அபி இராவணன்

Friday, January 28, 2022

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அறிந்து கொண்டேன். அந்த இராமாயணமே வேறு அதில் வரக்கூடிய இராமன், லட்சுமணன், அங்கதன், அனுமன், பரதன், சீதை, ராவணன் எல்லோருமே என் தாத்தாவின் வடிவத்திலேயே எனக்குக் காட்சியளித்தனர். அவர் சொல்லக் கூடிய கதைகள் என் சிறு வயதிலேயே எனக்கு ஒரு ஆர்வத்தையும் இராமாயணத்தின் மீது இனம்புரியாத ஓர் உறவையும் ஏற்படுத்திவிட்டது. டெல்லி  ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் இராமாயணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு தமிழக வில்லுப்பாட்டு இராமாயணத்தைத் தாய்லாந்து ராமாயணத்துடன் ஒப்பிட்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றேன். பலர் எழுதிய இராமாயணம் தொடர்பான ஆய்வுகள் நூல்களில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் ஏ.கே.ராமானுஜம் எழுதிய முன்னூறு ராமாயணங்கள், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட பவுலா ரிச்மெண் தொகுத்த மெனி இராமாயணாஸ்,  மணவாளன் அவர்கள் எழுதிய ராம காதையும் இராமாயணங்களும், அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய ராமன் எத்தனை ராமனடி  (நாட்டுப்புற ராமாயணம் கட்டுரைத் தொகுப்பு)களும்,  அதுமட்டுமல்லாமல் இவற்றிற்கெல்லாம் முன்பே எழுதப்பட்ட இராமாயண கருப்பொருள், ராமாயண நோட் போன்ற நூல்கள் மிக முக்கியமானவையாகும். 
 

இராமாயணம் என்ற பேர் இதிகாசம் நம் நாட்டினுடைய மிகப்பெரும் பேரிலக்கியம் என்று சொல்லி நாம் பெருமைப்படும் வகையில் நாம் ராமாயணத்தைப் புரிந்து கொண்டோமா அல்லது உள் வாங்கினோமா என்பது பெரிய வினாவாக இருக்கிறது. ராமாயணத்தை அதன் இயல்பை அப்படியே பார்க்காமல் பலர் தங்களது சூழ்ச்சிக்கு ஏற்ப அரசியல் லாபத்திற்கு ஏற்ப அதைப் பார்க்கிற ஒரு மனோபாவம் அதனுடைய உன்னதத்தை அதனுடைய பெருமையைத் தாழ்த்தி விடுகிறது. ராமாயணத்தை எந்த ஒரு அரசியல் பின்புலத்தில் நின்று வாசிக்காமல் இயல்பான அதன் போக்கிலேயே சென்று பார்த்தால் நமக்கு எண்ணிலடங்கா கதைகளையும் கிளைக் கதைகளையும் தன்னகத்தே கொண்டு மிகப்பெரும் ஒரு ஆச்சரியமாகத் திகழும். இன்றைய சூழலில் தவறானவர்களின் கைகளில் இராமாயணம் சிக்கித் தவிக்கிறது. அதனால் என்னவோ பலரும் இராமனையும் இராமாயணத்தையும் வெறுக்கவே செய்கின்றனர். இராமாயணத்தைப் படிப்பதும் ஏதோ தவறாக எண்ணப்படுகிறது. ஆய்வு உலக சூழலிலும் இதே நிலைதான். இன்றைய காலத்தில் தன்னை பெரும் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட செவ்விலக்கியங்களில் ஆய்வு செய்வதோ அல்லது செவ்விலக்கிய சார்ந்த ஒரு படைப்பை மட்டுமே முன்னிறுத்துவது எப்படி ஒரு முழுமையான இலக்கிய ஆய்வாக ஒரு மொழியில் அமையும். அந்த மொழிகளில் இருக்கக்கூடிய பன்முகத்தன்மை கொண்ட பலவகையான இலக்கியங்களையும் பல்வேறு ஆய்வு பார்வைகள் மூலம் ஆராயும் ஒரு உயர்ந்த சிந்தனை இங்கு உருவாகாத பட்சத்தில் ஆய்வு வளர்ச்சி அதனுடைய பங்கு என்பது இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று போகக் கூடிய சூழலில் தான் இன்றைய பல்கலைக்கழகங்களும் ஆய்வுப் போக்குகளும் அமைந்துள்ளன. இப்படியான சூழலில் இராமாயணத்தைப் புரிந்துகொள்ள இராமாயணத்தைப் பற்றிய தேடல்களை முன்னெடுக்கின்ற அனைவருக்கும் நன்றி. தொடக்கத்தில் இராமாயணத்தைப் பற்றிய மிகப்பெரிய பார்வையை இன்று நேற்று அல்ல கம்பன் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அவரவர் போக்கில் அவரவர் பார்வையில் இராமாயணங்கள் இந்த உலகத்தில் அறிமுகம் செய்து அவற்றிலும் குறிப்பாக நாட்டுப்புற இராமாயணங்கள், செவ்விலக்கிய ராமாயணங்கள் என்ற இரு நிலைகளிலும் இராமாயணத்தின் இடம் அளப்பரியது. வால்மீகி, கம்பன் எழுத்தச்சன், துளசிதாசர் இன்னும் எத்தனையோ படைப்பாளிகள் இராமாயணத்தை எடுத்து எழுதி தங்களுக்குப் பெருமை தேடிக் கொண்டனர் என்பது உண்மை. அதைப்போல இராமாயணத்தின் உண்மைத்தன்மையைத் தேடி ஆய்வுலகில் பொது தளத்திலும் தங்களுக்கான தனித்த இடத்தையும் பலரும் தக்க வைத்துக்கொண்டனர் என்பதும் உண்மை. வருங்கால தலைமுறையினர் இராமாயணத்தை காவி இலக்கியமாக பார்க்காமல் அதனை இலக்கியமாக ஆய்வுப் பொருளாகக் கொண்டு அதனுடைய பரந்துபட்ட பார்வையை மக்களின் பண்பாட்டை, மொழியை இன்னும் சொல்வதென்றால் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து வெளிப்படுத்துவார்கள் அதனுடைய தொடக்கம் தொடங்கி விட்டது.

Saturday, January 15, 2022

ஆர்.என்.ஜோ டி குருஸ் எழுதிய "யாத்திரை"

காலந்தோறும் சிந்தனை மாற்றமும் ஆன்ம தேடலும் புதிய வடிவங்களில் தொடர்ந்துகொண்டே வருகின்றன.
அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவகையில் 
மனிதர்கள் தாங்கள் உணர்ந்துகொண்ட அல்லது அறிவுத் தேடலை அதன்வழி உணர்ந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் கடத்திவிட்டுப் போகிறார்கள். இயேசு, புத்தர் இவர்கள் வரிசையில் இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள் தாங்கள் உணர்ந்ததை,  அல்லது தங்கள் அடைந்து ஞானத்தை இந்த உலக  உயிர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல நிலைகளில் வாழ்ந்து காட்டியும் பதிவு செய்தும் சென்றுள்ளனர். ஞானம் என்பது வெளி தேடுதல் அல்ல உள்முகத் தேடல் என்று கூறுவார்கள். அப்படியான ஒரு ஆன்ம விசாரணையை நாம் இந்த நாவலில் பார்க்கலாம். 
ஆர்.என்.ஜோ டி குருஸ் எழுதிய "யாத்திரை" என்ற நூல் பல நிலைகளில் நம் அறிவை நம் ஆன்ம சாளரத்தைத் திறக்கும் சாவியாக விளங்குகிறது. 

ஒரு நாவலில் அப்படி என்ன செய்துவிட முடியும்? இல்லை என்னதான் சொல்லிவிடமுடியும் ? என்ற வினா எழுவது இயல்பு. என் வாசிப்பு அனுபவத்தில் இப்படியான ஒரு நூலை இதற்கு முன் வாசித்தது இல்லை. 

வாழ்வின் எதார்த்தம், முன்னோர்கள் வழிபாட்டின் அவசியம், மிகப்பெரிய நிறுவனமாகிப் போன சமயம், அரசியல் மற்றும் ஆன்ம தேடல், உயிரின் ரகசியம் எனப் பலவிதமாக விரியும் தேடல்களின் பயணமாக இந்நூல் விளங்குகிறது. 

மனித அறிவுக்கு எட்டிய வரையில் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தி நாம் பரிசோதித்து அதில் சில வெற்றிகளை அடைந்தாலும், இன்னும் தொடமுடியாத தூரங்களை எண்ணிலடங்கா சூட்சமங்களைக் கற்பனைக்கு எட்டாத ஞான ஒளியைத் தொட்டுவிட முயலும் முயற்சி  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  அதன் தொடர்ச்சி இந்நாவலில் காணலாம். இந்நாவலை வாசிக்கையில் வாசகனுக்கும் நாவலுக்கும் இடையில் நிகழும் ஒரு வேதியில் மாற்றம் அது அது என்ன என்று தெரியாமல் குழம்பும் மனநிலை  அந்த ரசவாதத்தைக் கண்டடையத் துடிக்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மிக எளிமையாக இதை உணர்ந்து கொள்ள முடியும். இந்நாவல் வெறுமனே கற்பனைகளும் சொற் குவியலாகவோ இல்லாமல் ஒரு கடலைப் போலப் பிரமாண்டமாகவும் ஆழமாகவும் அமைதியாகவும் காட்சி அளிக்கிறது. 
ஒரு எழுத்தாளனுக்கு அதுவும் இந்த உலகத்தில் இந்த சூழலில் இது எப்படிக் கைவரப் பெற்றது என்ற வியப்பும் ஆச்சரியமும் எழுவது இயல்புதான்.

எத்தனையோ கதைகளை வாசித்து இருந்தாலும் ஒரு உண்மையான சத்தியமான தன் வரலாற்று நூலை வாசிப்பது போன்ற ஓர் உணர்வு. 

ஒரு மனிதனின் கடந்தகால நிகழ்கால எதிர்கால நிலையை எப்படி இலக்கியத்தில் கொண்டுவரமுடியும் என்ற ஒரு பெரும் வினா என்னுள் எழுகிறது. எத்தனையோ மனிதர்கள் மண்ணில் தோன்றி நான் யார்? என்ற வினாவை எழுப்பி அதற்கான விடையாக மௌனத்தை அளித்துச் சென்றுள்ளனர். அந்த மௌனத்தின் உரையாக இந்நாவலை என்னால் பார்க்க முடிகிறது. 

சாதாரணமாக ஒரு எழுத்தாளனால் இப்படியான ஒரு படைப்பைக் கொண்டு வருவது சாத்தியமற்றது. அதிலும் குறிப்பாக இம்மாதிரியான படைப்புகளை வாசித்து அதில் கரைந்து போவது என்பதும் சாத்தியமற்றது. ஏனென்றால் இன்றைய சூழலில் மனிதனின் எதிர்பார்ப்பு லட்சியம் இவையெல்லாம் வேராக இருக்கிறது. இந்த நாவலை யாரால் உணர்ந்துகொள்ள முடிகிறதோ? அவர்கள் அனைவரும் படைப்பாளனின் மனநிலையோடு ஒத்தவர்களாகக் கருதிக் கொள்ளலாம்.

ஒரு வாசகன் அந்த படைப்பாளன் மனநிலையில் நின்று வாழ்ந்துவிட்டுச் செல்வது. வாசகனுக்குக் கிடைத்த பெரும்பேறு.

நாம் ஒரு எழுத்தாளன் ஆகிவிட முடியும் 
அரசியல்வாதி ஆகிவிட முடியும் தொழிலதிபராக ஆகிவிட முடியும் ஆனால் மனிதனாக இருப்பது கடினம்.

கடலோடிகள் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் சவால்களையும் மேலும், சமயத்தின் பெயரால் நிகழ்ந்த கொடுமைகள், அரசியல்வாதிகளின் போலி முகங்கள்  என தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத சூழலில் அன்றாட பிழைப்பிற்கு உயிரைப் பணையம் வைத்து கடலுக்குள் சென்று வரும் இவர்களின் வாழ்க்கை எந்த வகையிலாவது உயர்ந்து விடாதா? அல்லது நாம் உயர்த்திவிட மாட்டோமா? என்ற ஏக்கம் கொண்டவனின் கதை. அவன் வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமந்துகொண்டே போலி சமய அரசியலில் இருந்து சிக்காமல் வழிகளைத் தேடி அலையும் சாதாரண மனிதனாக இருக்கிறான். இந்த உலக வாழ்க்கையிலிருந்துகொண்டே 
(லவ் ஹிக 
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே) இதைக் கடக்க நினைப்பது எவ்வளவு பெரிய மன உளைச்சலையும் வாழ்க்கைப்  போராட்டத்தையும் அவன் எதிர் கொள்கிறான் என்பதை எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.

உண்மையில் இந்த உலகம் ஒரு சிறை நாம் அனைவரும் சிறைவாசிகள். இந்த சிறையிலிருந்து விடுபட முதலில் நாம் நம் மனச் சிறையிலிருந்து விடுபட வேண்டும். நம் ஆன்மாவை எப்பொழுதும் உன்னதமானதாக பரிசுத்தமானதாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான மனித விடுதலை என்பது சாத்தியம் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் மனதிற்குள் ஆணி அறைந்தார் போல் சொல்லிச் செல்கிறது. 

கடவுள் என்பது என்ன? அறிவு என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? கற்பிதம் என்றால் என்ன? ஆன்மா என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? ஞானிகள் என்பவர்கள் யார்? ஆன்மாவை பார்ப்பது எப்படி? என பல கேள்விகளுக்கு விடையாகவும் இந்நாவல் விளங்குகிறது. 

ஒரே படைப்பில் ஆதரவாகவும் முரண்பாடாகவும் அந்த முரண்பாட்டிற்கு விளக்கமாகவும் மாறி மாறி நின்று விளக்குவது என்பது வானில் பல மாயசாலங்களைச் செய்யும் இந்திரசித்தின் அம்புகளைப் போல் படைப்பாளரின் படைப்பாளுமை திறன் இங்கு வெளிப்படுகிறது. 

எழுத்தாளர் ஆக விரும்புவோர். 
எழுத நினைக்கும் எவர்க்கும் ஒரு வழிகாட்டியாகவும். சமூகத்தில் எதை நாம் எழுத வேண்டும் ஏன் எழுத வேண்டும் அதன் அவசியம் என்ன? எழுத்தாளரின் பணி என்ன? இலக்கியத்தின் பணி என்ன? அது யாருடைய குரலாக இருக்க வேண்டும்? என்பதை உணர்ந்துகொள்ள நிச்சயம் இந்நூல் கைகொடுக்கும். 

Saturday, January 1, 2022

சி.வை.தாமோதரம் பிள்ளை நினைவு தினம் இன்று - ஜனவரி 1, 1901


தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை 
தமிழர்கள் தமது தொன்மைக்கான சான்றுகளாக எடுத்து முன்வைக்கும் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்து பதிப்பாக வெளியிட்ட பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் ஆகியோரையே சாரும். 

இந்திய மொழிகளில் தமிழ் நூல் ஒன்றுதான் முதன்முதலாக அச்சாக்கம் பெற்றது என்பது வரலாறுகண்ட உண்மை; 1557 - ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சேறிய தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) எனும் சிறு நூல் போர்ச்சுக்கீசிய மொழி நூல் ஒன்றின் தமிழாக்கம். அதை அடுத்து முறையான நூல் பதிப்பை செய்த காரணத்தால் சி.வை.தாமோதரம் பிள்ளை ‘பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று புகழ்ந்துரைக்கப்பட்டார்.  

யாழ்ப்பாணத்தில் சிறுப்பிட்டி என்ற ஊரில் 1832 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த சி.வை.தாமோதரம்பிள்ளை, வட்டுக்கோட்டை செமினறி பாடசாலையில் கல்வி கற்றார். அதேவேளை, சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கண நூல்களை ஐயம் திரிபறக் கற்றுக் கொண்டார். இவருக்கு கணிதம், தத்துவம், வானவியல், அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்த பெருமையை வட்டுக்கோட்டைக் கல்லூரி தனதாக்கிக் கொண்டது.

இந்த நிலையில், 1857 ஆம் ஆண்டு சென்னையில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் கடல் கடந்து இந்தியா வந்த சி.வை.தாமோதரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இளங் கலைப் பட்டப்படிப்பில் இணைந்ததோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியாக வந்தார். 

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை
  ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் அவர்கள் வகுத்துள்ளனர்.

சி.வை.தா.வின் பதிப்புகள் வெளிவந்த காலத்தில் பாரதியார் அவரது பதிப்பு களைப் படித்துள்ளார். பாரதியார் தனது சுயசரிதையையே 'சின்னசங்கரன் கதை' என்று புனைகதையாகப் படைத்தவர். அக்கதையில் ஓரிடத்தில் பாத்திரவாயிலாக இவ்வாறு கூறுவார்.

''சென்னைப் பட்டணத்தில் சி.வை.தா. என்று மகாவித்துவான் இருந்ததாரே, கேள்விப்பட்டதுண்டா? அவர் 'சூடாமணி' என்னும் காவியத்தை அச்சிட்டபோது அதற்கெழுதிய முடிவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியேனும் கேட்டதுண்டா?'' இதன் மூலம் பாரதியார் சி.வை.தா.வின் பதிப்புகளைப் படித்தது மட்டுமல்லாமல் அவற்றின் மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.

சி.வை.தா. பதிப்பித்த நூல்களைக் கொண்டும், அவற்றுக்கு எழுதியுள்ள அரிய பதிப்புரைகளைக் கொண்டும் அவர் தம் பதிப்பு முறையை அறியலாம். அவர் எழுதிய பதிப்புரைகள் அனைத்தையும் தொகுக்கப்பட்டு 'தாமோதரம்' எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை சி.வை.தாவின் பதிப்புரைகள் அவ்வக் காலத்துத் தமிழ்ச் சரித்திரமாய் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையதனவாய் அமையும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது பதிப்புரைகளின் முக்கியத்துவத்தை நன்கு தெளிவுபடுத்துகின்றன.

''பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை. கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதஐயர்'' என்று பழந்தமிழ் வெளியீடுகள் பற்றித் திரு.வி.க குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத் தக்கது.

 பொதுவாய் ஒருவரைத் தாத்தா என்று அழைத்தால் அவர் தாய் வழித் தாத்தாவாகவோ இல்லை தந்தை வழித் தாத்தாவாகவோ இருப்பார். அப்பிடித் தாய்வழித் தாத்தாவான உ.வே.சா அவர்களை நாம் நன்கு அறிவோம். தந்தை வழித் தாத்தாவாய் இன்னொருவர் இருந்தார்  அவர்தான் "சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு'' என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார்.

 "ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...தொல்காப்பியக் கடலில் இறங்கினார்'' என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

 தமது 33-ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, "இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

 தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார்.

 பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார்.

 ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20-ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி' எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் லஷ்சிஸ்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி' க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871-இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை, நியாயப் பரிபாலன சபை போன்ற அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்தார். 

 எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20-ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார்.

 இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868-இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879-இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார்.

 நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். 

 இது மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும். 

மேலும், 
இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் பதினொன்று. அவற்றுள் இலக்கண நூல்கள் ஏழு. இலக்கிய நூல்கள் நான்கு. இலக்கண நூல்களின் பட்டியலில் வருபவை:
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையருரை (1868) 
வீரசோழியம் - மூலமும் பெருந்தேவனார் உரையும் (1881) 
இறையனார் அகப்பொருள் - நக்கீரருரை (1883) 
தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை , 3 பகுதிகள் (1885) 
இலக்கண விளக்கம் - (1889) 
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரை (1891) 
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் , நச்சினார்க்கினியருரை (1892) 

இலக்கிய நூல்களின் பட்டியலில் வருபவை 
நீதிநெறிவிளக்கம் - (1854) 
தணிகைப்புராணம் - (1883) 
கலித்தொகை - நச்சினார்க்கினியருரை (1887) 
சூளாமணி (மூலம் மட்டும்) (1889)

“தமிழ்நாடு முழுவதும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும் நான் தேடிக் கண்டவரை சிதிமலடைந்து இருந்தது, இன்னும் சில ஆண்டுகளுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, பயனுடைய வகையில் அச்சிடலானேன்” 

என்று அவர் தனது பதிப்புப் பணி ஆரம்பித்தமை குறித்து தெரிவித்தார்.

முற்காலத்தில் இலக்கியங்கள் பனையோலைகளிலேயே எழுதப்பட்டு வந்தன. சி.வை.தாமோதரம் பிள்ளை அவற்றைத் தேடிக் கண்டெடுத்து, அவற்றை ஆராய்ச்சி செய்து செம்மையான பதிப்புகளை வெளியிடுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார். அதனை அவரது பின்வரும் வரிகள் தெரிவிக்கின்றன.

“ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலா புறமும் சிதிலமடைந்து உள்ளது. பழைய சுவடிகள் யாவும் அழிந்து போகின்றன. எத்தனையோ அரிய நூல்கள் காலப்போக்கில் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? தமிழ் மாது நும் தாயல்லவா? இவள் அழிய நமக்கென்ன? என்று வாளாவிருக்கின்றீர்களே! தேசாபிமானம், பாஷாபிமானம் என்று இல்லாதவர் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக!”

“சொத்தைச் சேர்த்துவிடலாம், எழுத்தைச் சேர்ப்பது எளிதல்ல. மண்ணை அளந்து வரப்புகள் வகுத்துவிடலாம். பொன்னைப் போன்ற எழுத்துகளுக்கு அணைகட்டிப் பார்ப்பது முடியாத காரியம். கடுமையான உழைப்பு மட்டும் போதாது. ஆண்டவன் அருளும் இருந்தால் தான் அடுத்த ஓலை முன் ஓலைக்கு உண்மையாகவே அடுத்த ஓலையாக இருக்கும். இடம் பெயர்ந்து இருந்தால் இலக்கியம் உயிர் புரண்டு நிற்கும்”

மக்கள் பனை ஓலைச் சுவடிகளைப் பரண் மேல் வைத்திருந்தனர் .தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. தெரிந்தாலும் படிப்பார் இல்லை. பாதுகாப்பாரும் இல்லை. இவை போதாவென்று மூட நம்பிக்கையால், வீட்டுப் பரண்களில் கிடக்கும் ஓலைச் சுவடிகளை அள்ளி ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று ஆற்றிலும், பொங்கலுக்கு முதல் நாள் தீயிலும் போட்டு அழித்தனர்.மக்களுக்கோ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லை; செல்வர்க்கோ உதவ வேண்டும் என்ற மனமில்லை; " துரைத்தனத்திற்கோ அதன் மேல் இலட்சியமில்லை" என்று வருந்தினார் சி.வை.தா.

தமிழ் மொழியும் இலக்கியமும் வாழ்வதற்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்து, தமிழியலாய்வில் பதிப்பு என்ற தனித் துறையையே தொடங்கி வைத்த பெருமை சி.வை.தாமோதரம் பிள்ளைக்கே உரியது. தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதற்காக, தனது சொந்தப் பணத்தையும் அவர் செலவிட்டிருந்தார். பிறரிடம் கடன் வாங்கியும், பல தமிழ் நூல்களை அச்சேற்றிய கதைகளும் உண்டு. 

தனது பதிப்பில் பிழை கண்டு பிடித்தவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு பரிசும் அளித்து ஊக்கப்படுத்திய சி.வை.தாமோதரம் பிள்ளை, அடுத்த திருத்திய பதிப்பில் அந்தப் பிழையை திருத்தியும் வெளியிட்டிருந்தார். தமிழ்ப்பதிப்புப் பணியின் பிதமகர் என்றே தாமோதரம் பிள்ளையைச் சொல்லி விடலாம். “இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் உ.வே.சாமிநாதைய்யர், சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகிய இருவரும் போற்றப்படுவதற்கான காரணம் அவர்கள் பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் அனைத்திந்திய வரலாற்றுப் பின்புலத்தில் முக்கியமானவையாக அமைவதேயாகும்” என காலஞ்சென்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி இவர் குறித்து, கருத்துரைத்தார்.

'கட்டளைக் கலித்துறை', 'சைவ மகத்துவம்', 'சூளாமணி வசனம்', 'நட்சத்திர மாலை' ஆகிய நூல்களையும் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,

"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -

வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -

பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்

கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!"

என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.

ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் "எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!" எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை..

உ.வே. சா அவர்கள் சி.வை. தாமோதரனார் இறந்த பொழுது எழுதிய இரங்கற்பா:

"தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் - அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே"

அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875-இல் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901-ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள்,  (ஜனவரி -1) இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார். 

பல்கலைக்கழகங்களும் அரசாங்கமும் பலகாலமாக செய்ய வேண்டிய பெரும் தமிழ்ப்பணியை, தனியொரு மனிதராக நின்று செய்து முடித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர் மறைந்த போதும், அவர் ஆரம்பித்து தமிழ்ப் பதிப்புப் பணி, தனித்துறையாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பல பழந்தமிழ் நூல்கள் இன்று பலராலும் கற்கப்படுவதற்கும் ஆராயப்படுவதற்கும் ஆதார நிலையாக நிற்பது, தாமோதரம் பிள்ளையின் தியாகம் நிறைந்த பணி என்றால் அது மிகையில்லை.