அபி இராவணன்

Thursday, May 28, 2020

"சிதம்பர நினைவுகள்"

"சிதம்பர நினைவுகள்"

மலையாளம் மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

தமிழில்: கே.வி ஷைலஜா

நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். கடவுள் பற்றிய சிந்தனையோடு தனிமையில் அமர்ந்து கொண்டு யோசிக்கும் ஒருவனைப் போல நான் சிதம்பரம் நினைவுகளை இப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்த புத்தகம் வாசிக்க எனக்குக் கிடைத்தது என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நிச்சயம் இதை வாசிக்காமல் நான் கடந்து போயிருந்தால் என்னவோ எனக்குத் தான் இழப்பு. ஏதோ ஒரு புண்ணிய பலனால் நூலை வாசித்து முடித்துவிட்டேன். இரண்டு நாட்களாகவே எந்த புத்தகத்தையும் வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. எத்தனை முறை புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டிக் கொண்டு இருந்தாலும் மனம் எதனுள்ளும் உள்ளே நுழைய மறுத்து நின்றது. 
பகல் பொழுது முழுக்க கோடை வெப்பத்தில் களைத்துப் போயிருந்த மனம் இரவில் விழித்து இருந்தபோது கையில் எடுத்து வாசிக்கத் தூண்டியது. எங்கிருந்தோ வந்த ஒர் அற்புத உணர்வுடன் வாசிக்கத் தொடங்கினேன்... வாசிக்கத் தொடங்கினேன்... மீண்டும்...வாசித்துக் கொண்டே இருந்தேன்.... உள்ளே செல்ல செல்ல ஏதுமற்ற ஒரு மனநிலையோடு நாமே பாதிக்கப்பட்ட ஒரு உணர்வோடு நிகழ்வில் நாமே வாழ்ந்து கொண்டிருப்பது போல ஒர் உணர்வு. 
சில நேரங்களில் கண்களில் வழியும் நீரை இடது கையால் துடைத்துக் கொண்டு பல நேரங்களில் மூர்ச்சையாகி கனத்த இதயத்துடன் அன்பு செலுத்தியவர்களை விட்டுப் பிரிந்த தறுவாயில் உள்ள ஒரு மனநிலையோடு ஒவ்வொரு பகுதியையும் கடந்து செல்கையில் மனம் தனிமையை உணர்ந்தது. ஏதுமற்ற ஒரு சூன்யம் என்னைச் சூழ்வதை என்னால் உணரமுடிந்தது.

யதார்த்த வாழ்வில் காமம், காதல், வலி, பிரிவு, பாசம், மரணம் எனக் கடந்து செல்கையில் இவற்றில் ஒன்றையேனும் வாசிப்பவர் நிச்சயம் வாழ்வில் அனுபவித்த இருப்பார். அதை நாமே நம் மனத்திரையில் காணும்பொழுது ஒருகணம் உயிர் உருகி கண்களில் வெளியே சிந்து விடும் என்று தோன்றும் மனநிலை. எல்லாவற்றையும் கடந்து வாழ்வின் கதையை எழுதுவது அவ்வளவு சுலபமானது அல்லது எல்லோராலும் செய்யக்கூடியதும் அல்ல பெரிய காரியம் அது. இப்படி வாழ முடியுமா? அப்படி வாழ்ந்த மனிதனை ஒரு நிமிடம் நினைத்தால்... ஐயோ நினைக்கவே கொடுமை... பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உண்மையில் கவிஞர் மட்டுமல்ல அவர் நம் மனங்களின் மனசாட்சி சில நேரம் நாமே பாலச்சந்திரனாக வாழ்ந்திருக்கிறோம் என்ற ஒரு மனநிலையில் இருக்கும்போது. என்னை உண்மையில் புரட்டிப் போட்டுவிடுகிறது இதை வாசிக்கையில். எந்த ஒரு நூலும் வாசகனை அடித்துப் பிழிந்து துவைத்துக் காயப்போடும் என்றால் அது உண்மையில் மனசாட்சியின் குரலாகத்தான் இருக்கும். அப்படியான படைப்பில் மிக முக்கியமானது "சிதம்பர நினைவுகள்" வாழ்வில் ஒரு முறையேனும் இந்த புத்தகத்தை நாம் வாசித்துக் கடந்து விட வேண்டும். ஏன் என்றால் நம்மால் நம் கதையை இவ்வாறு எழுதும் வாய்ப்பு கிட்டாமல் போகலாம் மேலும் ஒவ்வொரு படைப்பிலும் நம் மனத்தின் பிரதிபலிப்பை நாம் உணர முடியும் என்றாலும் உண்மையில் அதர்க்கும் ஒரு படி மேலே சென்று நம் ஆத்மாவை மீண்டும் ஒருமுறை புனித நீரில் கழுவி நம்மை மனிதனாக்குகிறது இந்நூல். வாசிப்பவர்கள் ஒரே குரலில் இப்படிச் சொல்வார்கள் மொழிபெயர்ப்பு என்று கூறும் நிலையிலிருந்து விலகி தனித்தன்மையோடு எளிய நடையோடு விளங்குகிறது இம் மொழி பெயர்ப்பு. மேலும், எல்லா உணர்வுகளையும் ஒரே சீரான எழுத்தில் விரசமின்றி ஆடம்பர கூச்சலின்றி ஒரு காதலன் தன் காதலியை அணுகுவது போல மிக யதார்த்தமாக அழகான அதேவேளையில் அதுவரை அறியாத  ஏதோ ஒரு உணர்வை இம்மொழி பெயர்ப்பில் கலந்து கதையைக் கொண்டு செலுத்தியதை உணரமுடிகிறது. இது இவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளது. ஷைலஜா அவர்கள் மேலும் இப்பணியில் தொடரவேண்டும் அவருக்கு எல்லா நிலையிலும் துணையாக இருப்போம் வாழ்த்துக்கள் கூறுவோம்.

#அபி இராவணன்

No comments:

Post a Comment