Wednesday, May 12, 2021

டெல்லி புறப்பாடு - 6

டெல்லி புறப்பாடு - 6
அன்றிரவு ஏனோ எனக்குச் சரியாக உறக்கம் வரவில்லை. என் அறைக்கு எதிரில் உள்ள வராண்டாவில் நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தேன். எனது அரை முதல் மாடியிலிருந்தது. எதையோ யோசித்த வண்ணமே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெரும் கூச்சல் எனது அறையின் எதிரில் உள்ள அறையில் மாணவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என்பது பின்பு தெரிந்தது. ஆண்களும் பெண்களும் கூச்சலும் கும்மாளமும் ஆக மகிழ்ச்சியாக இருந்ததை அவர்கள் எழுப்பிய பேரிரைச்சல் சொல்லியது. பல நேரம் யோசித்ததுண்டு. நல்லவேளை அந்த அறையில் நான் இல்லை. என்னால் இவற்றை எல்லாம் சகித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும். நீண்டநேர கூச்சலுக்குப் பிறகு ஒவ்வொருவராக குளியலறைக்கு ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் கேக் திட்டு திட்டாகப் பூசி இருந்ததைப் பார்த்தேன். பிறந்தநாள் கொண்டாடியவனின் முகம் முழுவதும் கேக் வழித்து விட்டது போலிருந்தது. மூக்கு, வாய், கண், காது என எல்லா இடங்களிலும் அப்பிக் கிடந்தது. கழிவறைக்கு சென்று திரும்பியவர்கள் மீண்டும் ஓடிப் பிடித்து ஒருவர் முகத்தில் ஒருவர் கேக்கை பூசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். இதையெல்லாம் பார்த்தபடியே அமைதியாக கைப்பேசியைப் பார்த்த வண்ணம் அசையாமல் சுவரின் மீது ஒட்டிய பல்லியைப் போலச் சாய்ந்து கொண்டு நின்றிருந்தேன். "பையா" என்று இந்தி பேசும் பீகாரைச் சேர்ந்த "விநய்" என்னை அழைத்தான். ஏற்றெடுத்துப் பார்த்தேன். என் அருகே வந்து இரண்டு துண்டு கோக்குகளைக் கொடுத்துவிட்டுச் சென்றான். வேண்டாமென்று சொல்வதற்குள் என் கையில் வைத்து விட்டான். இரவு மணி 12 க்கு மேல் இருக்கும். கேக்கை கொண்டு போய் என் அறையின் மேசையின் மீது உள்ள தட்டில் வைத்துவிட்டு மீண்டும் வெளியில் வந்தேன். அப்போது ஒரு பெண் என் எதிரில் தோன்றினாள்.  மிக நீளமான கூந்தல் மற்றும் கூரிய மூக்கு நல்ல சிவப்பான நிறம் அதற்கு ஏற்றார்போல மிக நேர்த்தியான ஆடையென பார்ப்பதற்கு மிக அழகான ஒரு பெண். ஏனோ தெரியவில்லை அவளைப் பார்ப்பதற்காகவே நான் மீண்டும் இரண்டு முறை நடந்தேன். என் எதிரில் உள்ள அறையைக் கடந்து சென்றேன். எதைப்பற்றியும் சிந்தனையின்றி நெடுநேரம் நின்றிருந்ததால் கால்கள் சற்று வலிக்கத் தொடங்கியது. அப்படியே நடந்து ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கிச் சமையல் கூடத்திற்கு வந்தேன். அங்கு ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த படியே நடந்து சென்றேன்.  இந்த நள்ளிரவில் அப்படி என்னதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசனையில் நடந்து கொண்டே வெளியில் வந்தேன். இரவு பணியில் காவல் இருக்கும் ஒரு வட இந்தியர் நல்ல உயரம் பார்ப்பதற்கு ஆள் வாட்டசாட்டமாக இருப்பார். நான் ஒவ்வொரு முறையும் அவரை கடந்து செல்லும் பொழுதெல்லாம் என்னை பார்த்து அவர் புன்முறுவலுடன் இந்தியில் விசாரிப்பார். நானும் பதில் சொல்லிவிட்டு வெளியில் சென்று விடுவேன். அன்று இரவு அவர் அரைத் தூக்கத்திலிருந்தார். நான் அவரை கடந்து வெளியில் வந்ததை அவர் கவனிக்கவில்லை. இரவில் எந்த நேரமும் விடுதியிலிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும் மாணவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது. என் விடுதியிலிருந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்தால் "கங்கா தாபா" வந்துவிடும் அங்கு இரவு முழுவதும் கடைகள் திறந்திருக்கும். நீங்கள் நினைப்பது போல அல்ல கடை என்றால் முள் மரங்கள் நிறைந்த ஒரு பகுதி என்றாலும் அமர்ந்து உணவருந்த சிறுசிறு கற்கள் பாறைகள் இருந்தன. இயற்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத சூழல் எத்தனை முறை அங்குச் சென்றாலும் சலிப்பு ஏற்படுவதில்லை எனக்கு. அங்கு எந்த நேரத்திற்குச் சென்றாலும் ஆண்களும் பெண்களும் கூட்டமாக அமர்ந்து எதையாவது வாங்கி சாப்பிட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுவாக அங்குதான் அரசியல் குறித்து பேச்சுகள் அதிகம் நடக்கும். அந்த தேநீர்க்கடையின் அருகே ஒருவர் சிறிய பெட்டிக் கடையை வைத்திருந்தார். அதில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். பார்ப்பதற்குத்தான் அது பெட்டிக்கடை. சிவந்த குண்டான ஒரு மனிதர். குண்டு என்றால் அவ்வளவு குண்டானவரல்ல அவர். அவரை "பிட்டு பாய்"  என்றே பலரும் அழைத்தனர். அவர் எப்போதும் சிரித்த முகத்தோடு அவர் கடையைத் தாண்டி செல்லும் பொழுதெல்லாம் தலையசைப்பார். மாணவர்களின் பெரும்பாலான அன்றாட பொருட்களின் தேவைகளை அந்த பெட்டிக் கடை தான் தீர்த்து வைத்தது. செல்போன் ரீசார்ஜ் முதல் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பாடி ஸ்பிரே, சிறிய பூட்டு, மடிக்கணினி பாதுகாக்கக்கூடிய வயர் லாக் என எது கேட்டாலும் அங்கு கிடைக்கும். சாப்பிடுவதற்குத் தின்பண்டங்கள் என ஒரு மினி டிபார்ட்மென்டல் ஸ்டோர் போல காட்சி அளிக்கும் அந்த பெட்டி கடை. பெட்டிக் கடையைச் சுற்றி தார்ப்பாய் வைத்தான் மூடியிருப்பார். அவரிடம்தான் டெல்லி சென்றதும் எம்.டி.என்.எல் சிம்கார்டு வாங்கினேன். பலமுறை அவரிடம் ரீசார்ஜ் செய்து இருக்கிறேன். ஒருமுறை ரீசார்ஜ் செய்து விட்டு என் பையைப் பார்க்கும் பொழுது பர்சை எடுத்து வர மறந்து விட்டேன். அப்போது அவர் பரவாயில்லை அடுத்த முறை கொடுங்கள் என்று கூறினார். அன்று முதல் எங்கள் இருவருக்குமான ஒரு தொடர்பு உருவானது. "பிட்டு பாய்" கடை அருகில் ஒர் ஆரம்பச் சுகாதார நிலையம் அங்கு இணைய (wifi) வசதி உண்டு. அதனால் மாணவர்கள் அதைச் சுற்றி அமர்ந்து கொண்டு கைப்பேசியில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் எப்பொழுதெல்லாம் "கங்கா தாபா"விற்குச் சொல்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் நண்பனுக்கு போன் செய்து அழைப்பேன். அவனும் வருவான். இருவரும் "வெஜ் ரோல்" இரண்டு "மொசம்பி" அல்லது "டீ". இவற்றில் எதையாவது வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அப்பொழுது எங்கள் பல்கலைக்கழகத்தில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்திருந்த சமயம். 
நம் ஊர்களில் நடக்கும் தேர்தல் போல அவ்வளவு பரபரப்புடன் மாணவர்கள்  அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பார்கள். இரவு முழுவதும் கூட்டங்கள் நடக்கும் மாணவர்கள் யாராவது ஒலிபெருக்கியில் அரசியல் குறித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதுமட்டுமல்ல எங்கள் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடக்காத நாட்களே இல்லை என்று கூறலாம். மாதக்கணக்கில் போராட்டங்கள் தொடர்ந்து இருக்கின்றன. மேலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஒன்றாகக்கூடி பல்கலைக் கழகத்தை எதிர்த்து ஆங்காங்கே கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள். இதற்கு வெளியிலிருந்து பெரும் தலைவர்கள் பெரும் பேச்சாளர்கள் எல்லாம் வந்து பேசிச் செல்வார்கள். ஒரு முறை இந்தி திணிப்பு பற்றி வட இந்தியர்கள் குறிப்பாக சில பேராசிரியர்கள் பேசியது உண்மையில் வியப்பளித்தது. அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண் பேராசிரியர் இந்தியை எதிர்த்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் கலந்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று தமிழில் ஒரு பழமொழி போல ஒன்றை கூறினார் "ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க ஊர் தேவடியா ஹிந்தி" எதற்கு என்று கூறினார். எனக்கு மிகவும் ஆச்சரியம், அதை இந்தியிலும் ஆங்கிலத்திலும் அங்கிருந்தவர்களுக்கு விளக்கிக் கூறினார். வட இந்திய மாணவர்கள் பலரும் கைதட்டியது எனக்கு மேலும் வியப்பை அளித்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை மணி அப்போது இரவு 2.30 இருக்கும் நண்பனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

ரோட்டு ஓரங்களில் குளிர் தாங்க முடியாமல் குப்பைகளுக்கு மத்தியில் தெருநாய்கள் சுருண்டு படுத்து இருந்தன. எனது விடுதிக்கு வந்ததும் வெளியில் அந்த காவலாளியும் மற்றும் சில மாணவர்களும்  நெருப்பில் குளிர் காய்ந்த படியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்து அவர் ஒரு புன்முறுவல் செய்தார். நானும் பதிலுக்கு ஒரு புன்முறுவல் செய்துவிட்டு உள்ளே சென்றேன். என் அறைக்கு வந்ததும் எத்திரிலுள்ள அறையை நோட்டம் விட்டேன். இன்னும் சிலர் வந்திருப்பது தெரிந்தது. இரவு முழுவதும் ஆடலும் பாடலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர். அந்தப் பெண் வராண்டாவில் கையில் சிகரெட்டுடன் நின்றுகொண்டு தன் சக நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாள் ஒவ்வொரு பேச்சுக்கும் இடையில் புகையை உள்ளிழுத்து வெளியே ஊதிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்காகவே இரண்டு முறை நடந்து கழிவறைக்குச் சென்று வந்தேன். இரண்டாவது முறை கழிவறைக்குச் செல்லும் பொழுதுதான் யாரோ ஒருவர் அங்கு வாந்தி எடுத்து வைத்திருப்பதைக் கண்டேன். முகச்சுளிப்புடன் மூக்கை பொத்திக்கொண்டு வந்தேன். அந்த அழகான பெண் என்னை ஒருமுறை ஏறெடுத்து பார்த்துவிட்டு மீண்டும் புகைக்கத் தொடங்கினாள். அவளை ஒரு முறை நூலகத்தின் ஐந்தாவது மாடியில்  பார்த்த ஞாபகம் வரவே அப்போது நடந்த ஒரு சிறு சம்பவம் என் நினைவிற்கு வந்தது. எனது எதிரில் நாற்காலியில் அமர்ந்திருந்தவள். மிகத்தீவிரமாக மடிக்கணினியில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தாள்.  அவளை நோட்டம் விட்டபடியே நான்  எனது நாற்காலியில் அமர்ந்திருந்தேன். இலக்கியம் தொடர்பான நூல்கள் ஐந்தாவது மாடியில் உள்ளன. அங்குத் தமிழ், உருது, ஹிந்தி நூல்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. தமிழ் பகுதிக்குச் சென்று ஏதோ ஒரு நூலைத் தேடிக்கொண்டிருந்த ஞாபகம். ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சி தான். இருந்தாலும் மற்ற மொழிகளுக்கு உள்ள அளவில் தமிழ்ப் புத்தகங்கள் அங்கில்லை. அப்பொழுது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து மேசை மீது அமர்ந்து எனது மடிக் கணினியைத் திறந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் எழுந்து நடந்து செல்லும் பொழுது என்னை அறியாமல் என் கண்கள் அவளைப் பின்தொடர்ந்தன. அவள் பார்ப்பதற்குச் சற்று வித்தியாசமாகத் தோற்றமளித்தாள். தலை முடியை ஒன்றாகச் சுற்றி ஒரு முனிவரைப் போல ஜடாமுடி ஆக ஆக்கி வைத்திருந்தாள். அதுமட்டுமன்றி அவள் கழுத்தில் தெரியும்படியாக பச்சை குத்தியிருந்தாள் கைகளிலும் கூட.மேலே மிகச்சிறிய மேலாடையும் ஒரு ஜீன்ஸ் பேண்டையும் அணிந்திருந்தாள். இரண்டு முறை என்னைக் கடந்து சென்று நூல்களை எடுத்து வந்து அமர்ந்தாள். எனது கண்கள் ஏனோ அவளை மட்டுமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. வேறு எதைப்பற்றியும் மனம் சிந்திக்கவில்லை. அவள் நிச்சயம் வட இந்தியப் பெண் அல்ல  என்று என் மனம் தீர்க்கமாக சொல்லியது. வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் போலத் தோற்றமளித்தாள். அவள் யாருடனோ கைப்பேசியில் பேசும் பொழுது இந்தியிலோ ஆங்கிலத்திலோ பேசவில்லை. வேறு ஏதோ ஒரு மொழிள் பேசிக் கொண்டிருந்தாள் என்பது மட்டும் எனக்கு விளங்கியது. இதற்கு இடையில் ஆய்வுக் கட்டுரையை எழுதுவதற்கு சில புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அன்று மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு  என்னுடைய மடிக்கணினியை எடுத்துக்கொண்டு ஐந்தாவது தளத்திலிருந்து கீழே வருவதற்கு லிப்டில் ஏறினேன். என்னுடன் அவளும் வந்தாள்.  மிக அமைதியாக இருவரும் தரை தளம் வரும் வரை காத்திருந்தோம். கதவு திறந்ததும் அவள் வெளியே சென்றாள். நானும் வெளியே சென்றேன். அதற்குப் பிறகு அவளை ஒரு நாளும் நான் நேரில் சந்திக்கவில்லை.  இப்படி நான் கடந்து போன மனிதர்கள் ஏராளம்.  அவர்களை இனி வாழ்வில் மீண்டும்  எப்பொழுதும் சந்திக்கப் போவதில்லை. சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இன்று அவளின் முகம் கூட எனக்கு சரியாக நினைவில்லை. அந்த ஒளி குறைந்த இருட்டில் ஒரு நிழல் போல அவள் உருவம் மட்டுமே என் நினைவில் ஆடுகிறது.

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...