Saturday, April 17, 2021

உலோகம்

"உலோகம்" 

நாவல் வெளிவந்த ஆண்டு 2010.

2021யில் வாசிக்கையில்...

ஒரு சமயம் ஜெயமோகன் பேசக்கூடிய காணொளிக் காட்சி ஒன்றைத் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதில் ஈழத்தில் நடந்த போர் குறித்து அவர் பேசி இருந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லையெனினும் ஈழப்போரைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய நாவலை அதுவே வாசிக்கத் தூண்டியது. வாசிப்பின் முடிவில் தான் கொண்ட பார்வையை எந்த இடத்திலும் சரியானது என்று வாதிடவுமில்லை ஈழப்போர் தவறு என்று பேசவுமில்லை அதுவரையில் மகிழ்ச்சி. 

இந்த இடத்தில்தான் எழுத்தாளன் ஒரு உன்னதமான இடத்தைப் பெறுகிறான். குறிப்பாக இந்நாவலில் ஜெயமோகன் அந்த உன்னதமான நிலையைத் 
தொட்டு விட்டார் என்று என்னால் கூற இயலும்.

நேர்த்தியான கதையின் தொடக்கமும் முடிவும் எதிர்பாராத ஒன்றாகவே அமைகிறது. வாசகனால் உணரமுடியாத முடிவைச் 
சென்றடையும் பொழுது அந்தப் படைப்பு மேலும் சுவாரசியம் அடைகிறது.

நாவலில் ஈழத்து இயக்கங்கள் பற்றி தன் பார்வையையோ அல்லது பொது பார்வையையோ முன்வைக்காமல் நடந்த ஒன்றை அல்லது கற்பனை கதையைக் கதையாகவே சொல்லும் இயல்பு மாறாமல் எந்த சார்பும் இல்லாமல் அப்படியே கொண்டு சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது.

மனிதர்களின் மனதில் எழும் உணர்வுகளை அவர்களின் வாழ்க்கைச் சூழலை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே கதையினூடே செலுத்தி எந்த இடத்திலும் இடர்பாடு இல்லாமல் இட்டுச் செல்வது சிறந்த எழுத்தாளனுக்கு அடையாளம் அந்த அடையாளத்தை இந்நாவல் நிறைவடையும் வரை ஜெயமோகன் தக்க வைத்துள்ளார்.

சார்லஸ், ஜார்ஜ், ரெஜினா, வீரராகவன், சிறீ மாஸ்டர், பொன்னம்பலத்தார், வைஜயந்தி இன்னும் சில கதாபாத்திரங்களில் மிக முக்கியமான கதாபாத்திரம் சார்லஸ் என்ற சாந்தன் அதுவும் அவன் பெயர் இல்லை. 

இக்கதையில் ஐந்து விடயங்கள் பேசப்பட்டுள்ளன ஒன்று இயக்கங்கள் இரண்டு தனி மனித உணர்வுகள் மூன்று அரசியல். நான்கு சமூகத்தின் நிலை ஐந்து வரலாறு என்ற போலித்தன்மையின் கட்டமைப்பு. 

இங்குச் சுட்டிக் காட்ட வேண்டிய மிக முக்கியமான ஒன்று கதைகூறல் முறை அதிலும் வெற்று வார்த்தைகளின் அடுக்குகளாக அல்லாமல் கனத்த பக்கங்களைக் கொண்டதாக அமைகிறது இந்த நாவல்.

இயக்கத்திற்காக இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற வியப்பும் அகதிகளின் மனநிலையில் நாம் ஒரு நிமிடம் வாழும் பொழுது எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள் எண்ணும் அளவிற்கு இந்நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். இங்கு எந்த நியாய தர்மங்களும் பேசப்படவில்லை எனினும் இயக்கங்களின் முடிவு எதுவோ அதுவே கதையின் முடிவாக அமைந்துள்ளது.

கதையில் வேண்டுமானால் ஹீரோக்களைஉருவாக்கலாம் தலைவர்களை உருவாக்கலாம் ஆனால் நிகழ்வில் தலைவர்களோ ஹீரோக்களோ அப்படி அல்ல.

அப்படி இக்கதையின் ஹீரோவாக சார்லஸ் காட்டப்பட்டாால் அல்லது பொன்னம்பலத்தார் கதையின் தலைவராகக் கூறப்பட்டிருந்தால் இதனுடைய உண்மை தன்மை இயல்பிலிருந்து ஒருபடி கீழே இறங்கி இருக்கும். ஆனால் மிகத் தெளிவாகக் கதையை இட்டுச் சொல்வதோடு கதாபாத்திரங்களின் இயல்பை இக்கதையில் காணலாம்.

நிச்சயம் ஜெயமோகனைத் தவிர வேறு எவரேனும் இந்த கதையை எழுதியிருந்தால் சார்லசை அல்லது பொன்னம்பலத்தாரை மிக உன்னதமான ஒரு அறிவுஜீவியாகவும் மிகப்பெரும் தலைவராகவும் ஆக்கியிருக்க முடியும் ஆனால் இக்கதையின் உண்மைத்தன்மையை நிலைநாட்ட அப்படி எந்த ஒரு அதிமேதாவி தனத்தையும் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டவில்லை. அதுதான் பிற எழுத்தாளர்களிடமிருந்து ஜெயமோகன் தன்னை விடுவித்துக் காட்டும் இடம் என்று நான் கருதுகிறேன்.

இயக்க கட்டுப்பாடுகளை பற்றி கூறுகையில் வியப்பை அளிப்பதாக இருக்கிறது. இப்படியாக ஒரு இயக்கத்தின் கீழ் கட்டுப்பாடுகளோடு இருக்கமுடியுமா? என்று எண்ணும் பொழுது சாதாரண மக்கள் அனுபவங்களிலிருந்து இதைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லாத ஒன்று.

இக்கதையில் உள்ள அனுபவங்கள் உண்மையில் மெய்சிலிர்க்கக் கூடியவை துரோகம் ஏமாற்றம் கொலை கொள்ளை கடத்தல் இதற்கு இடையே காமம் காதல் நட்பு எல்லாவற்றையும் கடந்து இயக்கம் என்ற ஒற்றைச் சொல் அனைத்தையும் கடந்து நிற்கும்.

வாசிப்பின் அனுபவத்தைப் பெற எழுத்தாளனின் எழுத்தாற்றலை அறிய எழுத விரும்பும் எவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு படைப்பாக உலோகம் என்ற நாவலைக் கூறலாம்.

உலோகம் வெற்று வார்த்தை அல்ல வாழ்வின் அழிக்கமுடியாத நினைவுகளில் ஒன்றாக ஆகிப்போன ஒருவனின் கதையே இந்த உலோகம் ஆகும்.

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...