Sunday, April 18, 2021

கடுகு வாங்கி வந்தவள்

"கடுகு வாங்கி வந்தவள்" 
கன்னடத்தில் பி.வி.பாரதி 
தமிழில் கே. நல்லதம்பி 

ஒரு எழுத்தாளனின் சமுகம் சார்ந்த அக்கறை அல்லது நோக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. துன்பங்களில் சுழன்று திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் வரமும் வழிகாட்டியும் ஆவார்கள்.
அப்படியானதொரு அனுபவப் பதிவை நாவல் வடிவில் இச்சமுகத்திற்குக் கொடுத்திருப்பவர் தான் பி.வி. பாரதி.

புற்றுநோய் என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் கதை. அந்த நோய் கொடுத்த வலி வேதனை சொல்லில் அடங்காத இன்னும் சொல்லமுடியாத துன்பங்களைத் துயரங்களை வாழ்வில் மிக இக்கட்டான சூழல்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் இதுபோன்ற கொடுமையான சூழலில் சிக்கித் தவிப்பவர்களை அல்லது அப்படியான மனிதர்களை நாம் காணும் போது? எப்படி அணுக வேண்டும்? அவர்களின் மன உணர்வுகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதை உணர்த்தும் கதையே இந்நாவல். 

வாழ்வில் அதுவரையில் சந்திக்காத ஒரு புதிய அனுபவத்தை ஒரு நோய் மூலம் நாம் பெரும் பொழுது நம்மைச் சுத்தி இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை, மனிதர்கள், உறவுகள், இவர்களைப் பற்றிய புரிதல்கள் அனைத்தும் தலைகீழாகத் தோன்றலாம். நம் மனதில் கொண்டிருந்த தானென்ற அகம்பாவம் அதுவரை தன்னால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பு என எல்லாவற்றையும் ஒரு நொடியில் தவிடுபொடியாக்கி வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வைப்பதோடு, இயல்பாக நடக்கக் கூடிய சாதாரண ஒன்றைப் பல போராட்டங்களுக்குப் பிறகு நாம் அதைச் செய்கிற சமயத்தில் வாழ்தல் என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளும் அந்த ஒரு வினாடியில் ஒரு புதிய மனிதனை உங்களால் காண முடியும் அந்த மனிதனைத் தேடி அடைவதே வாழ்வின் மிக உன்னதமான ஒன்று. 

அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணாக இருந்து அந்த துன்பங்களை அனுபவித்த பின் வாழ்வில் இதைவிடக் கொடுமையான வலிகள் உண்டோ? என்று கூறுமளவிற்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலிகளை அனுபவித்த ஒருவரால் அதை மீண்டும் மனதில் அசைபோட்டுப் பதிவு செய்து அதை ஒரு படைப்பாக மாற்ற எடுத்த முயற்சி சாதாரண ஒன்று அல்ல அது மன வலிமையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நாவலை ஒரே மூச்சில் வாசித்து விட உதவியாக இருந்தது மொழிநடை உண்மையிலேயே எப்படிப்பட்ட உன்னதமான கதையாக இருந்தாலும் அதனுடைய மொழிநடை கூறும் முறை கடினமாக இருந்தால் வாசிப்பில் ஒரு சோர்வு தொய்வு ஏற்படும். இந்நாவலில் எந்த இடத்திலும் அப்படியான ஒரு தொய்வோ சோர்வோ ஏற்படாத வண்ணம் கொண்டு சென்றிருப்பது ஒரு மொழிபெயர்ப்பாளரின் சிறந்த வெற்றியாகவே கொள்ள வேண்டும்.

இலக்கியம் என்பது மனித வாழ்க்கையைச் சொல்லில் வடிப்பது என்பார்கள். அந்த சொல்லை மிகச் சிறந்த முறையில் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கடத்திச் செல்வது ஒரு பெரும் தவம் போன்றது. அதில் வெற்றியும் கண்டுள்ளார் மொழிபெயர்ப்பு ஆசிரியர். நூலாசிரியரின் மனநிலையை வலியை நூலின் நோக்கத்தை எந்த நிலையிலும் குறைத்து விடாமல் பிறிதொரு மொழியில் கொண்டு சேர்ப்பது ஒரு ஆகச் சிறந்த கலையாகவே கருதுகிறேன். அந்த கலையில் கை தேர்ந்தவரான கே.நல்லதம்பியை எத்துணை பாராட்டினாலும் தகும். இதற்கு முன்னால் இவரின் சில மொழிபெயர்ப்புகளை வாசித்த அனுபவத்தில் இதைச் சொல்ல எந்த தடையுமில்லை எனக்கு.

# அபி இராவணன்
19.04.2021
3:07 am

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...