Sunday, May 10, 2020

"கடவுள் கற்ற பாடம்" (பிரெஞ்சுச் சிறுகதைகள்)



#கடவுள் கற்ற பாடம் (பிரெஞ்சுச் சிறுகதைகள்)

#பிரொஞ்சிலிருந்து தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்ராய நாயகர்.

"பத்து சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் சிறுகதைகள்"

இன்று "கடவுள் கற்ற பாடம்" - பிரெஞ்சு சிறுகதைகள் என்ற நூலை வாசித்த மகிழ்ச்சியோடு என் வாசிப்பு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புனைவு இலக்கியம் என்பது கடந்தகால நிகழ்கால எதிர்கால மனித இயக்க நடவடிக்கைகளைக் குறித்த ஒரு பதிவாகக் கொள்ளலாம். மனித உற்பத்தியில் மிக உன்னதமான படைப்பு என்றால் அது இலக்கியம். அதைப்போல மிகவும் பலவீனமா படைப்பு என்றால் அது கடவுள். சரி அது போகட்டும் தத்துவ விசாரணையில் இறங்காமல் விஷயத்திற்கு வருகிறேன்.

இத்தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. என்னைக் கவர்ந்த மிகச் சிறந்த அல்லது அற்புதமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக,

1. கடவுள் கற்ற பாடம் - பெர்நார் வெர்பெர்.


ஒரு படைப்பாளியின் பார்வையில் உலகத் தோற்றம், கடவுள் குறித்த புனைவுகள், கட்டுக்கதைகள், உயிர்களின் தோற்றம், என எல்லாவற்றின் மீதும் ஒரு விபரீதமான அல்லது கற்பனைக்கு எட்டாத வேடிக்கை தனமான அதேவேளையில் சிந்தனையின் உச்சத்தில் நின்று எல்லாவற்றையும் ஒரு புதிய பார்வையில் அலசக் கூடிய கண்ணோட்டம் கொண்ட ஒரு சிந்தனையாளனாகத் தன்னை வெளிப்படுகிறான் என்பதைக்  கடவுள் கற்ற பாடம் என்ற சிறுகதை எனக்கு உணர்த்திய செய்தியாக நான் கருதுகிறேன்.

கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும் நம்மைப் போலப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வேடிக்கையாகக் கூறி பிரபஞ்ச இயக்கத்தின் ரகசியத்தை அங்கத நடையோடு ஒரு வாசகனை அதுவரையில் எதார்த்த கதைகளில் மூழ்கியிருந்த நிலையிலிருந்து புதிய திசையை நோக்கி ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை இச்சிறுகதை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

2. சிலை - மர்ஸேல் எம்மே.
உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள் அப்படித் தோன்றியவர்கள் சிலர் சாதனைகளின் உச்சம் தொட்டவர்களாகவும் விளங்குகிறார்கள். அப்படி விளங்கிய ஒருவனின் கதையை அவன் நிகழ் காலத்திலேயே அவன் கண்முன்னாலேயே அவனின் எதிர்கால நிலையையும் அதே வேளையில் நிகழ்காலத்தில் தன் ஏழ்மையால் ஒரு கண்டுபிடிப்பாளனின் மன உளைச்சலை மிக அற்புதமாக ஒரு உளவியல் சார்ந்த ஒரு கதையாக எழுதப்பட்டுள்ளது. நடப்பியல் எதார்த்தத்தை மனிதர்களின் அலட்சியத்தை நமக்காக அல்லும் பகலும் உழைத்து அவர்களை நாம் எவ்வாறு எதிர்காலத்தில் நடத்து போகிறோம் அல்லது நிகழ்காலத்தில் நடத்தி இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விரக்தியின் உச்சத்தில் ஒரு படைப்பாளனின் எதிர்பார்ப்பை சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கையைக்  கேள்வி கேட்கும் முகமாக இச்சிறுகதை  அமைந்துள்ளது. அதற்கு இந்த சமூகம் எந்த விதத்திலும் அவர்களுக்கு உரிய மரியாதை என்றுமே வழங்கியதில்லை என்ற குற்றச்சாட்டை வைப்பதாக வாசிப்பில் உணரமுடிகிறது.

3. ழுயில் சித்தப்பா - கி.தெ மொப்பசான்.
மனிதர்களின் எதார்த்த இயல்பான நடப்பியல் வாழ்க்கைச் சித்திரத்தை அப்படியே கண்முன்னே காட்சிகளாக விரித்து எதிர்பார்ப்பின் மூலம் நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் அல்லது நம் எதிர்பார்ப்பு பொய்யாய் போனது என்று உணர்ந்தால் மனிதமனம் அவற்றிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ள எப்பொழுதும் தன்னை சுயநல சிந்தனையைை வைத்துக் கொள்கிறது. என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக மாப்பசானின் இச்சிறுகதை அமைந்துள்ளது.

4. எங்கள் சிறந்த வாடிக்கையாளருக்கு - ஆன்றி த்ரோயா.
சில நேரங்களில் மனிதர்கள் ஆதரவற்ற நிலையில் தங்களை ஒரு அனாதைகளாக உணருகின்ற வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நிற்பவர்களுக்குத் தெரியும் உறவின் உன்னதம் அப்படியான ஒரு முதியவரின் வாழ்க்கையை அந்த கடைசி படிக்கட்டில் நின்று கொண்டு நமக்காக ஒருமுறை அதைப் படம்பிடித்துக் காட்ட முயலும் பணியைச் சிறுகதை செய்துள்ளது.

5. கைகள் - ஆன்றி த்ரோயா.

வாழ்க்கையில் தனக்கான சில அடிப்படையான ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லது விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம் அப்படியான ஒரு பெண்ணின் காதல் கதை.

6. தோளின் மீது ஒரு கை - மிஷேல் லுயி.
நம் நம்பிக்கைகள் நாம் நம்பும் சில விஷயங்கள் அல்லது என்றாவது வாழ்வில் ஒரு நாள் என்றோ நாம் கண்ட கனவு நிஜ வாழ்க்கையில் நடந்தே தீரும் என்று நாம் கொள்ளும் அந்த தீர்மானமான ஒரு மன உணர்வை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் வெவ்வேறு சம்பவங்கள் மூலம் அனுபவங்கள் மூலம் இம்மாதிரியான ஒரு மனநிலை ஏற்பட்டிருக்கும் அப்படியான ஒரு சிறுகதை தான் இது.

மொழிபெயர்ப்பாளரின் அற்புதமான மொழி நடை தங்கு தடையின்றி விரைந்து வாசிக்க முடிந்தது. அந்த வகையில் மொழிபெயர்ப்பாளரைப் பாராட்டியே ஆகவேண்டும். 

மற்றுமொரு நூலோடு உங்களை சந்திக்கும் வரை நன்றி.

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...