டெல்லி புறப்பாடு -7
மின்விசிறி மிக மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அது ஒரு கோடைக் காலம். அதற்குமேல் தன்னால் சுற்ற முடியாது என்பது போல் மயங்கி கொண்டிருந்தது. நீண்ட நாட்களாகச் சுற்றி வயதாகிப் போன ஒரு வயோதிகனைப் போல் மயங்கி மயங்கிச் சுற்றிக் கொண்டிருந்தது. அறையின் உள்ளே ஜன்னல் கண்ணாடிகளைத் தாண்டி சூரிய வெளிச்சம் எனது அறையில் புதிய வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. காலை 7 மணி இருக்கும் எழுந்து என்னுடைய கட்டில் மீது அமர்ந்து கொண்டேன். என் அறைத் தோழன் காலையிலேயே வெளியே சென்றிருந்தான் நான் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தேன். பல் துலக்கிய பின் நடந்து சென்றேன். காலையில் பிரட் அவித்த முட்டை ஒரு டம்ளர் டீ எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வந்தேன். சாப்பிட்டு முடித்த பின் மடிக்கணினியை எடுத்து வைத்து நேற்று இரவு தட்டச்சு செய்த கட்டுரையை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தேன். இன்று மதியம் இரண்டு மணிக்கு நான் கட்டுரை வாசிக்கப் போகிறேன். வாரத்திற்கு இரண்டு நாள் ஒரு நாள் கட்டுரையும் ஒருநாள் புத்தக மதிப்புரையும் நாங்கள் வழங்கவேண்டும். இங்கு அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை. மதியம் 12 மணி அளவில் என் அறை முழுவதும் வெப்பக் காற்று வீசிக்கொண்டிருந்தது. புழுக்கம் தாங்காமல் வெளியே வந்து நின்று கொண்டேன். மேல் சட்டை எதுவும் அணியவில்லை. கால்சட்டை மட்டும் அணிந்திருந்தேன். சரியாகப் பன்னிரண்டு முப்பது மணிக்குச் சாப்பிடச் சென்ற நான் அதன் பிறகு ஆய்வரங்கு சென்று மாலை நான்கு முப்பது மணிக்கு தான் மீண்டும் அறைக்கு வந்தேன். இதுதான் எனது வாடிக்கை என்றாலும் அன்று மாலை என்றும் இல்லாததாய் ஒரு உணர்வு தனியாக நடந்து கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தின் வளைவுச்சாலையில் நிறையப்பேர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் தனியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஏனோ கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய நாள் இரவு "ஆடிப் பாவை போல" நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி வெறுமையாய் இருந்த நாள் அன்று. அறைத்தோழன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான். மின்விசிறி மயங்கியபடிச் சுழன்று கொண்டிருந்தது. இடையில் கிரீச் கிரீச் என்ற சத்தம் வேறு. எங்கிருந்தோ வந்த ஒரு பதற்றம் என்னை தொற்றிக் கொள்ளவே நான் நாவலில் வாழ்ந்து கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். நானே சிக்கிக் கொண்டது போல ஒரு உணர்வு. அவ்வுணர்வைப் பற்றி இரண்டு பக்கத்தில் எழுதி வைத்தேன். ஒரு நீண்ட அமைதிக்குப் பின் மீண்டும் நினைவு திரும்பி நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே வீட்டைப் பற்றிய நினைவுகள் மனதை அழுத்தி பாரமாக்கிவிட்டு வந்துபோக வாசிப்பு இடை இடையே அறுபட்டு அறுபட்டு ஒரு வழியாக என் கதையோடு கலந்து அந்த நூலையும் வாசித்து முடித்தேன். அந்த நாவலைப் பற்றி இரண்டு வரிகள் இங்குச் சொல்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் நடந்த ஒரு கதை. என்றாலும் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த ஒரு நிகழ்வு அந்த நாவலிலும் இருந்ததைக் கண்டு வியந்தேன். சிறிது நேரத்தில் நான் மனதளவில் சோர்வாகிப் போனேன். எங்கிருந்தோ வந்த துக்கம் என்னைப் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து சில வினாடிகள் மீளமுடியாமல் அசைவற்று இருந்தேன். அந்த உணர்ச்சியை நிகழ்வை இன்று வரையில் மறக்க முடியவில்லை. வீட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவை எதுவும் நிரந்தரமான பிரச்சனை அல்ல என்று எனக்குத் தெரியும். இருந்தும் நூலை வாசிக்கும் போது அது உங்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அல்லது வருத்தமுறச் செய்கிறது அல்லது உங்களுக்கு புதிய உலகத்தைக் காட்டி விட்டுச் செல்கிறது என்றால் அதைவிடச் சிறப்பு வேறொன்றும் இருக்க முடியாது. இதைவிடச் சிறப்பாக ஒரு நாவல் வேற என்ன செய்துவிட முடியும் சொல்லுங்கள். தன்னை சுற்றி அன்பு காட்ட ஒருவர் இல்லாத பொழுது
ஒருவன் காதலில் விழுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? இந்த வாழ்க்கையில். காதலிலிருந்து நாம் பெற்றுக் கொள்வது என்பது மறக்க முடியாத நினைவுகளும், ஆறாத காயங்களும், வலிகளையும் தவிர வேற எதையும் அவற்றால் தர முடியாது என்பதை உணர்ந்த தருணத்தில் வாழ்க்கையின் விளிம்பில் நின்று கொண்டிருப்போம். அப்போதைய அந்தப் புரிதல் அந்த அனுபவம் பயனற்றதாகிவிடும். அந்த ஒரு வினாடியில் மரணத்தைத் தழுவி முடிவை எதிர்நோக்கி இருக்கும் ஒருவனின் கடைசி நொடிபோல ஆகிவிடும். பல முறை முயன்றும் மீளமுடியாத புதைகுழிக்குள் மாற்றிக்கொண்டு பிறகு ஞானம் வந்தால் என்ன அறிவு வந்தால் என்ன எல்லாம் மக்கிய குப்பையே. எத்தனை புரிதல் எத்தனை அனுபவம் எல்லாம் வந்த பிறகு எழுதுவதைக் காட்டிலும் வேற எப்படி இதைக் கடந்துவிட முடியும். அதனாலோ என் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நானே தூசி தட்டி பார்க்கிறேன். எந்த ஒரு வரையறையும் இன்றி முன்பின்னாக நினைவுகளை அடுக்கி எழுதிக் கொண்டே செல்லும் போது எனக்கு நானே நடந்த பல கதைகளைச் சொல்லிக்கொள்கிறேன். மீதமுள்ள வாழ்கையை; முடிந்து போன கதைகளிலிருந்து மீட்டுக் கொள்ள வழி தேடி அலையும் முயற்சியை செய்கிறேன்.
No comments:
Post a Comment