நாரத ராமாயணம்
#புதுமைப்பித்தன்
முதல் பதிப்பு: 1955
கிண்டில் பதிப்பு: 2020
இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பல பரிமாணங்களில் பல மொழிகளில் பலரால் தொடர்ச்சியாக எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வந்துள்ளன.
இதுவரை 300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அவற்றில் குறிப்பாகத் தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இராமாயணங்கள் கதைகளாகக் காவியங்களாக, நாடகங்களாக, சிற்றிலக்கியங்களாகப் பல பரிமாணங்களில் ராமாயணம் தொன்றுதொட்டு படைப்பாளர்கள் தங்கள் விருப்பப்படி கையாண்டு வருகின்றனர். அதன் வழி இராமாயணம் பலநூறு வடிவங்களில் மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகின்றன.
அதில் குறிப்பாகப் புதுமைப்பித்தன் எழுதிய நாரத ராமாயணம் மிக வித்தியாசமான பகடி இலக்கியத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
பகடி இலக்கியம் நக்கலும் நையாண்டியும் ஒரு கேளிக்கை இலக்கியமாகக் கருதப்படுகிறது அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நாரத ராமாயணம்.
புதுமைப்பித்தன் மனதில் இப்படியான ஒரு வித்தியாசமான கதையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தின் காரணம் அன்றைய சூழலில் ராமாயணத்தை ஒரு கதையாக மட்டுமல்லாமல் கடவுளின் அவதாரமான ராமனின் சரித்திரத்தையும் இந்திய வரலாற்றையும் பேசுபொருளாகக் கொண்ட இராமாயணத்தை உண்மை வரலாறு போலக் கட்டமைத்த விதத்தை தலைகீழாக மாற்றி அதில் ராமன் சீதை அனுமன் பரதன் சுக்ரீவன் லவன் முதலிய கதாபாத்திரங்கள் வழி எதார்த்தமான நையாண்டி தன்மையோடு கூடிய முறையில் பாரதியைப் பின்பற்றியே புதுமைப்பித்தன் நாரத ராமாயணத்தைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாரத இராமாயணம் இந்திய இராமாயணங்களை எள்ளி நகையாடும் தொனியோடு எழுதப்பட்டது மட்டுமல்லாமல் இராமனை ஒரு அடாவடி பேர்வழியாகச் சித்தரித்தும் அனுமனை பாவப்பட்ட ஒருவனாகக் காண்பித்தும் கதையை கூறி இருப்பது கவனிக்க வேண்டியது.
பரதன் சுக்ரீவன் லட்சுமணன் இவர்களின் வாரிசுகள் போராடி ராம ராஜ்ஜியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேற்று நாட்டவர்களுடன் போராடி தோற்ற கதையைக் காண்பித்திருப்பது உண்மையில் இலக்கிய அரசியலைப் பேசுவதாக மட்டும் நின்று விடாமல் அதன்வழி பரதகண்டம் ராம ராஜ்ஜியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வலுவற்ற வாரிசுகளின் தோற்ற கதையையும் பின்பு போராடி வென்ற கதையையும் கேலியும் கிண்டலுமாகக் கதையை அமைத்து இருப்பது வேடிக்கை.
இதுவரையில் இராமாயணத்தை யாரும் இப்படி எழுதி இருப்பார்களா? என்று எண்ணும் அளவிற்குப் புதுமைப்பித்தனின் மொழி நடை, கதை கூறும் முறை, கதையின் தொடக்கம் முதலியன வித்தியாசமான முறையில் அமைந்துள்ளன.
பகடி இலக்கியத்தின் அத்தனை சிறப்பும் நாரத ராமாயணம் பெற்றுள்ளது. இதுபோன்றே பாரதியார் இயற்றிய குதிரைக்கொம்பு என்ற சிறுகதையும் பகடி இலக்கியத்திற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம்.
தமிழில் நையாண்டி இலக்கியங்கள் பற்றி விரிவான ஆய்வுகளும் கதைத் தொகுப்புகள் முழுமையாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.
பகடி இலக்கியம் குறித்து ஒரு சிறந்த கட்டுரையை ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் அந்த காலத்தில் காப்பி இல்லை என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.
நையாண்டி பாடல்கள் என்ற தலைப்பில் தனி புலவர்களுடைய பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த இரண்டைத் தவிர விரிவான ஒரு கட்டுரையோ அல்லது ஆய்வு நூல்கள் குறித்த பதிவுகளோ இல்லை.
அபி இராவணன்
26.04.2021
No comments:
Post a Comment