அபி இராவணன்

Sunday, May 16, 2021

லாக்கப்

லாக்கப்
மு.சந்திரகுமார்
2ஆம் பதிப்பு 2018

தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உந்துதலால் லாக்கப் நாவலை 
எதிர்ச்சியாக ஓர் இரவில் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அந்த லாக்கப் அறையில் நானும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டேன். சில பக்கங்கள் கடந்ததும் குமார், மொய்தீன், ரவி இவர்களுடன் நானும் எந்த தப்பும் செய்யவில்லை. என்றாலும் ஒவ்வொரு வினாடியும் அவர்களுடன் போலீஸில் 
வாங்கிய அடி உதையால் வலி தாங்காமல் சுருண்டு கிடந்தோம். அப்படியான ஒரு  அனுபவம் இந்த வாசிப்பில் கிடைத்தது. இச் சூழலில் எப்படிப்பட்ட ஓர் உணர்வு தோன்றுமோ அப்படி இருந்தது. அன்று எனக்கு. ஒரு நாளுமில்லாத அளவிற்கு இரவு நீண்டு போனது. வாங்கிய அடி உதைகள் கொஞ்சம் நஞ்சமில்லை. அவ்வளவும் மனதில் ஏற்படுத்திய பாதிப்புகளை எளிதில் கடந்து போக முடியாது. உண்மையில் லாக்கப் 
அப்படியானது தான். சிறையின் அனுபவம் பற்றிய குறிப்பாக இந்த நாவலைக் கடந்து போக முடியவில்லை. வெளியுலகிற்கு இன்னமும் இதுபோல ஆயிரம் கதைகள் சொல்லப்படாமல் மிக இரகசியமாக உள்ளன. மனிதர்கள் ஏன் தவறு செய்கிறார்கள்? சமுதாயம் சொல்லும் ஒழுக்கம் உண்மையில் யாருக்கும் மட்டும் சொல்லப்படுகிறது. காவல் நிலயத்தின் தேவை அல்லது அவசியம் என்ன? மனித உரிமைகள் மீறல்கள் குறித்துப் பேசும் அருமையான நாவல். சகித்துக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களை இந்நாலில் நீங்கள் வாசிக்கையில் கடந்து போவீர்கள். மூத்திரவாடையும் வியர்வை பிசுபிசுப்பும் பீீீடி புகையுமாக....

ஆந்திராவில் குண்டூரில் வாலாஜா பேட்டை காவல் நிலையத்தில் அப்பாவி நால்வர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் கதை. அப்பாவி தமிழர்கள் அரைகுறை தெலுங்கில் பேசி எதையும் புரியவைக்க முடியாமல் செய்யாத தவறுக்காக அவர்கள் பட்ட துயரம் சொல்லி அடங்காது. உறவுகள் யாருமற்ற அனாதையாக வாழும் இவர்கள் வாழ வழியில்லாமல் ஊரைவிட்டு ஓடிப்போனவர்கள் இவர்கள்.

கடவுள் யாரையும் கை விடுவதில்லை என்று இவர்கள் நால்வரிடம் சென்று கூறினால் சிரித்துக் கொண்டே உங்களைப் பைத்தியம் என்று நினைப்பார்கள்.  வாழ்க்கையில் உண்மையான அனுபவமே கடவுள். அப்படியான அனுபவம் பெற்ற ஒருவன் இந்த நாவலைக் கடந்து பின்னர் உணர்வான். சிறைச்சாலை நமக்கு வேறு உலகத்தையும் வேறு அனுபவத்தையும் கொடுக்கும். எப்படியான மனநிலையில் ஆசிரியர் இதை எழுதும் போது  இருந்ததிருக்க வேண்டும். 

இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அனேகமாக இவர்கள் தான் என்று எண்ணத் தோன்றும் படியாக இருக்கிறது.

வாழ்க்கையை வாழ எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கிறது அப்பாவி மனிதர்களால். வாழ்வின் எல்லா பக்கங்களிலும் துன்பத்தை வாசித்தவன் அனேகமாக இந்த லாக்கப்பில் இருந்தவனக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

மனதைக் கிழித்துக் கொண்டு வெளியேறும் உணர்வுகளைப்  பெரும்பாலும் இந்த பக்கத்தில் நீங்கள் காணலாம். ஐயோ... அம்மா... அப்பா சார் வலிக்குது எனக்கு எதுவும் தெரியாது. என்ற வார்த்தைகள் நம்மைச் சுற்றி இருக்கும் சுதந்திரத்தை,போலித் தனத்தையும் வாழ்வின் மீதான அவநம்பிக்கை தோல் உரித்து  காட்டிவிடும். நாவல் விசாரணையில் தொடங்கி, ஒரு சமூகத்தின் மீது காட்டமாக விசாரணையை நிகழ்த்த வேண்டும் என்ற மனுவோடு நிற்கிறது.

சாதாரண எளிய மக்களின் பக்கம் நின்று பேச ஒரு வாய்ப்பும் இல்லாத சூழலில் இருப்பவர்களுக்கு எழுத்தைத் 
தவிர உண்மையான ஆறுதலை யாராலும் கூற முடியாது. எழுத்து மட்டும் தான் எளிய மக்களுக்கு இருக்கின்ற ஓரே நம்பிக்கை என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. வேறு வழியே இல்லை. அதிகாரம் அழுத்தி நசுக்கி வாழ வழி இல்லாத நிலையில் நம்மை  கொண்டு நிறுத்தும் போது எழுத்து ஒன்றுதான் நம்மைக் காக்கும் ஆயுதம்.

மனித உரிமை மீறல்கள் தொடர்கதையாக ஒரு பக்கம் நிகழ, அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் போராட்டங்களும் இம்மாதிரியான படைப்புகளும் தோன்றுவது காலத்தின் கட்டாயம்.

நாவலை வாசித்து முடித்ததும் பாவம் அவர்கள் என்று சொல்லிவிட்டு மூடி வைத்தேன். வேறு எந்த ஒரு எண்ண ஓட்டங்களும் இன்றி சில மணி நேரம் அதைப் பற்றி மட்டுமே யோசித்துக் 
கொண்டிருந்தேன். லாக்கப் 
மிகக் கொடூரமான இடம். மனித மூளையில் எந்த அறையில் இந்த லாக்கப் அறை உதித்தது என்று யோசித்துப் பார்த்தேன். 

Wednesday, May 12, 2021

டெல்லி புறப்பாடு -8

டெல்லி புறப்பாடு -8

நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். கடவுள் பற்றிய சிந்தனையோடு தனிமையில் அமர்ந்து யோசிக்கும் ஒருவனைப் போல நான் சிதம்பர நினைவுகளை இப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்த புத்தகம் வாசிக்க எனக்குக் கிடைத்தது என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நிச்சயம் இதை வாசிக்காமல் நான் கடந்து போயிருந்தால் என்னவோ எனக்குத் தான் இழப்பு அதிகம். ஏதோ ஒரு புண்ணிய பலனால் வாசித்து முடித்துவிட்டேன். இரண்டு நாட்களாகவே எந்த புத்தகத்தையும் வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. எத்தனை முறை புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டிக் கொண்டு இருந்தாலும் மனம் எதனுள்ளும் உள்ளே நுழைய மறுத்தது நின்றது. பகல் பொழுது முழுக்க கோடை வெப்பத்தில் களைத்துப் போயிருந்த மனம் இரவில் விழித்து இருந்தது. கையில் எடுத்து வாசிக்கத் தூண்டியது. எங்கிருந்தோ வந்த ஓர் அற்புத உணர்வு. வாசிக்கத் தொடங்கினேன்... வாசிக்கத் தொடங்கினேன்... மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்.... 
உள்ளே செல்ல செல்ல ஏதுமற்ற ஒரு மனநிலையோடு நாமே பாதிக்கப்பட்ட ஒரு உணர்வோடு நிகழ்வில் நாமே வாழ்ந்து கொண்டிருப்பது போல ஓர் உணர்வு. சில நேரங்களில் கண்களில் வழியும் நீரை இடது கையால் துடைத்துக் கொண்டு பல நேரங்களில் மூர்ச்சையாகி கனத்த இதயத்துடன் அன்பு செலுத்தியவர்களை விட்டுப் பிரிந்த தருவாயில் உள்ள ஒரு மனநிலையோடு ஒவ்வொரு பகுதியையும் கடந்து செல்கையில் மனம் தனிமையை உணர்ந்தது. ஏதுமற்ற ஒரு சூனியம் தம்மைச் சூழ்வதை உணரமுடிந்தது. 
யாரோ அறையின் கதவைத் தட்டுவது போல் இருந்தது எழுந்து சென்று கதவைத் திறந்தேன். என் அறைத் தோழனின் நண்பன் ஒருவன் வந்திருந்தான். இருவரும் அந்த நள்ளிரவில் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். என் கவனம் முழுவதும் இந்த புத்தகத்தின் மீது இருந்தது. சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்தவன் தன்னுடைய கைப்பேசியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் கிளம்பினான் எங்கு செல்கிறான் என்று எதைப் பற்றியும் கவலை இல்லாமல் அமர்ந்திருந்தேன். மீண்டும் தொடர்ச்சியான வாசிப்பில் நான் மூழ்கிப் போனேன். சட்டென்று கைப்பேசியில் நேரம் பார்த்தேன் இரவு ஒரு மணி. நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டி விட்டு. நூலகத்திற்குச் செல்லலாம் என்று கிளம்பினேன். விடுதியை விட்டு வெளியே வந்ததும் சாலைகளில் நாய்களின் நடமாட்டம் இருந்தது. அந்த இரவில் கையில் ஒரு புத்தகத்துடன் வேகமாக நடந்து கொண்டிருந்தேன் என்னைச் சூழ்ந்த இருளில் சாலையோர விளக்குகள் மஞ்சள் வெளிச்சத்துடன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. எதிரில் நூலகத்திலிருந்து விடுதியை நோக்கிச் செல்லும் மாணவர்களைப் பார்த்தேன். இந்த நேரத்திற்குச் சென்றால் மட்டும் தான் அங்கு அமர்வதற்கு இருக்கைகள் கிடைக்கும் மற்ற நேரங்களில் எப்பொழுதுமே கூட்டமாகவே இருக்கும். நூலகத்தின் தரைதளத்தில் வந்த பிறகு என் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளே சென்றேன். அந்த நள்ளிரவிலும் கூட அமர்வதற்கு ஒரு சில நாற்காலிகள் காளியாக இருந்தன. அதில் போய் அமர்ந்தேன். யாரும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்து விட்ட பக்கத்திலிருந்து வாசிக்கத் தொடங்கினேன் அது மட்டும் தான் நினைவிருக்கிறது. மீண்டும் புத்தகத்தில் மூழ்கிப் போனேன் என்ன வாசித்தேன் என்ன செய்து கொண்டிருந்தேன் எந்த பிரச்சினையும் இன்றி வாசித்த அனுபவத்தைப் பதிவு செய்கிறேன்.
"சிதம்பர நினைவுகள்"

மலையாளம் மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

தமிழில்: கே.வி ஷைலஜா

யதார்த்த வாழ்வில் காமம், காதல், வலி, பிரிவு, பாசம், மரணம் எனக் கடந்து செல்கையில் இவற்றில் ஒன்றையேனும் வாசிப்பவர் நிச்சயம் வாழ்வில் அனுபவித்து இருப்பார். அதை நாமே நம் மனத்திரையில் காணும்பொழுது ஒருகணம் உயிர் உருகி கண்களில் வெளியே சிந்து விடும் என்று தோன்றும் மனநிலை. எல்லாவற்றையும் கடந்து தன் வாழ்வின் கதையை எழுதுவது அவ்வளவு சுலபமான அல்லது எல்லோராலும் செய்யக்கூடிய காரியமில்லை. இப்படி வாழ முடியுமா? வாழ்ந்த மனிதனை ஒரு நிமிடம் நினைத்தால்... ஐயோ நினைக்கவே கொடுமை... பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உண்மையில் கவிஞர் மட்டுமல்ல அவர் நம் மனங்களின் மனசாட்சி சில நேரம் நாமே பாலச்சந்திரனாக வாழ்ந்திருக்கிறோம் என்ற ஒரு மனநிலையில் இருக்கும்போது. என்னை உண்மையில் புரட்டிப் போட்டுவிடுகிறது இதை வாசிக்கையில். எந்த ஒரு நூலும் வாசகனை அடித்துப் பிழிந்து துவைத்துக் காயப்போடும் என்றால் அது உண்மையில் மனசாட்சியின் குரலாகத்தான் இருக்கும். அப்படியான படைப்பில் மிக முக்கியமானது "சிதம்பர நினைவுகள்" வாழ்வில் ஒரு முறையேனும் இந்த புத்தகத்தை நாம் வாசித்துக் கடந்து விட வேண்டும். ஏன் என்றால் நம்மால் நம் கதையை இவ்வாறு எழுதும் வாய்ப்பு கிட்டாமல் போகலாம் மேலும் ஒவ்வொரு படைப்பிலும் நம் மனத்தின் பிரதிபலிப்பை நாம் உணர முடியும் என்றாலும் உண்மையில் அதற்கும் ஒரு படி மேலே சென்று நம் ஆத்மாவை மீண்டும் ஒருமுறை புனித நீரில் கழுவி நம்மை மனிதனாக்குகிறது இந்நூல். வாசிப்பவர்கள் ஒரே குரலில் இப்படிச் சொல்வார்கள் மொழிபெயர்ப்பு என்று கூறும் நிலையிலிருந்து விலகி தனித்தன்மையோடு எளிய நடையோடு விளங்குகிறது. மேலும், எல்லா உணர்வுகளையும் ஒரே சீரான எழுத்தில் விரசமின்றி ஆடம்பர கூச்சலின்றி ஒரு காதலன் தன் காதலியை அணுகுவது போல மிக யதார்த்தமாக அழகான அதேவேளையில் அதுவரை அறியாத  ஏதோ ஒரு உணர்வை இம்மொழி பெயர்ப்பில் கலந்து கதையைக் கொண்டு செலுத்தியதை உணரமுடிகிறது. இது இவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளது. ஷைலஜா மேலும் இப்பணியில் தொடரவேண்டும் அவருக்கு எல்லா நிலையிலும் துணையாக இருப்போம் வாழ்த்துக்கள்.

டெல்லி புறப்பாடு -7

டெல்லி புறப்பாடு -7
மின்விசிறி மிக மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அது ஒரு கோடைக் காலம். அதற்குமேல் தன்னால் சுற்ற முடியாது என்பது போல் மயங்கி கொண்டிருந்தது. நீண்ட நாட்களாகச் சுற்றி வயதாகிப் போன ஒரு வயோதிகனைப் போல் மயங்கி மயங்கிச் சுற்றிக் கொண்டிருந்தது. அறையின் உள்ளே ஜன்னல் கண்ணாடிகளைத் தாண்டி சூரிய வெளிச்சம் எனது அறையில் புதிய வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. காலை 7 மணி இருக்கும் எழுந்து என்னுடைய கட்டில் மீது அமர்ந்து கொண்டேன். என் அறைத் தோழன் காலையிலேயே வெளியே சென்றிருந்தான் நான் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தேன். பல் துலக்கிய பின் நடந்து சென்றேன். காலையில் பிரட் அவித்த முட்டை ஒரு டம்ளர் டீ எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வந்தேன். சாப்பிட்டு முடித்த பின் மடிக்கணினியை எடுத்து வைத்து நேற்று இரவு தட்டச்சு செய்த கட்டுரையை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தேன். இன்று மதியம் இரண்டு மணிக்கு நான் கட்டுரை வாசிக்கப் போகிறேன். வாரத்திற்கு இரண்டு நாள் ஒரு நாள் கட்டுரையும் ஒருநாள் புத்தக மதிப்புரையும் நாங்கள் வழங்கவேண்டும். இங்கு அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை. மதியம் 12 மணி அளவில் என் அறை முழுவதும் வெப்பக் காற்று வீசிக்கொண்டிருந்தது. புழுக்கம் தாங்காமல் வெளியே வந்து நின்று கொண்டேன். மேல் சட்டை எதுவும் அணியவில்லை. கால்சட்டை மட்டும் அணிந்திருந்தேன். சரியாகப் பன்னிரண்டு முப்பது மணிக்குச் சாப்பிடச் சென்ற நான் அதன் பிறகு ஆய்வரங்கு சென்று மாலை நான்கு முப்பது மணிக்கு தான் மீண்டும் அறைக்கு வந்தேன். இதுதான் எனது வாடிக்கை என்றாலும் அன்று மாலை என்றும் இல்லாததாய் ஒரு உணர்வு தனியாக நடந்து கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தின் வளைவுச்சாலையில் நிறையப்பேர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் தனியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஏனோ கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய நாள் இரவு "ஆடிப் பாவை போல" நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி வெறுமையாய் இருந்த நாள் அன்று. அறைத்தோழன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான். மின்விசிறி மயங்கியபடிச் சுழன்று கொண்டிருந்தது. இடையில் கிரீச் கிரீச் என்ற சத்தம் வேறு. எங்கிருந்தோ வந்த ஒரு பதற்றம் என்னை தொற்றிக் கொள்ளவே நான் நாவலில் வாழ்ந்து கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். நானே சிக்கிக் கொண்டது போல ஒரு உணர்வு. அவ்வுணர்வைப் பற்றி இரண்டு பக்கத்தில் எழுதி வைத்தேன். ஒரு நீண்ட அமைதிக்குப் பின் மீண்டும் நினைவு திரும்பி நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே வீட்டைப் பற்றிய நினைவுகள் மனதை அழுத்தி பாரமாக்கிவிட்டு வந்துபோக வாசிப்பு இடை இடையே அறுபட்டு அறுபட்டு ஒரு வழியாக என் கதையோடு கலந்து அந்த நூலையும் வாசித்து முடித்தேன். அந்த நாவலைப் பற்றி இரண்டு வரிகள் இங்குச் சொல்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் நடந்த ஒரு கதை. என்றாலும் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த ஒரு நிகழ்வு அந்த நாவலிலும் இருந்ததைக் கண்டு வியந்தேன். சிறிது நேரத்தில் நான் மனதளவில் சோர்வாகிப் போனேன். எங்கிருந்தோ வந்த துக்கம் என்னைப் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து சில வினாடிகள் மீளமுடியாமல் அசைவற்று இருந்தேன். அந்த உணர்ச்சியை நிகழ்வை இன்று வரையில் மறக்க முடியவில்லை. வீட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவை எதுவும் நிரந்தரமான பிரச்சனை அல்ல என்று எனக்குத் தெரியும். இருந்தும் நூலை வாசிக்கும் போது அது உங்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அல்லது வருத்தமுறச் செய்கிறது அல்லது உங்களுக்கு புதிய உலகத்தைக் காட்டி விட்டுச் செல்கிறது என்றால் அதைவிடச் சிறப்பு வேறொன்றும் இருக்க முடியாது. இதைவிடச் சிறப்பாக ஒரு நாவல் வேற என்ன செய்துவிட முடியும் சொல்லுங்கள். தன்னை சுற்றி அன்பு காட்ட ஒருவர் இல்லாத பொழுது
ஒருவன் காதலில் விழுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? இந்த வாழ்க்கையில். காதலிலிருந்து நாம் பெற்றுக் கொள்வது என்பது மறக்க முடியாத நினைவுகளும், ஆறாத காயங்களும், வலிகளையும் தவிர வேற எதையும் அவற்றால் தர முடியாது என்பதை உணர்ந்த தருணத்தில் வாழ்க்கையின் விளிம்பில் நின்று கொண்டிருப்போம். அப்போதைய அந்தப் புரிதல் அந்த அனுபவம் பயனற்றதாகிவிடும். அந்த ஒரு வினாடியில் மரணத்தைத் தழுவி முடிவை எதிர்நோக்கி இருக்கும் ஒருவனின் கடைசி நொடிபோல ஆகிவிடும். பல முறை முயன்றும் மீளமுடியாத புதைகுழிக்குள் மாற்றிக்கொண்டு பிறகு ஞானம் வந்தால் என்ன அறிவு வந்தால் என்ன எல்லாம் மக்கிய குப்பையே. எத்தனை புரிதல் எத்தனை அனுபவம் எல்லாம் வந்த பிறகு எழுதுவதைக் காட்டிலும் வேற எப்படி இதைக் கடந்துவிட முடியும். அதனாலோ என் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நானே தூசி தட்டி பார்க்கிறேன். எந்த ஒரு வரையறையும் இன்றி முன்பின்னாக நினைவுகளை அடுக்கி எழுதிக் கொண்டே செல்லும் போது எனக்கு நானே நடந்த பல கதைகளைச் சொல்லிக்கொள்கிறேன். மீதமுள்ள வாழ்கையை; முடிந்து போன கதைகளிலிருந்து மீட்டுக் கொள்ள வழி தேடி அலையும் முயற்சியை செய்கிறேன்.

டெல்லி புறப்பாடு - 6

டெல்லி புறப்பாடு - 6
அன்றிரவு ஏனோ எனக்குச் சரியாக உறக்கம் வரவில்லை. என் அறைக்கு எதிரில் உள்ள வராண்டாவில் நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தேன். எனது அரை முதல் மாடியிலிருந்தது. எதையோ யோசித்த வண்ணமே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெரும் கூச்சல் எனது அறையின் எதிரில் உள்ள அறையில் மாணவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என்பது பின்பு தெரிந்தது. ஆண்களும் பெண்களும் கூச்சலும் கும்மாளமும் ஆக மகிழ்ச்சியாக இருந்ததை அவர்கள் எழுப்பிய பேரிரைச்சல் சொல்லியது. பல நேரம் யோசித்ததுண்டு. நல்லவேளை அந்த அறையில் நான் இல்லை. என்னால் இவற்றை எல்லாம் சகித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும். நீண்டநேர கூச்சலுக்குப் பிறகு ஒவ்வொருவராக குளியலறைக்கு ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் கேக் திட்டு திட்டாகப் பூசி இருந்ததைப் பார்த்தேன். பிறந்தநாள் கொண்டாடியவனின் முகம் முழுவதும் கேக் வழித்து விட்டது போலிருந்தது. மூக்கு, வாய், கண், காது என எல்லா இடங்களிலும் அப்பிக் கிடந்தது. கழிவறைக்கு சென்று திரும்பியவர்கள் மீண்டும் ஓடிப் பிடித்து ஒருவர் முகத்தில் ஒருவர் கேக்கை பூசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். இதையெல்லாம் பார்த்தபடியே அமைதியாக கைப்பேசியைப் பார்த்த வண்ணம் அசையாமல் சுவரின் மீது ஒட்டிய பல்லியைப் போலச் சாய்ந்து கொண்டு நின்றிருந்தேன். "பையா" என்று இந்தி பேசும் பீகாரைச் சேர்ந்த "விநய்" என்னை அழைத்தான். ஏற்றெடுத்துப் பார்த்தேன். என் அருகே வந்து இரண்டு துண்டு கோக்குகளைக் கொடுத்துவிட்டுச் சென்றான். வேண்டாமென்று சொல்வதற்குள் என் கையில் வைத்து விட்டான். இரவு மணி 12 க்கு மேல் இருக்கும். கேக்கை கொண்டு போய் என் அறையின் மேசையின் மீது உள்ள தட்டில் வைத்துவிட்டு மீண்டும் வெளியில் வந்தேன். அப்போது ஒரு பெண் என் எதிரில் தோன்றினாள்.  மிக நீளமான கூந்தல் மற்றும் கூரிய மூக்கு நல்ல சிவப்பான நிறம் அதற்கு ஏற்றார்போல மிக நேர்த்தியான ஆடையென பார்ப்பதற்கு மிக அழகான ஒரு பெண். ஏனோ தெரியவில்லை அவளைப் பார்ப்பதற்காகவே நான் மீண்டும் இரண்டு முறை நடந்தேன். என் எதிரில் உள்ள அறையைக் கடந்து சென்றேன். எதைப்பற்றியும் சிந்தனையின்றி நெடுநேரம் நின்றிருந்ததால் கால்கள் சற்று வலிக்கத் தொடங்கியது. அப்படியே நடந்து ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கிச் சமையல் கூடத்திற்கு வந்தேன். அங்கு ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த படியே நடந்து சென்றேன்.  இந்த நள்ளிரவில் அப்படி என்னதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசனையில் நடந்து கொண்டே வெளியில் வந்தேன். இரவு பணியில் காவல் இருக்கும் ஒரு வட இந்தியர் நல்ல உயரம் பார்ப்பதற்கு ஆள் வாட்டசாட்டமாக இருப்பார். நான் ஒவ்வொரு முறையும் அவரை கடந்து செல்லும் பொழுதெல்லாம் என்னை பார்த்து அவர் புன்முறுவலுடன் இந்தியில் விசாரிப்பார். நானும் பதில் சொல்லிவிட்டு வெளியில் சென்று விடுவேன். அன்று இரவு அவர் அரைத் தூக்கத்திலிருந்தார். நான் அவரை கடந்து வெளியில் வந்ததை அவர் கவனிக்கவில்லை. இரவில் எந்த நேரமும் விடுதியிலிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும் மாணவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது. என் விடுதியிலிருந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்தால் "கங்கா தாபா" வந்துவிடும் அங்கு இரவு முழுவதும் கடைகள் திறந்திருக்கும். நீங்கள் நினைப்பது போல அல்ல கடை என்றால் முள் மரங்கள் நிறைந்த ஒரு பகுதி என்றாலும் அமர்ந்து உணவருந்த சிறுசிறு கற்கள் பாறைகள் இருந்தன. இயற்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத சூழல் எத்தனை முறை அங்குச் சென்றாலும் சலிப்பு ஏற்படுவதில்லை எனக்கு. அங்கு எந்த நேரத்திற்குச் சென்றாலும் ஆண்களும் பெண்களும் கூட்டமாக அமர்ந்து எதையாவது வாங்கி சாப்பிட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுவாக அங்குதான் அரசியல் குறித்து பேச்சுகள் அதிகம் நடக்கும். அந்த தேநீர்க்கடையின் அருகே ஒருவர் சிறிய பெட்டிக் கடையை வைத்திருந்தார். அதில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். பார்ப்பதற்குத்தான் அது பெட்டிக்கடை. சிவந்த குண்டான ஒரு மனிதர். குண்டு என்றால் அவ்வளவு குண்டானவரல்ல அவர். அவரை "பிட்டு பாய்"  என்றே பலரும் அழைத்தனர். அவர் எப்போதும் சிரித்த முகத்தோடு அவர் கடையைத் தாண்டி செல்லும் பொழுதெல்லாம் தலையசைப்பார். மாணவர்களின் பெரும்பாலான அன்றாட பொருட்களின் தேவைகளை அந்த பெட்டிக் கடை தான் தீர்த்து வைத்தது. செல்போன் ரீசார்ஜ் முதல் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பாடி ஸ்பிரே, சிறிய பூட்டு, மடிக்கணினி பாதுகாக்கக்கூடிய வயர் லாக் என எது கேட்டாலும் அங்கு கிடைக்கும். சாப்பிடுவதற்குத் தின்பண்டங்கள் என ஒரு மினி டிபார்ட்மென்டல் ஸ்டோர் போல காட்சி அளிக்கும் அந்த பெட்டி கடை. பெட்டிக் கடையைச் சுற்றி தார்ப்பாய் வைத்தான் மூடியிருப்பார். அவரிடம்தான் டெல்லி சென்றதும் எம்.டி.என்.எல் சிம்கார்டு வாங்கினேன். பலமுறை அவரிடம் ரீசார்ஜ் செய்து இருக்கிறேன். ஒருமுறை ரீசார்ஜ் செய்து விட்டு என் பையைப் பார்க்கும் பொழுது பர்சை எடுத்து வர மறந்து விட்டேன். அப்போது அவர் பரவாயில்லை அடுத்த முறை கொடுங்கள் என்று கூறினார். அன்று முதல் எங்கள் இருவருக்குமான ஒரு தொடர்பு உருவானது. "பிட்டு பாய்" கடை அருகில் ஒர் ஆரம்பச் சுகாதார நிலையம் அங்கு இணைய (wifi) வசதி உண்டு. அதனால் மாணவர்கள் அதைச் சுற்றி அமர்ந்து கொண்டு கைப்பேசியில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் எப்பொழுதெல்லாம் "கங்கா தாபா"விற்குச் சொல்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் நண்பனுக்கு போன் செய்து அழைப்பேன். அவனும் வருவான். இருவரும் "வெஜ் ரோல்" இரண்டு "மொசம்பி" அல்லது "டீ". இவற்றில் எதையாவது வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அப்பொழுது எங்கள் பல்கலைக்கழகத்தில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்திருந்த சமயம். 
நம் ஊர்களில் நடக்கும் தேர்தல் போல அவ்வளவு பரபரப்புடன் மாணவர்கள்  அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பார்கள். இரவு முழுவதும் கூட்டங்கள் நடக்கும் மாணவர்கள் யாராவது ஒலிபெருக்கியில் அரசியல் குறித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதுமட்டுமல்ல எங்கள் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடக்காத நாட்களே இல்லை என்று கூறலாம். மாதக்கணக்கில் போராட்டங்கள் தொடர்ந்து இருக்கின்றன. மேலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஒன்றாகக்கூடி பல்கலைக் கழகத்தை எதிர்த்து ஆங்காங்கே கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள். இதற்கு வெளியிலிருந்து பெரும் தலைவர்கள் பெரும் பேச்சாளர்கள் எல்லாம் வந்து பேசிச் செல்வார்கள். ஒரு முறை இந்தி திணிப்பு பற்றி வட இந்தியர்கள் குறிப்பாக சில பேராசிரியர்கள் பேசியது உண்மையில் வியப்பளித்தது. அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண் பேராசிரியர் இந்தியை எதிர்த்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் கலந்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று தமிழில் ஒரு பழமொழி போல ஒன்றை கூறினார் "ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க ஊர் தேவடியா ஹிந்தி" எதற்கு என்று கூறினார். எனக்கு மிகவும் ஆச்சரியம், அதை இந்தியிலும் ஆங்கிலத்திலும் அங்கிருந்தவர்களுக்கு விளக்கிக் கூறினார். வட இந்திய மாணவர்கள் பலரும் கைதட்டியது எனக்கு மேலும் வியப்பை அளித்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை மணி அப்போது இரவு 2.30 இருக்கும் நண்பனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

ரோட்டு ஓரங்களில் குளிர் தாங்க முடியாமல் குப்பைகளுக்கு மத்தியில் தெருநாய்கள் சுருண்டு படுத்து இருந்தன. எனது விடுதிக்கு வந்ததும் வெளியில் அந்த காவலாளியும் மற்றும் சில மாணவர்களும்  நெருப்பில் குளிர் காய்ந்த படியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்து அவர் ஒரு புன்முறுவல் செய்தார். நானும் பதிலுக்கு ஒரு புன்முறுவல் செய்துவிட்டு உள்ளே சென்றேன். என் அறைக்கு வந்ததும் எத்திரிலுள்ள அறையை நோட்டம் விட்டேன். இன்னும் சிலர் வந்திருப்பது தெரிந்தது. இரவு முழுவதும் ஆடலும் பாடலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர். அந்தப் பெண் வராண்டாவில் கையில் சிகரெட்டுடன் நின்றுகொண்டு தன் சக நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாள் ஒவ்வொரு பேச்சுக்கும் இடையில் புகையை உள்ளிழுத்து வெளியே ஊதிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்காகவே இரண்டு முறை நடந்து கழிவறைக்குச் சென்று வந்தேன். இரண்டாவது முறை கழிவறைக்குச் செல்லும் பொழுதுதான் யாரோ ஒருவர் அங்கு வாந்தி எடுத்து வைத்திருப்பதைக் கண்டேன். முகச்சுளிப்புடன் மூக்கை பொத்திக்கொண்டு வந்தேன். அந்த அழகான பெண் என்னை ஒருமுறை ஏறெடுத்து பார்த்துவிட்டு மீண்டும் புகைக்கத் தொடங்கினாள். அவளை ஒரு முறை நூலகத்தின் ஐந்தாவது மாடியில்  பார்த்த ஞாபகம் வரவே அப்போது நடந்த ஒரு சிறு சம்பவம் என் நினைவிற்கு வந்தது. எனது எதிரில் நாற்காலியில் அமர்ந்திருந்தவள். மிகத்தீவிரமாக மடிக்கணினியில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தாள்.  அவளை நோட்டம் விட்டபடியே நான்  எனது நாற்காலியில் அமர்ந்திருந்தேன். இலக்கியம் தொடர்பான நூல்கள் ஐந்தாவது மாடியில் உள்ளன. அங்குத் தமிழ், உருது, ஹிந்தி நூல்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. தமிழ் பகுதிக்குச் சென்று ஏதோ ஒரு நூலைத் தேடிக்கொண்டிருந்த ஞாபகம். ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சி தான். இருந்தாலும் மற்ற மொழிகளுக்கு உள்ள அளவில் தமிழ்ப் புத்தகங்கள் அங்கில்லை. அப்பொழுது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து மேசை மீது அமர்ந்து எனது மடிக் கணினியைத் திறந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் எழுந்து நடந்து செல்லும் பொழுது என்னை அறியாமல் என் கண்கள் அவளைப் பின்தொடர்ந்தன. அவள் பார்ப்பதற்குச் சற்று வித்தியாசமாகத் தோற்றமளித்தாள். தலை முடியை ஒன்றாகச் சுற்றி ஒரு முனிவரைப் போல ஜடாமுடி ஆக ஆக்கி வைத்திருந்தாள். அதுமட்டுமன்றி அவள் கழுத்தில் தெரியும்படியாக பச்சை குத்தியிருந்தாள் கைகளிலும் கூட.மேலே மிகச்சிறிய மேலாடையும் ஒரு ஜீன்ஸ் பேண்டையும் அணிந்திருந்தாள். இரண்டு முறை என்னைக் கடந்து சென்று நூல்களை எடுத்து வந்து அமர்ந்தாள். எனது கண்கள் ஏனோ அவளை மட்டுமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. வேறு எதைப்பற்றியும் மனம் சிந்திக்கவில்லை. அவள் நிச்சயம் வட இந்தியப் பெண் அல்ல  என்று என் மனம் தீர்க்கமாக சொல்லியது. வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் போலத் தோற்றமளித்தாள். அவள் யாருடனோ கைப்பேசியில் பேசும் பொழுது இந்தியிலோ ஆங்கிலத்திலோ பேசவில்லை. வேறு ஏதோ ஒரு மொழிள் பேசிக் கொண்டிருந்தாள் என்பது மட்டும் எனக்கு விளங்கியது. இதற்கு இடையில் ஆய்வுக் கட்டுரையை எழுதுவதற்கு சில புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அன்று மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு  என்னுடைய மடிக்கணினியை எடுத்துக்கொண்டு ஐந்தாவது தளத்திலிருந்து கீழே வருவதற்கு லிப்டில் ஏறினேன். என்னுடன் அவளும் வந்தாள்.  மிக அமைதியாக இருவரும் தரை தளம் வரும் வரை காத்திருந்தோம். கதவு திறந்ததும் அவள் வெளியே சென்றாள். நானும் வெளியே சென்றேன். அதற்குப் பிறகு அவளை ஒரு நாளும் நான் நேரில் சந்திக்கவில்லை.  இப்படி நான் கடந்து போன மனிதர்கள் ஏராளம்.  அவர்களை இனி வாழ்வில் மீண்டும்  எப்பொழுதும் சந்திக்கப் போவதில்லை. சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இன்று அவளின் முகம் கூட எனக்கு சரியாக நினைவில்லை. அந்த ஒளி குறைந்த இருட்டில் ஒரு நிழல் போல அவள் உருவம் மட்டுமே என் நினைவில் ஆடுகிறது.

Tuesday, May 11, 2021

டெல்லி புறப்பாடு -5

டெல்லி புறப்பாடு -5
நான் படித்த பல்கலைக்கழகம் ஒரு பன்முக சூழலைக் கொண்டது. மாணவர்கள் பொதுவாக ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் இருக்கக்கூடிய இலக்கியங்களை ஒப்பாய்வு செய்வதுதான் அவர்களின் ஆய்வாக பெரும்பாலும் இருக்கும் இந்த முறை எங்களுக்கு முன்பிருந்த ஆய்வு மாணவர்களுக்கு ஒரு மூத்த பேராசிரியர் காட்டிய வழியாகும். அதனையே பின்பற்றி அதற்குப் பிறகு வந்தவர்களும் அப்படியே ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும் மாணவர்களுக்கு வழி காட்டவும் செய்தார்கள். அப்படியான சூழலில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, கொங்கணி, உருது போன்ற மொழிகளில் உள்ள இலட்சியங்களைத் தமிழோடு ஒப்பிட்டு எங்களுடைய சக மாணவர்கள் ஆய்வரங்கில் கட்டுரைகளை வாசிப்பது வழக்கம். அப்படி வாசிக்கும் பொழுது புதிய வேற்றுமொழி நாவலாசிரியர்களைப் பலரை அறிந்து கொள்ள ஒரு பெரு வாய்ப்பாக அமைந்தது அப்பொழுதுதான்.அந்த சமயத்தில் தான் தமிழில் உள்ள மிக முக்கியமான நாவல்கள் பற்றியும் சிறிது அறிந்து கொண்டேன். என் நெறியாளர் நவீன இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது வீட்டிற்குச் செல்லும் பொழுதெல்லாம் ஏராளமான தமிழ் நாவல் வாசிப்பு பார்த்து அதிசயித்தேன். அப்போதிலிருந்து நான் கூர்ந்து பார்க்கத் தொடங்கினேன். நாவல்களை வாசிப்பது அது தொடர்பான உரையாடல்களை நிகழ்த்துவது அவருக்கு இஷ்டமான ஒரு பணி. அத்தோடு திரைப்படத்தையும் ஒரு கலை இலக்கிய பார்வையில் விமர்சிப்பது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. எனக்கு ஏனோ திரைப்படத்தின் மீது அப்படியான ஒரு நாட்டம், விமர்சனப் பார்வை வரவில்லை அப்பொழுது. ஆனால் நாவலை வாசிக்கும் பழக்கமும் நாவல்களை சேகரிக்கவும் ஆர்வம் ஏற்பட்டது. நாவல் பற்றி பல விஷயங்களை என் பேராசிரியரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். ஆசிரியர்கள் நம்மிடம் எதையும் பாடமாக நடத்த வேண்டாம். அவர்கள் அவர்களாக அவர்களது பணிகளைச் செய்தால் போதும். அதுவே நமக்கு மிகப்பெரிய பாடமாக அமையும். நம்மை அவர்கள் போல நடக்கவும் நம்மில் உள்ள ஒருன்று நம் மனதைத் தூண்டிவிடும் என்பதை என் வாழ்வில் நான் கண்ட ஒரு பெரும் உண்மை. இப்படி தான் தமிழில் உள்ள நாவல்களைப் பற்றியும் திரைைப்படம் பற்றியும் அவர் பேசும் பொழுது நிறையக் கவனித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான நாவலாசிரியர்களின் நாவல்களை இங்கு குறிப்பாக பட்டியலிட  விரும்புகிறேன். அதன் பிறகே எனக்கு நாவல் மீது ஒரு மிகுந்த ஈடுபாடு உருவானது தற்போது கீழே உள்ள பட்டியலில் பெரும்பாலான நாவல்களை வாசித்து விட்டேன் என்ற பெருமை எனக்கு உண்டு. பொதுவாகத் தொடக்கத்தில் இலக்கியத்தை அவ்வளவாக நான் விரும்பியதில்லை. தன் வரலாறுகளை மட்டுமே வாசிக்க விரும்பியது என் மனம் ஏனோ அதற்கான காரணம் இன்னும் விளங்கவில்லை. 

தமிழின் முதல் தன்வரலாறு எது ? முதல் தலித் தன்வரலாறு எது ? என்ற பிரச்சனை நீண்ட காலமாக உண்டு. அதைப் பற்றி இப்போது பேசவில்லை...

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் புனைவுகளை வாசிப்பதைவிட  தன்வரலாறுகளை மிகவும் விரும்பி வாசிக்கத் தொடங்கினேன். அதனால் நிறைய நூல்களைத் தேடித் தேடி பல நூறு ரூபாய் செலவு செய்து கடினப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வைத்து சுமார் நூறுக்கும் அதிகமான புத்தகங்களைச் சேகரித்து வைத்தேன். என் வீட்டு நூலகத்தில். இன்றுவரை கூட தன்வரலாறுகளைத் தேடி அலைகிறேன். சில தன்வரலாறு நூல்களை நான் புத்தகக் கண்காட்சிகளில் பார்த்தும் கூட என்னால் வாங்க முடியாமல் மன வருத்தத்துடன் வீடு திரும்பியதும் உண்டு காரணம் அப்போது போதிய பணம் கையில் இல்லாததே... இப்படியாக தன் வரலாறுமீது நாட்டம் வரவே...
அதனைத் தொடர்ந்து தன்வரலாறுகள் பற்றிய கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என எல்லாவற்றையும் படித்தேன் சேகரித்தும் செய்தேன்... அப்படி வாசிக்கத் தொடங்கி நாள் முதல் இன்று வரை தன்வரலாறுகளை விரும்பி சேகரித்து வருகிறேன்...

பொய்யான கற்பனைக் கதையைவிட உண்மையான கதை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அது நடந்தக்கதை. சொந்த அனுபவம். என்பதாலே அதன் மீது ஒருபற்று ஏற்பட்டது. தன்வரலாறு எழுதுவதற்கு உண்மையில் துணிவு வேண்டும்... உண்மையை அப்படியே தோல் உரித்துக் காட்ட எல்லோராலும் முடியாது... 

அதன் பிறகு தமிழில் தன்வரலாறுகள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். 200க்கும் மேற்பட்ட தன்வரலாறுகளைப் பற்றிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டேன். அதில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்து சேர்ந்தது. அந்த பட்டியலில் நான் பெயரளவில் மட்டுமே அறிந்த பல நூல்களில் ஒன்று தான் இந்த தன்வரலாறு. 

இரட்டைமலை ஆர். சீனிவாசன் அவர்கள் எழுதிய

"ஜீவிய சரித்திர சுருக்கம்"

எங்குக் கிடைக்கும் என்று தேடியது உண்டு. மனதில் ஆழப் பதிந்து கிடந்தது ஒரு நூல்.

திடீரென இந்த நூலை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகக் கடையில் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. இந்த அறிய நூலை மறுபதிப்பு செய்த ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்தார்க்கும் என் நன்றிகள்.

இப்போதுதான் தெரியவருகின்றன... அறிய நூல்களின் அவசியமும் மறுபதிப்புகளின் தேவையும். 

இப்போது முழுமையாக நாவல் பக்கம் திரும்பி இருக்கிறேன். 

உலகத்தரம் வாய்ந்த நம்மூர் இலக்கியம்

முக்கியமான நாவல்கள்:

ஜெயகாந்தன் கதைகள் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சிலநேரங்களில் சில மனிதர்கள், ஜெயமோகன் எழுதிய ரப்பர், காடு, ஏழாம் உலகம், கொற்றவை,  
எம்.ஜி சுரேஷ் எழுதிய அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், யுரேகா என்றொரு நகரமும்,
எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம் போன்றவையும்,
சாருநிவேதா ஜீரோடிகிரி, 
வாமு கோமுவின் கள்ளியும், யுவன் சந்திரசேகரின் குள்ள சித்தன் சரித்திரம், கானல்நதி, பகடையாட்டம், 
ஜேடி..குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலும், 
பூமணியின் வெக்கை, பிறகு நாவலும், 
சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, 
பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, 
ஹெப்சிபா ஜேசு நாதனின் புத்தம் வீடு, 
லா.ச.ராமாமிருதம் சிந்தா நதி,
எம்.வி.வெங்கட்ராமனின் காதுகள், பாலகுமாரன் கதைகள்,
சா.கந்தசாமியின் சாயாவனம், 
தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, 
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், 
தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணத் தெரு, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கல்கியின் அலையோசை, மகுடபதி, 
கண்மணி குணசேகரன் அஞ்சலை,
டி.செல்ராஜியின் தோல், 
இமயம் எங்கத, செடல்,
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், 
பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை, 
அருணனின் பூருவம்சம், சுதேசமித்திரனின் காக்டெய்ல், ஆஸ்பத்திரி, 
தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள், 
ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளே, குறத்தி முகடு, சோலை சுந்தர 
பெருமாளின் குருமார்கள், 
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், 
நாஞ்சில் நாடனின் தலைகீழ்விகிதங்கள், சூடிய பூ சூடற்க, 
வண்ணநிலவனின் கடல்புறத்தில், 
ஆதவனின் காகித மலர்கள், 
அகிலனின் சித்திரப் பாவை, 
கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடம், 
நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், 
அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், 
பெருமாள் முருகனின் மாதொருபாகன், அர்தனாரி ஆலவாயன், பூக்குழி, கழிமுகம், சோ.தர்மனின் சூல்,
சம்பத்தின் இடைவெளி.

சிறுகதைத் தொகுப்பு:

ஆதவன், நகுலன், 
புதுமைபித்தன், 
வண்ணதாசன், வண்ணநிலவன், 
சுந்தர ராமசாமி, 
இமையம், 
அம்பை, 
தி.ஜானகிராமன், 
கி.ராஜநாராயணன், 
நாஞ்சில் நாடன், 
அ.முத்துலிங்கம், 
பிச்சமூர்த்தி, 
கோணங்கி, 
எஸ்.ராமகிருஷ்ணன், 
அசோகமித்ரன், 
பிரபஞ்சன், 
ச.தமிழ்செல்வன், 
மெளனி, 
கு.அழகிரிசாமி. 

ஆகிய ஆசிரியர்களின் தொகுப்புக்களை நம்பி வாங்கிப் படிக்கலாம்...

புகைப்படம் இந்திய மொழிகள் பள்ளி (CIL -II), ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி.

Monday, May 10, 2021

டெல்லி புறப்பாடு -4

டெல்லி புறப்பாடு 4 
டிசம்பர் மாதம் கடுமையான குளிர் நிலவும் டெல்லியில் இருப்பதைக் காட்டிலும் நம் ஊருக்குச் சென்று விடுவது என்று முடிவு ஆனபிறகு, வீட்டிற்கு வந்தேன் அப்பொழுது எதையாவது வாசிக்கலாம் அல்லது எழுதலாம் என்று தோன்றியது இப்படியெல்லாம் என்னுள் நிகழ்ந்த மாற்றத்திற்குக் காரணம் டெல்லி புறப்பட்டுக்கு பின்புதான்.

எழுதுவதற்கு நேரம் பார்த்து எதை எழுதப்போகிறோம் என்று முன் முடிவு எதுவும் இல்லாமல் பேனாவும் கையுமாக அலையும் பொழுது எதாவது ஒரு கதை மண்டையில் தோனாதா? என்றே அலைந்து கொண்டிருந்தான் அவதாரம் கடைசியில் சரி... 
ஏதாவது ஒரு கதையை இப்போது படிப்போம் பின் எழுதலாம் என்று நினைத்தேன். ஒரு பெரிய எழுத்தாளரின் நூலை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை அப்படியோ கதையோடு கதையாகக் கலந்து போனான். இருந்தும் கடைசிவரை படித்து முடிப்பது என்று முடிவு செய்துவிட்டு கிடுகிடுவென படிச்சுகிட்டே போனேன் கதை முடிய நூறு பக்கம் இருக்கும் அந்த கதை ஐந்நூறு பக்கம். அந்த நேரம் பார்த்து கரன்டு நின்னு போச்சு எப்படா கரன்டு வரும் என்று காத்திருந்து இருட்டில் என்ன செய்வது விளக்கு ஒளியில் புத்தகத்தைப் பார்த்து படிக்க நினைத்து விளக்கின் அருகில் கொண்டு சென்றதும் அம்மாவின் குரல் அடே அவதாரம் வந்து சாப்பிட்டுப் போடா... இன்னிக்கு கரன்டு வராதுனு நேத்தே சொன்னாங்க காலகாலத்துல எடுத்து வச்சி கிட்டு படு என்று அம்மா  சொல்ல இவனுக்கு அந்த நூலில் உள்ள கதை அப்படியே திரைப்படம் போலக் கண்ணில் ஓடிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தான்...என்ன செய்ய சனிய புடுச்ச பழாபோன கரன்டு இப்பத்தான் நிகோனுமா என்று சொல்லிக்கொண்டே எழுந்தான். அன்று அவன் தான் படித்ததை அம்மாவிடம் சொல்லிக்கொண்டே சாப்பிட்டான்... அம்மா ஏதோ இவன படிக்க வச்சதால ஏதோ பேசிட்டு இருக்கானு அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அவள் பாட்டுக்கு உணவு பரிமாறியபடியே இருந்தால் இவனுக்கு ஒரு சந்தோசம் நான் படித்த ஒரு கதை அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தான்...அப்போது திடீரென கரன்டு வந்தது மகிழ்ச்சியில் வேக வேக மாக சாப்பிட விட்டு எழுந்தான். அவனின் அம்மா எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதில் நினைத்துக் கொண்டால் இப்படி இவன் வயசில் பிள்ளைகள் வேலைக்கு பேயிட்டு கைநிறைய சம்பாதிக்குதுங்க... இவன் பைசாக்கு பிரயோஜனம் இல்லாத தமிழைப் படிகிறானேனு ஒரு கவலை. காரணம் அம்மாவிடம் பாங்கில் வேலைபாத்து மேனேஜரா இருந்து ரிட்டையர்டான அந்த வையசானவர் அடிக்கடி சொல்லுவாராம் தமிழ் படிச்சா என்னத்துக்கு ஒதவும்னு... அதை அம்மா அடிக்கடி ஒதவாத படிப்ப படிக்குறனேனு கவலையோடு என்ன ஆக போரனோ ஒரே கவலையா இருக்குனு சொல்லிகிட்டே இருக்கும்... அப்போது அவன் அம்மாவுக்கு இதை எப்படி சொல்லி புரியவைப்பேன் எதுவும் சொல்லத் தெரியமல் மௌனமாக இருந்தான். மீண்டும் கையில் அந்த பெரிய எழுத்தாளரின் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு போனான்...

டெல்லி புறப்பாடு -3

டெல்லி புறப்பாடு -3

"காச்சர் கோச்சரும் என் முதல் விமான பயணமும்"
இந்நாவலை வாங்குவதற்கு முதல் காரணம் இந்நூலின் தலைப்பு அது என்ன "காசர் கோச்சர்"…என்ற கேள்வி என்னுள்ளே எழுந்தது? ஆனால் அதன் விபரீதம் நாவலை வாசித்து முடித்த பின்னர் அறிந்து கொண்டேன் நான் எதிர்பார்க்காத ஒன்று இந்நூலின் தலைப்பு. கொஞ்சம் விரசம் கலந்தது என்றாலும் கதைக்கு மிக பொருத்தமான தலைப்பு என்றே எண்ணத் தோன்றியது வாசிப்பின் நிறைவில்.

சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்ல காத்துக் கொண்டிருந்த சமயத்தில் கண்ணில்பட்டது ஒரு புத்தகக் கடை (புக் ஸ்டால்) உள்ளே சென்று வேடிக்கை பார்க்கலாம் இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. ஏதேனும் ஒரு புத்தகத்தை வாங்கலாம் என்று தேடியபோது கையில் கிடைத்தது இந்நூல். கன்னட நாவல் தமிழ் மொழிபெயர்ப்பு. சரி பரவாயில்லை வாங்கிப் படிப்போம் என்று கழிவு விலையில்லாமல் முழு பணத்தையும் கொடுத்து வாங்கினேன். பிற மொழி மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பற்றிய புரிதலும் அதன் அவசியத்தையும் நான் டெல்லியில்தான் கற்றுக்கொண்டேன்.

முதன்முதலில் விமானப்பயணம் என்பது அதில் பயணம் செய்ய கூடியவர்களுக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தையும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது ஒரு பரவச நிலையையும் அடைவர். விமான ஓடு தளத்தில் விமானம் மெதுவாக ஓடத்தொடங்கியது. அதனுடைய வேகம் எடுத்து வானை நோக்கி பறக்கும் வரையிலும் மனதில் பயம் கலந்த ஒருவிதமான ஆச்சரியம் நம்மளை சூழ்ந்து கொள்ளும். அந்த உணர்வு எங்கோ இழுத்துக்கொண்டு செல்லும். ஐந்தாயிரம் அடிகளுக்கு மேலே சென்ற பிறகு பூமியைப் பார்க்கும் பொழுது என்னவெல்லாமோ தோன்றும். இந்த பூமிப்பந்தின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு புள்ளியை போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் சில நேரங்களில் நான்தான் பெரியவன். நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம். என்னால் தான் எல்லாம் நடக்கிறது. நான் நான் நான் என்ற அந்த ஒற்றைச் சொல் எனக்கு அர்த்தம் அற்றதாகவே தோன்றியது. 

முதல் முறையாக விமானத்தில் பணிப்பெண்கள் நாம் உள்ளே வந்த பிறகு நமது உடமைகளை எல்லாம் வாங்கி மேல் தளத்தில் வைத்து விட்டு நம் இருக்கையை காட்டி அமர சொன்னார்கள். அத்தோடு நாம் இடுப்பில் அணிய வேண்டிய அந்த சீட் பெல்ட்டைப் பற்றியும் மற்ற சில தகவல்களையும் ஒவ்வொன்றாக விளக்கிக் கூறிக் கொண்டிருந்தனர். நான் சென்றது ஒரு தனியார் விமானம். குடிக்க இரண்டு முறை தண்ணீர் மட்டும் வாங்கி குடித்தேன் மேலே சென்றதாலோ என்னவோ பசி  கிள்ளியது வயிற்றை. காரணம் அதிகாலை 3 மணி அளவில் இருந்து விமானத்திற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்ததுதான். 9 மணி அளவில் டெல்லி இன்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு வந்த சேர்ந்தேன். அதன் பிறகு அங்கிருந்து வெளியே வந்து ஓலா காரை புக் செய்து காத்திருந்தேன். பத்து பதினைந்து நிமிடத்தில் கார் வந்ததும் பல்கலைக்கழகம் நோக்கி விரைந்தது. பல்கலைக்கழகத்திற்கு வந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து சென்னை விமான நிலையத்தில் வாங்கிய நாவலை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அந்த நாவலைப் பற்றிய உங்களோடு பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

இந்நாவல் பெங்களூரைக் கதைக்களமாகக் கொண்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதை...

என் மன ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு நாவல். மனிதர்களின் குரூர மனம்  அவ்வப்போது வெளியே வரும்பொழுது அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே மூலகாரணம். அதை நாம் சில நேரங்களில் ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும், அதனால் விளைந்த விளைவுகளை நாம் நம் வாழ்வில் அனுபவித்துத்தான் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்நாவல்.

மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற்றம் என்று எதைக் கருதி கொண்டு எங்கு? எதற்காக ஓடுகிறான்? எதைச் செயல்படுகிறான்? என்று அறியாமல் செய்வதால் அவனுக்குப் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. பணம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் அவனின் மனமே முதல் காரணம் என்ற புரிதலை நமக்கு இந்நூல் வழங்குகிறது.

நாவல் உள்ளே....

அப்பாவிற்கு திடீரென்ற வேலையிழப்பு, குடும்பத்தை நடத்த வேண்டிய இக்கட்டான சூழல், வேறு வேலை தேட வேண்டிய ஒரு கட்டாய நிலை, அப்போது தோன்றியதுதான் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என்ற யோசனை கூறிய - சித்தப்பா வெங்கடாசலம். "சோனா மசாலா" தொழில் வளர்ச்சி, அதன் விளைவாக குடும்பம் வாடகை வீட்டிலிருந்து சொந்தமான ஒரு புதிய வீட்டிற்கு இடம்பெயர்தல், அதுவரையில் குடும்ப செலவினங்கள் அனைத்தும் பார்த்துப் பார்த்து செலவழித்த சூழலிலிருந்து கொஞ்சம் தாராளமாகச் செலவு செய்யும் சூழலுக்கு வளர்ந்தது. அதுவரையில் நெருக்கமாக இருந்த உறவுகள் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் தனித்து நிற்கத் தொடங்கினர் இவற்றிற்கெல்லாம் காரணம் பணத்தை மட்டும் காரணம் சொல்லி விட முடியாது. மனிதர்களின் மனம் நான் என்ற எண்ணம் இன்னும் எத்தனையோ...

கதை தொடக்கம் முடிவு இவற்றுக்கு இடைப்பட்ட கடந்த கால நினைவுகள். கடைசிவரையில் சித்தப்பாவுக்கும் அந்த பெண்ணிற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசாமலே போனது. வாசகருக்கு இடத்தை விட்டு நகர்ந்து செல்லும் படைப்பாக்க உத்தி. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம்  அதன் முக்கியத்துவம். கணவன் மனைவி இடையேயான உறவு விரிசல். பிரிவு. எது நடந்தாலும் குடும்பம் மட்டுமே முக்கியம் என்று கருதும் அம்மா. தொழிலில் மட்டும் அதிக  கவனம் செலுத்தும் அப்பா. படித்து முடித்து நல்ல உத்தியோகத்திற்குச் செல்லவேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த அண்ணன். தேவையான பொருளாதார குடும்பத்தில் நிலவியதும் வெளியில் எங்கும் வேலை செய்யாமல் தங்கச் சொந்தமாகத் தொடங்கிய தொழிலில் வேலை. கணவனை (ரவி) பிரிந்த  மாலதி - ஒரு புதிய சூழலில் திருமணமான பெண்ணின் எதிர்பார்ப்பு. புதிராகவே புகுந்தவீட்டுச் சூழலைச் சமாளிக்கவோ அல்லது பழகிக் கொள்ளவோ முடியாத சூழ்நிலை ஏற்படும் சண்டைகள். இன்னும் பல பல மன ரீதியான உணர்வுகளை அச்சுப்பிசகாமல் அழகாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர்.

குடும்பம் எனும் சிக்கலிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மனிதர்கள். அதே வேளையில் அந்த சிக்கலிலிருந்து கொண்டே எல்லாம் சரியாக இருப்பதாகப் பாவனையோடு வாழும் போலி மனிதர்கள் உண்மையில் சிக்கல்களை உடைத்துவிட்டு வெளியேறவே எண்ணுகின்றனர் என்பதைக் குறியீடாக உணர்த்துவதே கதை. 

இந்நூல் மொழி பெயர்ப்பு நூல் என்று சொல்ல முடியாது அவ்வளவு இயல்பான மொழிநடை எங்கும் சலிப்புத் தட்டாமல் இல்லாமல் வாசிப்பதற்கு இலகுவாக அமைந்திருப்பது மொழிபெயர்ப்பாளரின் மொழிப்புலமை நாவலை ஒரு சிறந்த வெற்றி நாவலாக மாற்றியிருக்கிறது.

நூலின் தலைப்பு நாவலை முழுமையும் வாசித்து முடித்தபின் வாழ்க்கையின் சிக்கலைக் குறிப்பதாக உணர்ந்தாலும் அந்த "காச்சர் கோச்சர்" என்ற சொல்லுக்கு உண்மையில் பொருளில்லை. அது குழந்தைத் தனத்தின் வெளிப்பாடு. அதுவரையில் இந்த சொற்களை யாரும் பயன்படுத்தியதில்லை. பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவனின் வாயிலிருந்து வந்த சொல். நூல் சிக்கிக் கொண்டதைப் பிரித்து எடுக்க முடியாத சூழலில் அவன் கூறியதைக் கேட்டு அனைவரும் இது என்ன (பாஷை) வார்த்தை என்று கேட்க அவனே அதற்குப் பொருள் தெரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கையில் அன்று உருவானது அந்த சொல். குடும்பத்தில் அந்த நால்வருக்கும் மட்டுமே அதுவரை தெரிந்த பொருள். சிக்கலாகிப் போன அந்த நூலினை குறிப்பாக அந்த சிறுவன் பயன்படுத்திய வார்த்தை. திருமணமான பிறகு அனிதா தன் கணவனுடன் முதல் இரவில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்த அவள் தன் கணவன் தன் பாவாடையின் நாடாவை அவிழ்க்கத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது அவள் நாடாவை அவிழ்க்க முயன்று முடியாமல் போக "கோச்சர் காச்சர்" என்று அவள் கூற அது என்ன வார்த்தை என்று அவன் கேட்க அதற்கு தன் சிறுவயதில் நடந்த நிகழ்வைக் கூறி முடிக்கிறாள்.

Sunday, May 9, 2021

டெல்லி புறப்பாடு - 2

புறப்பாடு - 2

சக்தி சமையல் செய்வதற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். இரவு சாப்பாட்டுக்கு சிக்கன் குழம்பு செய்ய அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தான். 

ஒரு குடும்பத்திற்கான அனைத்து மளிகை சாமான்களையும் ஒரு அட்டைப்பெட்டியில் பார்த்தேன். முழுநேரமும் சமையல் செய்யப் போகிறானோ என்ற ஐயம் எனக்கு. சமையல் செய்வதில் கெட்டிக்காரன். 
முன்பு ஒருமுறை இவனது சமையலை ருசி பார்த்திருக்கிறேன். இந்த முறை சிக்கன் குழம்பும், சிக்கன் 65யும் செய்திருந்தான். 
நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுச் சமையல் சாப்பிட்டது போலிருந்தது. விடுதியில் கடுகு எண்ணெய்யில் சமைக்கப்பட்ட உணவுகள் அவ்வளவு ருசியாக இல்லை. நெருப்பில் சுடப்பட்ட ரொட்டிகளும் அதற்கான டாலும் அரைவேக்காட்டு தனமான அரிசியைச் சாப்பிட்டு வாயும் வயிறும் நல்ல உணவிற்கு ஏங்கிக் கொண்டிருந்த காலம் அது. இரவு சாப்பிட்டுச் சிறப்பாக முடிந்தது. பின் நீண்ட நேரம்  பல கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தோம். இரவு 12 மணி ஆகிவிட்டது. "கங்கா தாபா" வரை நடந்து சென்று இரண்டு மொசம்பீ வாங்கி குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு சிமெண்ட் கட்டையில் அமர்ந்து கொண்டு கைப்பேசியைப் பார்த்தபடியே சிறிது நேரம் இருந்தோம். பகல் முழுவதும் தூங்கிக் கழித்ததால் இரவில் தூங்கவில்லை. அதற்கு முந்தைய நாளும் இரவு முழுவதும் தூங்காமல் பேசிக்கொண்டு இருந்ததுதான் காரணம்.  நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் விடுதியில் நடந்த சில சுவாரஸ்யமான கிளுகிளுப்பான சம்பவங்கள் பற்றியும் மெஸ்ஸில் சாப்பிடும் பொழுது நடந்த சம்பவங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது எங்கள் வழக்கம். ஒரு சமயம் சக்தியின் அறைத்தோழன் ஒரு பெண்ணை அழைத்து வந்து அறையில் தங்கியிருந்ததை பற்றி சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு இருந்தான். விடுதியில் இதுபோல் பலரும்  வந்துவிட்டுப் போனதைச் சொல்லிக்கொண்டிருந்தான். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த எங்களுக்கு இது எல்லாம் மிகப் புதிதாகவே இருந்தது. ஆண்களின் விடுதிக்குப் பெண்கள் வருவது பற்றி நாங்கள் வியந்து பேசிக்கொண்டு இருந்தோம்.
அன்று இரவு முழுவதும் பல கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். காரணம் நாங்கள் விடுதியில் சேர்ந்து ஒருவருடம் கூட ஆகியிருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆண் கல்லூரி விடுதிகளுக்குப் பெண்கள் வருவதெல்லாம் நடக்காத காரியம். ஆனால் இங்கோ பெண்கள்  சர்வசாதாரணமாக வருவதும் இரவு முழுக்க தங்குவதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. நீண்ட நாட்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டும் இருந்தோம். அதுமட்டுமல்ல இங்குப் பெண்கள் மிக சர்வ சாதாரணமாக ஆண் நண்பர்களோடு பொது இடங்களில் புகை பிடிப்பதும் விடுதிகளுக்கு வந்து தங்கி மது அருந்துவதையும் பார்த்து இருக்கிறோம். இதெல்லாம் புதிதாகவே இருந்தது எங்களுக்கு. பிறகு அது பழகிப்போனது வேறு கதை.

டெல்லி புறப்பாடு- 1

டெல்லி புறப்பாடு -1

இரவு மணி பத்து. விடுதியின் வாசலில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர் சிலர். நானும் சேர்ந்து கொள்ளலாம் என்று மெதுவாக அவர்கள் பக்கத்தில் சென்றேன். அது ஒரு டிசம்பர் மாதம். அளவிற்கு அதிகமான குளிர். 
எந்த ஆண்டு இல்லாத அளவுக்குக் குளிர் என்று நண்பன் ஒருவன் மதியம் உணவு சாப்பிடும் போது கூறி இருந்தான். நெருப்பு காட்டுத் தீயைப் போல மிகுந்த சத்தத்துடன் வெடித்து எரிந்து கொண்டிருந்தது. அதில் காய்ந்து போன மரக்கட்டைகள் பெரிய  பெரிய அளவிலான துண்டுகள் எரிந்து கொண்டிருந்தன. குளிரிலிருந்து காத்துக்கொள்ள அந்த வெப்பம் இதமாய் இருந்தது. கழுத்தில் சுற்றியபடி துண்டும் தொங்கிக்கொண்டு இருந்தது. உடல் முழுவதும் மிகப்பெரிய கம்பளி போர்வை மேலும் சூட்டை அதிகப்படுத்தி கதகதப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ சிலர் இன்னும் சில மரக்கட்டைகளை எடுத்து வந்து அந்த தீயில் போட்டுவிட்டு என் பக்கத்தில் அமர்ந்தனர். முன்பின் தெரியாதவர்கள் என்றாலும் எதையும் பேசிக்கொள்ளாமல் அனைவரும் ஒன்று சேர அந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம். இரவு பதினொன்றரை மணி. "ராஜு பாய்" கடையில் சூடாக டீ குடித்து விட்டு வரலாம் என்று எழுந்து நடக்கத் தொடங்கினேன். தனியாகப் போவதற்குப் பதிலாக என் காதலியையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்று எண்ணி அவள் கை பேசி எண்ணிற்கு அழைத்தேன். அவளும் வருவதாகச் சொன்னாள். இருவரும் சேர்ந்தே சென்றோம். டீ வாங்கிக் கொண்டு விடுதியின் முகப்பில் ஒரு படிக்கட்டில் அமர்ந்து கொண்டோம். கையில் சூடான டீ அந்த குளிரில் மிக இதமாகத் தொண்டையில் இறங்கியது. மீண்டும் எழுந்து ஒரு சிறிய நடைப்பயிற்சிபோல எங்கள் விடுதி தாண்டி வளைந்தும் குறுகியும் செல்லக்கூடிய பாதை வழியாக நடந்துகொண்டு இருந்தோம். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்ததில் மகிழ்ச்சிதான். "எப்போ வீட்ல சொல்லப்போற நம்ம லவ்வ" என்று கேட்டாள். கூடிய சீக்கிரம் நேரம் பார்த்துச் சொல்கிறேன் என்றேன். மீண்டும் அமைதியாக நடையைத் தொடர்ந்தேன். அது வரையில் எதுவும் பேசாமல் அமைதியாக மீண்டும் நடந்தே விடுதியை வந்தடைந்தோம். அவள் என்னிடம் வேறு ஏதாவது பேசி இருக்கலாம் என்று தோன்றியது. அன்று நடந்த ஆய்வரங்கத்தில் நான் வாசித்த கட்டுரையைப் பற்றி அவள் பேசி இருக்கலாம் என்று மனதிற்குள் மீண்டும் நினைத்தேன். ஆய்வரங்கத்தில் காரசாரமான விவாதங்கள் அதைப்பற்றி எதுவும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல். அவள் வந்தது மனதிற்குள் கொஞ்சம் கோபம்தான். ஏனென்றால் என்னுடன் ஆய்வு செய்யக் கூடிய மூத்த மாணவர்கள் என்னிடம் சண்டை போடும் தோரணையில், தொனியில் பேசியது அவளைச் சிறிதும் தொந்தரவு செய்யவில்லை. அதில் என் தரப்பு வெற்றி என்றாலும் அவள் பேச்சில் அது பெரிய விஷயமாகப் படவில்லை. என்பதைப் புரிந்து கொண்டேன்.  அவளை அவள் விடுதியில் விட்டு விட்டு என் விடுதி நோக்கி வந்து கொண்டு இருந்தேன். அன்றிரவு நான் உறங்குவதற்கு நேரம் 3 மணி ஆனது.

Friday, May 7, 2021

நானும் என் பூனைக்குட்டிகளும்

நானும் என் பூனைக்குட்டிகளும்

தரணி ராசேந்திரன்

எழுத்து பிரசுரம் 2021 வெளியீடு

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதைச் சொல்லும் ஓர் அழகான குறுநாவல்.

நகரங்களில் தொலைந்துபோன மனிதாபிமானத்தை, அன்பை, கருணையை மனிதனுக்கு மீண்டும் நினைவுபடுத்தும் முயற்சி இந்நாவல்.

மனித உணர்வுகள் இறந்துபோன நகரத்தில் மனதில் ஈரமின்றி வெற்றுடம்பைச் சுமந்துகொண்டு அலைபவர்களாக இன்றைய மனிதர்கள் உள்ளனர்.

மனிதர்கள் வாழக்கூடிய இடத்தில் வேறு எந்த உயிரினத்திற்கும் இடமில்லை. அந்த இடம் முழுக்க முழுக்க மனிதர்களுக்காக ஆக்கிக் கொள்ளப்பட்டது. உண்மையில் இங்குப் பிரச்சனைகள் விலங்குகளோ மரம் செடி கொடிகளோ அல்ல. மனிதன்தான் எல்லாவற்றையும் பிரச்சனை ஆக்கிக் கொள்கிறான். எல்லாவற்றையும் தனது உடைமை என்று கருதுகிறான்.

மனிதன் சக மனிதனை, சக உயிரினங்களை எப்படி நடத்துகிறான் என்பதன் சாட்சியாக இந்நாவல்.

இலக்கியம் என்பது மனிதனைப் பற்றி மட்டும் பேசுவது அல்ல. சக உயிரினங்களையும் பிணைத்துப் பேசக் கூடியது. பழந்தமிழ் இலக்கியங்கள் இதற்குச் சான்றாகும்.

நகர தெருக்களில் வளர்ந்திருக்கும் ஒரு மரம், அந்த தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாய், எங்கோ ஒரு இடத்தில் மதில் மீது உலவிக் கொண்டிருக்கும் ஒரு பூனை இவையெல்லாம் மனிதனைப் பொறுத்த வரை இங்கு வாழ தகுதி இல்லாதவை. மனிதன் மட்டுமே இங்கு வாழத் தகுதி உடையவன் என்பதான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைத்து அதுவே சரி என வாழ்ந்து கொண்டு வரும் மனிதர்கள் மிகக் குரூரமான மனம் படைத்தவர்கள். அவர்களின் மனதை மாற்றவேண்டியது அவசியம்.

ஒரு எழுத்தாளனுடைய பணி மனிதர்களுக்காக மட்டுமன்றி புறக்கணிக்கப்பட்ட வாயில்லாத ஜீவன்களுக்கும், மரம் செடி கொடிகளுக்கும் சேர்த்துத் தான் அவன் பேசியாக வேண்டும். எழுதியாக வேண்டும்.

இங்கு அரசியல் மனிதர்களுக்கு மட்டும் என்று கருதப்படுகிறது. அது அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்ற புரிதல் எழுகிற பொழுது இவை எல்லாம் நிச்சயம் மாறியிருக்கும். அப்படியான காலம் விரைவில் கை கூடும் என்ற நம்பிக்கையில். இந்த இரவை கடந்து போகிறேன்.

மனித இன அழிப்புகளை வன்மையாகக் கண்டிக்கும் நாம் பிற உயிர்களையும் அவ்வாறே போற்றி மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்.

தரணி ராசேந்திரனின் சமூக பார்வை,  சமூகத்தின் மீது வைத்துள்ள அக்கறை, உயிரினங்களின் மீது அவர் கொண்ட நேசம் உண்மையில் பாராட்டத்தக்கது.

வடசென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பாலாவும் அவனது அம்மாவும் பூனைக் குட்டிகளின் மீது அளவுகடந்த பிரியத்தை அன்பை வெளிக்காட்டுவது உண்மையில் வியப்பளிக்கிறது. இன்னமும் ஒரு சில மனிதர்கள் பிற உயிரினங்களின் மீது அளவுகடந்த அன்பை வைக்கத்தான் செய்கின்றனர். ஒரு கார்ட்டூன் படம் பார்ப்பது போல் இந்நாவல் தொடங்குகிறது. இந்த பூமியில் புதிதாகப் பிறந்திருக்கக் கூடிய ஒரு பூனைக் குட்டி தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்குவதாக இக்கதை ஆரம்பமாகிறது. 

சாதாரண நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சார்ந்த அதிலும் சொந்த வீடு இல்லாத ஒருவர் பூனைக்குட்டிகளை அல்லது நாய்க் குட்டிகளை வளர்க்கும் பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பேச்சுக்களையும் வீட்டு உரிமையாளரிடம் அனுமதியும் கேட்டுக் கொண்டுதான் நாம் அதைச் செய்ய முடியும் என்ற நிலை இன்றும் பெரு நகரங்களில் பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது. அப்படியான நிலையில் கதை சூழல் தொடங்கி ஒரு மூன்று பூனைக்குட்டிகளும் ஒரு அம்மா பூனையுமாகக் கதை செல்கிறது. பின்னர் நாற்பது ஐம்பது நாய்கள் வரையில் தினமும் உணவளிக்கும் படி ஆகிப்போகிறது.இவைகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தேடிச் சென்று அவர்களுக்கு உதவி செய்தும் வரும் பாலாவின் கதையாகச் சென்று முடிகிறது. ராணி என்கிற நாய் மூன்று குட்டிகளுடன் இந்த சமூகத்தில் வாழப் போராடும் கதை அவற்றிற்கு உதவி செய்யும் பால உண்மையில் ஹீரோ தான்.