அபி இராவணன்

Saturday, January 1, 2022

சி.வை.தாமோதரம் பிள்ளை நினைவு தினம் இன்று - ஜனவரி 1, 1901


தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை 
தமிழர்கள் தமது தொன்மைக்கான சான்றுகளாக எடுத்து முன்வைக்கும் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்து பதிப்பாக வெளியிட்ட பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் ஆகியோரையே சாரும். 

இந்திய மொழிகளில் தமிழ் நூல் ஒன்றுதான் முதன்முதலாக அச்சாக்கம் பெற்றது என்பது வரலாறுகண்ட உண்மை; 1557 - ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சேறிய தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) எனும் சிறு நூல் போர்ச்சுக்கீசிய மொழி நூல் ஒன்றின் தமிழாக்கம். அதை அடுத்து முறையான நூல் பதிப்பை செய்த காரணத்தால் சி.வை.தாமோதரம் பிள்ளை ‘பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று புகழ்ந்துரைக்கப்பட்டார்.  

யாழ்ப்பாணத்தில் சிறுப்பிட்டி என்ற ஊரில் 1832 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த சி.வை.தாமோதரம்பிள்ளை, வட்டுக்கோட்டை செமினறி பாடசாலையில் கல்வி கற்றார். அதேவேளை, சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கண நூல்களை ஐயம் திரிபறக் கற்றுக் கொண்டார். இவருக்கு கணிதம், தத்துவம், வானவியல், அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்த பெருமையை வட்டுக்கோட்டைக் கல்லூரி தனதாக்கிக் கொண்டது.

இந்த நிலையில், 1857 ஆம் ஆண்டு சென்னையில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் கடல் கடந்து இந்தியா வந்த சி.வை.தாமோதரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இளங் கலைப் பட்டப்படிப்பில் இணைந்ததோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியாக வந்தார். 

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை
  ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் அவர்கள் வகுத்துள்ளனர்.

சி.வை.தா.வின் பதிப்புகள் வெளிவந்த காலத்தில் பாரதியார் அவரது பதிப்பு களைப் படித்துள்ளார். பாரதியார் தனது சுயசரிதையையே 'சின்னசங்கரன் கதை' என்று புனைகதையாகப் படைத்தவர். அக்கதையில் ஓரிடத்தில் பாத்திரவாயிலாக இவ்வாறு கூறுவார்.

''சென்னைப் பட்டணத்தில் சி.வை.தா. என்று மகாவித்துவான் இருந்ததாரே, கேள்விப்பட்டதுண்டா? அவர் 'சூடாமணி' என்னும் காவியத்தை அச்சிட்டபோது அதற்கெழுதிய முடிவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியேனும் கேட்டதுண்டா?'' இதன் மூலம் பாரதியார் சி.வை.தா.வின் பதிப்புகளைப் படித்தது மட்டுமல்லாமல் அவற்றின் மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.

சி.வை.தா. பதிப்பித்த நூல்களைக் கொண்டும், அவற்றுக்கு எழுதியுள்ள அரிய பதிப்புரைகளைக் கொண்டும் அவர் தம் பதிப்பு முறையை அறியலாம். அவர் எழுதிய பதிப்புரைகள் அனைத்தையும் தொகுக்கப்பட்டு 'தாமோதரம்' எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை சி.வை.தாவின் பதிப்புரைகள் அவ்வக் காலத்துத் தமிழ்ச் சரித்திரமாய் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையதனவாய் அமையும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது பதிப்புரைகளின் முக்கியத்துவத்தை நன்கு தெளிவுபடுத்துகின்றன.

''பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை. கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதஐயர்'' என்று பழந்தமிழ் வெளியீடுகள் பற்றித் திரு.வி.க குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத் தக்கது.

 பொதுவாய் ஒருவரைத் தாத்தா என்று அழைத்தால் அவர் தாய் வழித் தாத்தாவாகவோ இல்லை தந்தை வழித் தாத்தாவாகவோ இருப்பார். அப்பிடித் தாய்வழித் தாத்தாவான உ.வே.சா அவர்களை நாம் நன்கு அறிவோம். தந்தை வழித் தாத்தாவாய் இன்னொருவர் இருந்தார்  அவர்தான் "சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு'' என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார்.

 "ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...தொல்காப்பியக் கடலில் இறங்கினார்'' என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

 தமது 33-ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, "இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

 தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார்.

 பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார்.

 ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20-ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி' எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் லஷ்சிஸ்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி' க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871-இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை, நியாயப் பரிபாலன சபை போன்ற அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்தார். 

 எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20-ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார்.

 இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868-இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879-இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார்.

 நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். 

 இது மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும். 

மேலும், 
இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் பதினொன்று. அவற்றுள் இலக்கண நூல்கள் ஏழு. இலக்கிய நூல்கள் நான்கு. இலக்கண நூல்களின் பட்டியலில் வருபவை:
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையருரை (1868) 
வீரசோழியம் - மூலமும் பெருந்தேவனார் உரையும் (1881) 
இறையனார் அகப்பொருள் - நக்கீரருரை (1883) 
தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை , 3 பகுதிகள் (1885) 
இலக்கண விளக்கம் - (1889) 
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரை (1891) 
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் , நச்சினார்க்கினியருரை (1892) 

இலக்கிய நூல்களின் பட்டியலில் வருபவை 
நீதிநெறிவிளக்கம் - (1854) 
தணிகைப்புராணம் - (1883) 
கலித்தொகை - நச்சினார்க்கினியருரை (1887) 
சூளாமணி (மூலம் மட்டும்) (1889)

“தமிழ்நாடு முழுவதும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும் நான் தேடிக் கண்டவரை சிதிமலடைந்து இருந்தது, இன்னும் சில ஆண்டுகளுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, பயனுடைய வகையில் அச்சிடலானேன்” 

என்று அவர் தனது பதிப்புப் பணி ஆரம்பித்தமை குறித்து தெரிவித்தார்.

முற்காலத்தில் இலக்கியங்கள் பனையோலைகளிலேயே எழுதப்பட்டு வந்தன. சி.வை.தாமோதரம் பிள்ளை அவற்றைத் தேடிக் கண்டெடுத்து, அவற்றை ஆராய்ச்சி செய்து செம்மையான பதிப்புகளை வெளியிடுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார். அதனை அவரது பின்வரும் வரிகள் தெரிவிக்கின்றன.

“ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலா புறமும் சிதிலமடைந்து உள்ளது. பழைய சுவடிகள் யாவும் அழிந்து போகின்றன. எத்தனையோ அரிய நூல்கள் காலப்போக்கில் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? தமிழ் மாது நும் தாயல்லவா? இவள் அழிய நமக்கென்ன? என்று வாளாவிருக்கின்றீர்களே! தேசாபிமானம், பாஷாபிமானம் என்று இல்லாதவர் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக!”

“சொத்தைச் சேர்த்துவிடலாம், எழுத்தைச் சேர்ப்பது எளிதல்ல. மண்ணை அளந்து வரப்புகள் வகுத்துவிடலாம். பொன்னைப் போன்ற எழுத்துகளுக்கு அணைகட்டிப் பார்ப்பது முடியாத காரியம். கடுமையான உழைப்பு மட்டும் போதாது. ஆண்டவன் அருளும் இருந்தால் தான் அடுத்த ஓலை முன் ஓலைக்கு உண்மையாகவே அடுத்த ஓலையாக இருக்கும். இடம் பெயர்ந்து இருந்தால் இலக்கியம் உயிர் புரண்டு நிற்கும்”

மக்கள் பனை ஓலைச் சுவடிகளைப் பரண் மேல் வைத்திருந்தனர் .தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. தெரிந்தாலும் படிப்பார் இல்லை. பாதுகாப்பாரும் இல்லை. இவை போதாவென்று மூட நம்பிக்கையால், வீட்டுப் பரண்களில் கிடக்கும் ஓலைச் சுவடிகளை அள்ளி ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று ஆற்றிலும், பொங்கலுக்கு முதல் நாள் தீயிலும் போட்டு அழித்தனர்.மக்களுக்கோ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லை; செல்வர்க்கோ உதவ வேண்டும் என்ற மனமில்லை; " துரைத்தனத்திற்கோ அதன் மேல் இலட்சியமில்லை" என்று வருந்தினார் சி.வை.தா.

தமிழ் மொழியும் இலக்கியமும் வாழ்வதற்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்து, தமிழியலாய்வில் பதிப்பு என்ற தனித் துறையையே தொடங்கி வைத்த பெருமை சி.வை.தாமோதரம் பிள்ளைக்கே உரியது. தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதற்காக, தனது சொந்தப் பணத்தையும் அவர் செலவிட்டிருந்தார். பிறரிடம் கடன் வாங்கியும், பல தமிழ் நூல்களை அச்சேற்றிய கதைகளும் உண்டு. 

தனது பதிப்பில் பிழை கண்டு பிடித்தவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு பரிசும் அளித்து ஊக்கப்படுத்திய சி.வை.தாமோதரம் பிள்ளை, அடுத்த திருத்திய பதிப்பில் அந்தப் பிழையை திருத்தியும் வெளியிட்டிருந்தார். தமிழ்ப்பதிப்புப் பணியின் பிதமகர் என்றே தாமோதரம் பிள்ளையைச் சொல்லி விடலாம். “இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் உ.வே.சாமிநாதைய்யர், சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகிய இருவரும் போற்றப்படுவதற்கான காரணம் அவர்கள் பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் அனைத்திந்திய வரலாற்றுப் பின்புலத்தில் முக்கியமானவையாக அமைவதேயாகும்” என காலஞ்சென்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி இவர் குறித்து, கருத்துரைத்தார்.

'கட்டளைக் கலித்துறை', 'சைவ மகத்துவம்', 'சூளாமணி வசனம்', 'நட்சத்திர மாலை' ஆகிய நூல்களையும் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,

"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -

வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -

பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்

கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!"

என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.

ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் "எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!" எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை..

உ.வே. சா அவர்கள் சி.வை. தாமோதரனார் இறந்த பொழுது எழுதிய இரங்கற்பா:

"தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் - அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே"

அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875-இல் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901-ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள்,  (ஜனவரி -1) இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார். 

பல்கலைக்கழகங்களும் அரசாங்கமும் பலகாலமாக செய்ய வேண்டிய பெரும் தமிழ்ப்பணியை, தனியொரு மனிதராக நின்று செய்து முடித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர் மறைந்த போதும், அவர் ஆரம்பித்து தமிழ்ப் பதிப்புப் பணி, தனித்துறையாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பல பழந்தமிழ் நூல்கள் இன்று பலராலும் கற்கப்படுவதற்கும் ஆராயப்படுவதற்கும் ஆதார நிலையாக நிற்பது, தாமோதரம் பிள்ளையின் தியாகம் நிறைந்த பணி என்றால் அது மிகையில்லை.

No comments:

Post a Comment