அபி இராவணன்

Sunday, May 9, 2021

டெல்லி புறப்பாடு - 2

புறப்பாடு - 2

சக்தி சமையல் செய்வதற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். இரவு சாப்பாட்டுக்கு சிக்கன் குழம்பு செய்ய அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தான். 

ஒரு குடும்பத்திற்கான அனைத்து மளிகை சாமான்களையும் ஒரு அட்டைப்பெட்டியில் பார்த்தேன். முழுநேரமும் சமையல் செய்யப் போகிறானோ என்ற ஐயம் எனக்கு. சமையல் செய்வதில் கெட்டிக்காரன். 
முன்பு ஒருமுறை இவனது சமையலை ருசி பார்த்திருக்கிறேன். இந்த முறை சிக்கன் குழம்பும், சிக்கன் 65யும் செய்திருந்தான். 
நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுச் சமையல் சாப்பிட்டது போலிருந்தது. விடுதியில் கடுகு எண்ணெய்யில் சமைக்கப்பட்ட உணவுகள் அவ்வளவு ருசியாக இல்லை. நெருப்பில் சுடப்பட்ட ரொட்டிகளும் அதற்கான டாலும் அரைவேக்காட்டு தனமான அரிசியைச் சாப்பிட்டு வாயும் வயிறும் நல்ல உணவிற்கு ஏங்கிக் கொண்டிருந்த காலம் அது. இரவு சாப்பிட்டுச் சிறப்பாக முடிந்தது. பின் நீண்ட நேரம்  பல கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தோம். இரவு 12 மணி ஆகிவிட்டது. "கங்கா தாபா" வரை நடந்து சென்று இரண்டு மொசம்பீ வாங்கி குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு சிமெண்ட் கட்டையில் அமர்ந்து கொண்டு கைப்பேசியைப் பார்த்தபடியே சிறிது நேரம் இருந்தோம். பகல் முழுவதும் தூங்கிக் கழித்ததால் இரவில் தூங்கவில்லை. அதற்கு முந்தைய நாளும் இரவு முழுவதும் தூங்காமல் பேசிக்கொண்டு இருந்ததுதான் காரணம்.  நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் விடுதியில் நடந்த சில சுவாரஸ்யமான கிளுகிளுப்பான சம்பவங்கள் பற்றியும் மெஸ்ஸில் சாப்பிடும் பொழுது நடந்த சம்பவங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது எங்கள் வழக்கம். ஒரு சமயம் சக்தியின் அறைத்தோழன் ஒரு பெண்ணை அழைத்து வந்து அறையில் தங்கியிருந்ததை பற்றி சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு இருந்தான். விடுதியில் இதுபோல் பலரும்  வந்துவிட்டுப் போனதைச் சொல்லிக்கொண்டிருந்தான். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த எங்களுக்கு இது எல்லாம் மிகப் புதிதாகவே இருந்தது. ஆண்களின் விடுதிக்குப் பெண்கள் வருவது பற்றி நாங்கள் வியந்து பேசிக்கொண்டு இருந்தோம்.
அன்று இரவு முழுவதும் பல கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். காரணம் நாங்கள் விடுதியில் சேர்ந்து ஒருவருடம் கூட ஆகியிருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆண் கல்லூரி விடுதிகளுக்குப் பெண்கள் வருவதெல்லாம் நடக்காத காரியம். ஆனால் இங்கோ பெண்கள்  சர்வசாதாரணமாக வருவதும் இரவு முழுக்க தங்குவதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. நீண்ட நாட்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டும் இருந்தோம். அதுமட்டுமல்ல இங்குப் பெண்கள் மிக சர்வ சாதாரணமாக ஆண் நண்பர்களோடு பொது இடங்களில் புகை பிடிப்பதும் விடுதிகளுக்கு வந்து தங்கி மது அருந்துவதையும் பார்த்து இருக்கிறோம். இதெல்லாம் புதிதாகவே இருந்தது எங்களுக்கு. பிறகு அது பழகிப்போனது வேறு கதை.

No comments:

Post a Comment