டெல்லி புறப்பாடு -5
நான் படித்த பல்கலைக்கழகம் ஒரு பன்முக சூழலைக் கொண்டது. மாணவர்கள் பொதுவாக ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் இருக்கக்கூடிய இலக்கியங்களை ஒப்பாய்வு செய்வதுதான் அவர்களின் ஆய்வாக பெரும்பாலும் இருக்கும் இந்த முறை எங்களுக்கு முன்பிருந்த ஆய்வு மாணவர்களுக்கு ஒரு மூத்த பேராசிரியர் காட்டிய வழியாகும். அதனையே பின்பற்றி அதற்குப் பிறகு வந்தவர்களும் அப்படியே ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும் மாணவர்களுக்கு வழி காட்டவும் செய்தார்கள். அப்படியான சூழலில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, கொங்கணி, உருது போன்ற மொழிகளில் உள்ள இலட்சியங்களைத் தமிழோடு ஒப்பிட்டு எங்களுடைய சக மாணவர்கள் ஆய்வரங்கில் கட்டுரைகளை வாசிப்பது வழக்கம். அப்படி வாசிக்கும் பொழுது புதிய வேற்றுமொழி நாவலாசிரியர்களைப் பலரை அறிந்து கொள்ள ஒரு பெரு வாய்ப்பாக அமைந்தது அப்பொழுதுதான்.அந்த சமயத்தில் தான் தமிழில் உள்ள மிக முக்கியமான நாவல்கள் பற்றியும் சிறிது அறிந்து கொண்டேன். என் நெறியாளர் நவீன இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது வீட்டிற்குச் செல்லும் பொழுதெல்லாம் ஏராளமான தமிழ் நாவல் வாசிப்பு பார்த்து அதிசயித்தேன். அப்போதிலிருந்து நான் கூர்ந்து பார்க்கத் தொடங்கினேன். நாவல்களை வாசிப்பது அது தொடர்பான உரையாடல்களை நிகழ்த்துவது அவருக்கு இஷ்டமான ஒரு பணி. அத்தோடு திரைப்படத்தையும் ஒரு கலை இலக்கிய பார்வையில் விமர்சிப்பது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. எனக்கு ஏனோ திரைப்படத்தின் மீது அப்படியான ஒரு நாட்டம், விமர்சனப் பார்வை வரவில்லை அப்பொழுது. ஆனால் நாவலை வாசிக்கும் பழக்கமும் நாவல்களை சேகரிக்கவும் ஆர்வம் ஏற்பட்டது. நாவல் பற்றி பல விஷயங்களை என் பேராசிரியரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். ஆசிரியர்கள் நம்மிடம் எதையும் பாடமாக நடத்த வேண்டாம். அவர்கள் அவர்களாக அவர்களது பணிகளைச் செய்தால் போதும். அதுவே நமக்கு மிகப்பெரிய பாடமாக அமையும். நம்மை அவர்கள் போல நடக்கவும் நம்மில் உள்ள ஒருன்று நம் மனதைத் தூண்டிவிடும் என்பதை என் வாழ்வில் நான் கண்ட ஒரு பெரும் உண்மை. இப்படி தான் தமிழில் உள்ள நாவல்களைப் பற்றியும் திரைைப்படம் பற்றியும் அவர் பேசும் பொழுது நிறையக் கவனித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான நாவலாசிரியர்களின் நாவல்களை இங்கு குறிப்பாக பட்டியலிட விரும்புகிறேன். அதன் பிறகே எனக்கு நாவல் மீது ஒரு மிகுந்த ஈடுபாடு உருவானது தற்போது கீழே உள்ள பட்டியலில் பெரும்பாலான நாவல்களை வாசித்து விட்டேன் என்ற பெருமை எனக்கு உண்டு. பொதுவாகத் தொடக்கத்தில் இலக்கியத்தை அவ்வளவாக நான் விரும்பியதில்லை. தன் வரலாறுகளை மட்டுமே வாசிக்க விரும்பியது என் மனம் ஏனோ அதற்கான காரணம் இன்னும் விளங்கவில்லை.
தமிழின் முதல் தன்வரலாறு எது ? முதல் தலித் தன்வரலாறு எது ? என்ற பிரச்சனை நீண்ட காலமாக உண்டு. அதைப் பற்றி இப்போது பேசவில்லை...
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் புனைவுகளை வாசிப்பதைவிட தன்வரலாறுகளை மிகவும் விரும்பி வாசிக்கத் தொடங்கினேன். அதனால் நிறைய நூல்களைத் தேடித் தேடி பல நூறு ரூபாய் செலவு செய்து கடினப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வைத்து சுமார் நூறுக்கும் அதிகமான புத்தகங்களைச் சேகரித்து வைத்தேன். என் வீட்டு நூலகத்தில். இன்றுவரை கூட தன்வரலாறுகளைத் தேடி அலைகிறேன். சில தன்வரலாறு நூல்களை நான் புத்தகக் கண்காட்சிகளில் பார்த்தும் கூட என்னால் வாங்க முடியாமல் மன வருத்தத்துடன் வீடு திரும்பியதும் உண்டு காரணம் அப்போது போதிய பணம் கையில் இல்லாததே... இப்படியாக தன் வரலாறுமீது நாட்டம் வரவே...
அதனைத் தொடர்ந்து தன்வரலாறுகள் பற்றிய கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என எல்லாவற்றையும் படித்தேன் சேகரித்தும் செய்தேன்... அப்படி வாசிக்கத் தொடங்கி நாள் முதல் இன்று வரை தன்வரலாறுகளை விரும்பி சேகரித்து வருகிறேன்...
பொய்யான கற்பனைக் கதையைவிட உண்மையான கதை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அது நடந்தக்கதை. சொந்த அனுபவம். என்பதாலே அதன் மீது ஒருபற்று ஏற்பட்டது. தன்வரலாறு எழுதுவதற்கு உண்மையில் துணிவு வேண்டும்... உண்மையை அப்படியே தோல் உரித்துக் காட்ட எல்லோராலும் முடியாது...
அதன் பிறகு தமிழில் தன்வரலாறுகள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். 200க்கும் மேற்பட்ட தன்வரலாறுகளைப் பற்றிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டேன். அதில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்து சேர்ந்தது. அந்த பட்டியலில் நான் பெயரளவில் மட்டுமே அறிந்த பல நூல்களில் ஒன்று தான் இந்த தன்வரலாறு.
இரட்டைமலை ஆர். சீனிவாசன் அவர்கள் எழுதிய
"ஜீவிய சரித்திர சுருக்கம்"
எங்குக் கிடைக்கும் என்று தேடியது உண்டு. மனதில் ஆழப் பதிந்து கிடந்தது ஒரு நூல்.
திடீரென இந்த நூலை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகக் கடையில் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. இந்த அறிய நூலை மறுபதிப்பு செய்த ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்தார்க்கும் என் நன்றிகள்.
இப்போதுதான் தெரியவருகின்றன... அறிய நூல்களின் அவசியமும் மறுபதிப்புகளின் தேவையும்.
இப்போது முழுமையாக நாவல் பக்கம் திரும்பி இருக்கிறேன்.
உலகத்தரம் வாய்ந்த நம்மூர் இலக்கியம்
முக்கியமான நாவல்கள்:
ஜெயகாந்தன் கதைகள் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சிலநேரங்களில் சில மனிதர்கள், ஜெயமோகன் எழுதிய ரப்பர், காடு, ஏழாம் உலகம், கொற்றவை,
எம்.ஜி சுரேஷ் எழுதிய அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், யுரேகா என்றொரு நகரமும்,
எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம் போன்றவையும்,
சாருநிவேதா ஜீரோடிகிரி,
வாமு கோமுவின் கள்ளியும், யுவன் சந்திரசேகரின் குள்ள சித்தன் சரித்திரம், கானல்நதி, பகடையாட்டம்,
ஜேடி..குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலும்,
பூமணியின் வெக்கை, பிறகு நாவலும்,
சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை,
பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி,
ஹெப்சிபா ஜேசு நாதனின் புத்தம் வீடு,
லா.ச.ராமாமிருதம் சிந்தா நதி,
எம்.வி.வெங்கட்ராமனின் காதுகள், பாலகுமாரன் கதைகள்,
சா.கந்தசாமியின் சாயாவனம்,
தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு,
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்,
தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணத் தெரு, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கல்கியின் அலையோசை, மகுடபதி,
கண்மணி குணசேகரன் அஞ்சலை,
டி.செல்ராஜியின் தோல்,
இமயம் எங்கத, செடல்,
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்,
பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை,
அருணனின் பூருவம்சம், சுதேசமித்திரனின் காக்டெய்ல், ஆஸ்பத்திரி,
தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள்,
ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளே, குறத்தி முகடு, சோலை சுந்தர
பெருமாளின் குருமார்கள்,
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்,
நாஞ்சில் நாடனின் தலைகீழ்விகிதங்கள், சூடிய பூ சூடற்க,
வண்ணநிலவனின் கடல்புறத்தில்,
ஆதவனின் காகித மலர்கள்,
அகிலனின் சித்திரப் பாவை,
கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடம்,
நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள்,
அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள்,
பெருமாள் முருகனின் மாதொருபாகன், அர்தனாரி ஆலவாயன், பூக்குழி, கழிமுகம், சோ.தர்மனின் சூல்,
சம்பத்தின் இடைவெளி.
சிறுகதைத் தொகுப்பு:
ஆதவன், நகுலன்,
புதுமைபித்தன்,
வண்ணதாசன், வண்ணநிலவன்,
சுந்தர ராமசாமி,
இமையம்,
அம்பை,
தி.ஜானகிராமன்,
கி.ராஜநாராயணன்,
நாஞ்சில் நாடன்,
அ.முத்துலிங்கம்,
பிச்சமூர்த்தி,
கோணங்கி,
எஸ்.ராமகிருஷ்ணன்,
அசோகமித்ரன்,
பிரபஞ்சன்,
ச.தமிழ்செல்வன்,
மெளனி,
கு.அழகிரிசாமி.
ஆகிய ஆசிரியர்களின் தொகுப்புக்களை நம்பி வாங்கிப் படிக்கலாம்...
புகைப்படம் இந்திய மொழிகள் பள்ளி (CIL -II), ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி.