டெல்லி புறப்பாடு -1
இரவு மணி பத்து. விடுதியின் வாசலில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர் சிலர். நானும் சேர்ந்து கொள்ளலாம் என்று மெதுவாக அவர்கள் பக்கத்தில் சென்றேன். அது ஒரு டிசம்பர் மாதம். அளவிற்கு அதிகமான குளிர்.
எந்த ஆண்டு இல்லாத அளவுக்குக் குளிர் என்று நண்பன் ஒருவன் மதியம் உணவு சாப்பிடும் போது கூறி இருந்தான். நெருப்பு காட்டுத் தீயைப் போல மிகுந்த சத்தத்துடன் வெடித்து எரிந்து கொண்டிருந்தது. அதில் காய்ந்து போன மரக்கட்டைகள் பெரிய பெரிய அளவிலான துண்டுகள் எரிந்து கொண்டிருந்தன. குளிரிலிருந்து காத்துக்கொள்ள அந்த வெப்பம் இதமாய் இருந்தது. கழுத்தில் சுற்றியபடி துண்டும் தொங்கிக்கொண்டு இருந்தது. உடல் முழுவதும் மிகப்பெரிய கம்பளி போர்வை மேலும் சூட்டை அதிகப்படுத்தி கதகதப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ சிலர் இன்னும் சில மரக்கட்டைகளை எடுத்து வந்து அந்த தீயில் போட்டுவிட்டு என் பக்கத்தில் அமர்ந்தனர். முன்பின் தெரியாதவர்கள் என்றாலும் எதையும் பேசிக்கொள்ளாமல் அனைவரும் ஒன்று சேர அந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம். இரவு பதினொன்றரை மணி. "ராஜு பாய்" கடையில் சூடாக டீ குடித்து விட்டு வரலாம் என்று எழுந்து நடக்கத் தொடங்கினேன். தனியாகப் போவதற்குப் பதிலாக என் காதலியையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்று எண்ணி அவள் கை பேசி எண்ணிற்கு அழைத்தேன். அவளும் வருவதாகச் சொன்னாள். இருவரும் சேர்ந்தே சென்றோம். டீ வாங்கிக் கொண்டு விடுதியின் முகப்பில் ஒரு படிக்கட்டில் அமர்ந்து கொண்டோம். கையில் சூடான டீ அந்த குளிரில் மிக இதமாகத் தொண்டையில் இறங்கியது. மீண்டும் எழுந்து ஒரு சிறிய நடைப்பயிற்சிபோல எங்கள் விடுதி தாண்டி வளைந்தும் குறுகியும் செல்லக்கூடிய பாதை வழியாக நடந்துகொண்டு இருந்தோம். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்ததில் மகிழ்ச்சிதான். "எப்போ வீட்ல சொல்லப்போற நம்ம லவ்வ" என்று கேட்டாள். கூடிய சீக்கிரம் நேரம் பார்த்துச் சொல்கிறேன் என்றேன். மீண்டும் அமைதியாக நடையைத் தொடர்ந்தேன். அது வரையில் எதுவும் பேசாமல் அமைதியாக மீண்டும் நடந்தே விடுதியை வந்தடைந்தோம். அவள் என்னிடம் வேறு ஏதாவது பேசி இருக்கலாம் என்று தோன்றியது. அன்று நடந்த ஆய்வரங்கத்தில் நான் வாசித்த கட்டுரையைப் பற்றி அவள் பேசி இருக்கலாம் என்று மனதிற்குள் மீண்டும் நினைத்தேன். ஆய்வரங்கத்தில் காரசாரமான விவாதங்கள் அதைப்பற்றி எதுவும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல். அவள் வந்தது மனதிற்குள் கொஞ்சம் கோபம்தான். ஏனென்றால் என்னுடன் ஆய்வு செய்யக் கூடிய மூத்த மாணவர்கள் என்னிடம் சண்டை போடும் தோரணையில், தொனியில் பேசியது அவளைச் சிறிதும் தொந்தரவு செய்யவில்லை. அதில் என் தரப்பு வெற்றி என்றாலும் அவள் பேச்சில் அது பெரிய விஷயமாகப் படவில்லை. என்பதைப் புரிந்து கொண்டேன். அவளை அவள் விடுதியில் விட்டு விட்டு என் விடுதி நோக்கி வந்து கொண்டு இருந்தேன். அன்றிரவு நான் உறங்குவதற்கு நேரம் 3 மணி ஆனது.
No comments:
Post a Comment