Saturday, May 2, 2020

குட்டி இளவரசன்

குட்டி இளவரசன்
அந்துவான் து செந்த் - எக்சுபெரி
பிரெஞ்சிலிருந்து தமிழில் ச. மதனகல்யாணி
வெ. ஶ்ரீராம்
முதல் பதிப்பு - 1943
கில்மார்ட் பிரஸ் - 1946
தமிழில் முதல் பதிப்பு - 1981

தமிழ் இலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் வருகையும் அவற்றின் வாசிப்போம் பெருகிய காலகட்டத்தில் எத்தனையோ படைப்புகள் பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களில் சிறப்பான ஒரு இடத்தை பெற்றுள்ளது இந்நாவல் என்பதைப் பலரும் ஒப்புக்கொள்வர். 

இந்நாவல் குழந்தைகளுக்கான நாவல் என்ற பார்வையிலிருந்து சற்று விலகி வளர்ந்துவிட்ட பெரியவர்கள் மீது வைக்கும் மிகக் கடுமையான ஒரு குற்றச்சாட்டாகவே என்னால் பார்க்க முடிகிறது. வளர்ந்துவிட்ட பெரியவர்கள் குழந்தைகளாக இருந்த போது உண்மையானவர்களாகவும், போலித்தனங்கள் அற்றவர்களாகவும், வாழ்க்கையில் எந்த ஒன்றும் இவர்களைப் பாதிப்பதில்லை, அதேவேளையில் அசட்டுத்தனமான குறும்புத்தனமான செயல்களை எந்தவொரு விருப்பு வெறுப்பும் இன்றி செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள். பெரியவர்களாகி அறிவாளிகளாக தங்களைக் கருதிக்கொண்டு வாழ்வில் இவர்கள் நடத்தும் நாடகங்களை அவர்களே அதை உன்னதமான நாடகங்களாகக் கருதி வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, ஒரு பார்வையில் அப்படிப் போகிற போக்கில் பல கேள்விகளை அவர்கள் முன்னே வீசிவிட்டுச் செல்கிறான் இந்த குட்டி இளவரசன். 

நாவல் எழுதப்பட்ட சூழல் நூலாசிரியரின் மனநிலை அன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் ஒருபக்கம் கருத்தில் கொண்டு இந்நாவலை வாசித்தால் ஒரு அற்புதமான விளக்கம் நமக்குக் கிடைக்கக் கூடும்.

உலகப் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படைப்பு வெறும் பொழுதுபோக்காக எழுதப்பட்டதாகக் கருதுவதற்கு இதிலுள்ள செய்திகள் இடம் தரவில்லை காரணம் வாழ்க்கையை உணர்ந்த வாழ்வின் உன்னதத்தை உணர்ந்த ஒரு மகத்தான படைப்பாளனால் மட்டுமே இப்படியான ஒரு நூலை எழுதக் கூடும்.

உலகில் எத்தனையோ பெரியவர்கள் மகான்கள் ஞானிகள் தத்துவங்களை அள்ளி இறைத்து விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை நாம் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் தட்டுத்தடுமாறி அவற்றைப் புரிந்து கொள்ள முற்பட்டு உடைந்து போகும் மனநிலையோடு அவற்றை எல்லாம் நாம் சேகரித்து வாழ்வின் புரிதலை நோக்கி நகர்த்த முற்படுவோம்.  அதுவே மனதை இயக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த இயக்கம் படைப்பாகத் தத்துவமாக அறிவியலாகத் தோன்றுகின்றன.

மனித மனத்தின் எல்லாக் கூறுகளையும் ஆராய்ந்தோமானால் அது இயல்புக்கு எதிரான ஒரு இயங்கியலை வரையறுத்துக் கொண்டு அதனைச் சுற்றியே இயங்க முனைகிறது. சில நேரங்களில் இயற்கை நமக்கு நம் இயங்கியல் விதியை நினைவூட்டினாலும் அதற்கு மாறான திசையில் இயங்கி வெற்றி அடையவே மனித மனம் ஆசை கொள்கிறது. அவற்றை எல்லாம் விடுத்து இயற்கையின் இயங்கியல் விதிகளுக்கு உட்பட்டு நாம் இயங்க வேண்டும் என்ற ஒரு புரிதலைக் குட்டி இளவரசன் நமக்குச் சொல்லிச் செல்கிறான் என்பதாகத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

"கண்களால் தேடாதீர்கள் இதயங்களால் தேடுங்கள்"

 'குட்டி இளவரசன்' (The Little Prince). பிரெஞ்சு மொழியில் 1946-ம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல் 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நாவல் பல இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

குட்டி இளவரசன் நாவல், ஆறு ஆண்டுகளுக்கு முன் தான் சந்தித்த தன் நண்பனைப் பற்றி நினைவாக எழுதுகிறான் ஒரு விமானி. 

அவன் பயணித்த விமானம் பழுதடைந்து, பாலைவனத்தில் விழுகின்றது. யாருமே இல்லாத அந்த இடத்தில் இறந்து போகப் போகிறோம் எனும் அச்சம் அவனைச் சூழ்கிறது. அந்த நேரத்தில் ஒரு சிறுவனின் குரல் கேட்கிறது. பிறகு, விமானிக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையேயான பயணம் என்பதாக நாவல் விரியும். நாவலில் குறிப்பிடும் சம்பவம் எக்சுபெரி வாழ்வில் நடந்தது.

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி 1900-ம் ஆண்டு, பிரான்ஸில் பிறந்தார். அவரின் சின்ன வயது ஆசை ஒரு ஓவியனாக வரவேண்டும் என்பதே ஆனால் இராணுவத்தில் வீரனாக ஒருவிமானியாக ஆனார். நாவலாசிரியர், கவிஞர், விமானி, பத்திரிகையாளர் எனும் பல முகங்கள் இவருக்கு உண்டு. தனது 26-ம் வயதில் The Aviator எனும் இவரது சிறுகதை நூலை வெளியிட்டார். பின்னாளில் அமெரிக்காவின் நேஷனல் புக் விருது பெற்ற Wind, Sand and Stars எனும் நூலை 1939-ம் ஆண்டு எழுதினார்.

எக்சுபெரியை புகழின் உச்சியில் ஏற்றிய The Little Prince எனும் சிறுவர் நாவலை 1943ம்ஆண்டு வெளியிட்டார். இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு, இதே பெயரில் 1974-ம் ஆண்டு ஆங்கில மொழியில் திரைப்படம் வெளிவந்தது. டிவி தொடர்களாக ஒளிபரப்பானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட அனிமேஷன் திரைப்படமாக்கப்பட்டது. பல்வேறு குழுக்களால் நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

உலகமே கொண்டாடும் அந்த நாவலை எழுதிய அடுத்த ஆண்டே தனது பயணத்தை முடித்துக்கொண்டார் எக்சுபெரி. இரண்டாம் உலகப்போரில் 1944-ம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்தில் இவரின் விமானம் திடீரென்று தொடர்பு அற்றுப்போனது.

குட்டி இளவரசன் எனும் மகத்தான நாவலைக் கெளவரவப்படுத்தும் விதத்தில் பிரெஞ்சு அரசு 1994ல் 50 ஃபிராங் நோட்டைக் குட்டி இளவரசன் ஓவியத்தோடு அச்சிட்டுள்ளது. இந்த நாவல் குழந்தைகளுக்கானது என்று கூறப்பட்டாலும். பெரியவர்கள், ராஜாக்கள், அறிவாளிகள், பிஸ்னஸ்மேன்கள், புவியியலாளர்கள், குடிகாரர்கள் அனைவரும் ஒரு புதுவித தரிசனத்தை நிச்சயம் உணர்வார்கள் அதுவே படைப்பின் மகத்துவம்.

மொழிபெயர்ப்பாளர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஒரு சமயம் பிரஞ்சுப் பேராசிரியர் ச. கல்யாணியை அவரது இல்லத்தில் சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அப்போது அவரிடம் எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். நாங்களும் புதுச்சேரி காரர்கள் என்பதால் அவரும் புதுச்சேரியில் வசிக்கிறார் என்பதால் அவரை சந்திக்க எளிதாக முடிந்தது. நிறைய விஷயங்களைப் பேசினோம் அதில் குறிப்பாகக் குட்டி இளவரசன் மொழிபெயர்ப்பைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மனம் வருத்தமற்ற நிலையில் அவர் சில செய்திகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டார் 1981ம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பு தமிழில் வந்தது அதில் மதனகல்யாணி அடுத்து வெ. ஸ்ரீராம் என்று இருந்ததைச் சுட்டிக்காட்டி, நூலாக வெளிவந்ததைக் கூறி பழைய பதிப்பு ஒன்றை எங்களிடம் காட்டினார் பின்னாளில் வெ.ஸ்ரீராம் தன் பெயரை முன்னாள் போட்டுக் கொண்டு அவர் பெயரை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றதாகவும் அதை அவரை மிகவும் பாதித்ததாகவும் கூறி மிகுந்த வருத்தப்பட்டார். கூலிக்காக பெரும் பங்கு வகித்தவர் என்ற காரணத்தினால் வருத்தப்பட்டுக் கொண்டார். அது தொடர்பாக கிரியா பதிப்பகத்தாரிடம் பேசியதாகவும் அதற்கு அவர்கள் கடிதம் மூலம் பதில் அளித்ததாகவும் பல செய்திகளையும் மனவருத்தத்தோடு அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். இது இங்குத் தேவையில்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்வுகள் தமிழ்ப் படைப்புலகில் சகஜமாக நிகழ்வது வருத்தமளிக்கிறது.

அபி இராவணன்

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...