விரிவான ஒரு உரையை வழங்கினார் பிரபஞ்சன். என் நெறியாளரின் அற்புதமான வினாக்கள் தொடுக்க அதற்குப் பிரபஞ்சன் தொடர்ந்து பல செய்திகளைக் கூறிக்கொண்டே இருந்தார் 45 நிமிடம் என்பது கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரம் ஆனது. அனைத்தையும் வானொலி நிலையத்தில் பதிவு செய்தனர் நானும் என் கைப்பேசியில் பதிவு செய்தேன்.

(தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் பிரேம் அவர்களுக்கு நன்றி)

அபி இராவணன்

No comments:

Post a Comment