Thursday, April 22, 2021

"நீலப்படம்"

#நீலப்படம்


#லஷ்மிசரவணகுமார்

இரண்டாம் பதிப்பு 2019


நீலப்படம் என்ற "யாருக்கும் சொல்லாத கதை"யைதான் ஆசிரியர் பகிரங்கமாகச் சொல்கிறார்.

நாவலின் பொதுப் புத்தி வரையறையைக் கடந்து இதுவரை பேசப்படாத அல்லது விதிமீறலான அல்லது விதி விலக்கான அல்லது புறநடையான கோட்பாட்டில் எழுதப்பட்ட கதை என்ற  தன்மையில் வைத்துக்கொண்டுதான் அணுக முடிகிறது இந்நாவலை.

எந்த ஒரு சமூகத்திலும் விதிகளும் விதி விளக்குகளும் கலந்தே இருக்கும். அதுவே அச்சமூகத்தின் இயல்பாகும். அப்படியான  விதி விலக்குகள் வகுக்கப்பட்டாலும் அவை வழக்கில் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அவை மையமானதாக இருந்ததில்லை. அப்படியான சமூகத்தில் தொலைந்து போன பலநூறு கதைகளில் நீலப்படமும் ஒன்று.

தனிமனித அந்தரங்க வாழ்க்கை என்பது அந்த சமூகத்தின் உண்மையான முகம் என்று கூறலாம்.

அப்படியான அந்தரங்க கதைகள்தான்  உண்மையின் மிக அருகாமையில் இருக்கக்கூடிய கதைகள். இச்சமூகத்தின் தோலை உரித்துக் காட்டக்கூடிய முதன்மையான ஒன்றாகும்.

தன்வரலாறுகள் பெரும்பாலும் அந்தரங்க வாழ்கையை அவ்வளவு எளிதில் படம் பிடித்துக் காட்டுவதில்லை. அதன் சுயத்தை வெளிக்காட்ட அனுமதிப்பதில்லை. இதிலிருந்து விதி விலக்கான நீலப்படம் பட்டை தீட்டப்படாத ராவான ஒரு கதை. உண்மையில் ஒரு பெண்ணின் அந்தரங்க கதை. அதில் அவள் தன்னை மறைக்கவோ புனிதமாக் காட்டவோ இல்லாமல் இயல்பான மனநிலையை வெளிப்படையாக தன் உடலைப் போலவே உள்ளதை உள்ளபடி காட்டிவிட்டு  இச் சமூகத்தின் முகத்திலும் பார்வையிலும் காரி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறாள்.

நீலப்படம் தற்கால திரைத்துறையின் கதையை பேசுவதாகவும் அதே சமயத்தில் திரைமறைவில் பெண்கள் மீது இச்சமூகம் நடத்திய அல்லது நடத்திவரும் வன்முறையை, வன்மத்தை அப்பட்டமாகப் பேசக்கூடிய நாவலாக எழுந்துள்ளது.

இக்கதையில் வரும் ஆனந்தி; சத்யா என்ற பாப்பு போன்ற மனுஷிகள் இன்னுமும் பாபு போன்ற மிருகங்களிடம் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் அகப்பட்டு நசுங்கி மூச்சுத்திணறியே அன்றாடமும் போராட்டத்துடனே வாழ்கையை கடத்தி வருகின்றனர் என்பதற்கு உதாரணமாக நீலப்படத்தைக் கைகாட்டலாம். என்றாலும் பெண்ணின் இருப்பையும் அவளின் வலிமையையும் நிலை நாட்ட முடியும் என்றும் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.

லஷ்மி சரவணகுமார் உண்மையில் அதி அற்புதமான கதையை மிக நேர்த்தியாக வரைந்துள்ளார். கயிற்றில் நடப்பதுபோல மிகக் கவனமாக இந்நாவலைப் படைத்துள்ளார். சிறிய கவனக்குறைவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஒரு படைப்பாளியின் சமூக அக்கறையை இதைவிடச் சிறப்பாக வெளிக்காட்டிவிட முடியாது.

கதைக் களம் மிகச் சுவாரஸ்யமான ஒன்று. இதை வாசிக்கையில்  இம்மாதிரியான படைப்புகளை அங்கிருந்து அதை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை இச்சமூகத்திற்கு இருக்க வேண்டும். நம் சமூகம் உண்மையில் உயர்வடைய ஒருவழி உண்மையை உயர்த்தி பிடிப்பது மட்டுமே.


அபி இராவணன்

22.04.2021

11.38 pm

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...