Monday, April 26, 2021

விருந்தாளி

ஆல்பெர் காம்யு
விருந்தாளி

தமிழில் : க.நா.சு

இந்த கதை 1958இல் பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் 1957யில் இலக்கியத்திற்காக நோபல் பரிசை பெற்றவர்.

மிகச்சிறிய கதை கொலைக்குற்றம் செய்த ஒருவனுக்கும் (அரேபியன்) இந்தக் கதையில் வரும் பால் டுச்சி (போலிஸ்காரன்) மற்றும்  பள்ளி ஆசிரியர் டாரு விற்கும் நிகழும் ஒருநாள் நிகழ்வே கதையாக அமைந்துள்ளது.

ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர் பதற்றமான சூழலில் அனைவரும் போர் வீரர்களாகச் செயல்பட வேண்டிய சூழலில் ஒரு பள்ளி ஆசிரியர் எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டிய சூழல் நிலவக்கூடிய காலகட்டத்தில் நடந்தேறிய கதைக்களம்.

விருந்தாளி என்ற தலைப்பில் ஒரு கைதியின் பயணத்தை அதிலும் ஒரு நாள் நிகழ்வை விவரித்திருப்பது மட்டும் இங்குப் பேசுபொருள் இல்லை.

அக்டோபர் மாதத்தில் பணிபொழியக்கூடிய அந்த சமயத்தில் மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதை இக்கதை வழி உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் கதையின் ஊடே பசி, பட்டினி, பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அவஸ்தை நினைத்தாலும் தாங்கிக்கொள்ள முடியாதவை.

மிகக் கொடுமையான மனநிலை கொண்ட மனிதர்களாக இருந்தனர் என்பதை வாசிக்கையில் அறியலாம்.

அப்படியான சூழலில் மனிதர்கள் அதைக் கடந்து சென்ற பிறகும் கூட துயரமிகு நினைவுகள் வடுக்களாக மனதில் சுமந்து கொண்டு வாழும் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அப்படியான வாழ்க்கை இவர்களுடையது.

அதை எண்ணிப் பார்க்கையில் தற்கால சூழல் அவ்வளவு மோசமாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டு மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நிம்மதிப் பெருமூச்சுடன்  நடத்திக் கொண்டிருந்தனர் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையின் ஆசிரியர்.

கதையில் வரக்கூடிய கொலையாளியான அரேபியன் ஒரு வார்த்தை கூட எங்கும் பேசவில்லை. கொலைக்கான காரணம் முகம் சுளிக்கக் கூடியது. மனிதர்கள் இன்னமும் சிறிய விஷயங்களுக்கு ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்குவதும் கொலை செய்வதும் அருவருக்கத் தக்க வை டாரு வழி ஆசிரியரின் உள்ளத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு படைப்பாளன் என்பவன் யாராலும் எண்ணிப்பார்க்க முடியாத அல்லது பிரம்மாண்டமான பேசு பொருள்களை மட்டுமே படைக்க வேண்டும் என்று இல்லை. மிகச்சிறிய நுட்பமான தன் அனுபவத்தைக் கூட எழுதலாம். மிகச் சிறிய விடயங்களையும் சிந்தித்துப் படைப்புகளாக உருவாக்கும் போது அதன் வழி உண்மையில் மிகப்பெரிய ஒரு பேருண்மையை இந்த சமூகத்திற்குக் கூறிவிடுகிறான்.

ஆடம்பர இலக்கியங்களைக் காட்டிலும் சமூகத்திற்குத் தேவையான அல்லது சமூக மாற்றத்திற்குத் தேவையான படைப்புகளை எளிய கதைக் களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்குவதே மிக முக்கியம். அதைத் தவிர்த்து ஆயிரம் பக்கங்கள் விரிந்த வெற்று புனைவுகளைக் காட்டிலும் ஒரு சில பக்கங்களில், ஒரு சில வினாடிகள் தோன்றும் மின்னலின் ஒளியைப் படம் பிடித்துக் காட்டி விட்டுச் செல்வது ஆகச் சிறந்த படைப்பாகும். 

அப்படியான ஒரு ஒளியை விருந்தாளி என்ற கதையில் அந்த தரிசனத்தை முழுமையாக நாம் உணரலாம். க.நா.சு வின் மொழிபெயர்ப்பு அதற்கு பெரும் துணையாக அமைந்திருக்கிறது.

அபி இராவணன்
27.04.2021
12:12 am

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...