அபி இராவணன்

Thursday, May 28, 2020

"சிதம்பர நினைவுகள்"

"சிதம்பர நினைவுகள்"

மலையாளம் மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

தமிழில்: கே.வி ஷைலஜா

நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். கடவுள் பற்றிய சிந்தனையோடு தனிமையில் அமர்ந்து கொண்டு யோசிக்கும் ஒருவனைப் போல நான் சிதம்பரம் நினைவுகளை இப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்த புத்தகம் வாசிக்க எனக்குக் கிடைத்தது என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நிச்சயம் இதை வாசிக்காமல் நான் கடந்து போயிருந்தால் என்னவோ எனக்குத் தான் இழப்பு. ஏதோ ஒரு புண்ணிய பலனால் நூலை வாசித்து முடித்துவிட்டேன். இரண்டு நாட்களாகவே எந்த புத்தகத்தையும் வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. எத்தனை முறை புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டிக் கொண்டு இருந்தாலும் மனம் எதனுள்ளும் உள்ளே நுழைய மறுத்து நின்றது. 
பகல் பொழுது முழுக்க கோடை வெப்பத்தில் களைத்துப் போயிருந்த மனம் இரவில் விழித்து இருந்தபோது கையில் எடுத்து வாசிக்கத் தூண்டியது. எங்கிருந்தோ வந்த ஒர் அற்புத உணர்வுடன் வாசிக்கத் தொடங்கினேன்... வாசிக்கத் தொடங்கினேன்... மீண்டும்...வாசித்துக் கொண்டே இருந்தேன்.... உள்ளே செல்ல செல்ல ஏதுமற்ற ஒரு மனநிலையோடு நாமே பாதிக்கப்பட்ட ஒரு உணர்வோடு நிகழ்வில் நாமே வாழ்ந்து கொண்டிருப்பது போல ஒர் உணர்வு. 
சில நேரங்களில் கண்களில் வழியும் நீரை இடது கையால் துடைத்துக் கொண்டு பல நேரங்களில் மூர்ச்சையாகி கனத்த இதயத்துடன் அன்பு செலுத்தியவர்களை விட்டுப் பிரிந்த தறுவாயில் உள்ள ஒரு மனநிலையோடு ஒவ்வொரு பகுதியையும் கடந்து செல்கையில் மனம் தனிமையை உணர்ந்தது. ஏதுமற்ற ஒரு சூன்யம் என்னைச் சூழ்வதை என்னால் உணரமுடிந்தது.

யதார்த்த வாழ்வில் காமம், காதல், வலி, பிரிவு, பாசம், மரணம் எனக் கடந்து செல்கையில் இவற்றில் ஒன்றையேனும் வாசிப்பவர் நிச்சயம் வாழ்வில் அனுபவித்த இருப்பார். அதை நாமே நம் மனத்திரையில் காணும்பொழுது ஒருகணம் உயிர் உருகி கண்களில் வெளியே சிந்து விடும் என்று தோன்றும் மனநிலை. எல்லாவற்றையும் கடந்து வாழ்வின் கதையை எழுதுவது அவ்வளவு சுலபமானது அல்லது எல்லோராலும் செய்யக்கூடியதும் அல்ல பெரிய காரியம் அது. இப்படி வாழ முடியுமா? அப்படி வாழ்ந்த மனிதனை ஒரு நிமிடம் நினைத்தால்... ஐயோ நினைக்கவே கொடுமை... பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உண்மையில் கவிஞர் மட்டுமல்ல அவர் நம் மனங்களின் மனசாட்சி சில நேரம் நாமே பாலச்சந்திரனாக வாழ்ந்திருக்கிறோம் என்ற ஒரு மனநிலையில் இருக்கும்போது. என்னை உண்மையில் புரட்டிப் போட்டுவிடுகிறது இதை வாசிக்கையில். எந்த ஒரு நூலும் வாசகனை அடித்துப் பிழிந்து துவைத்துக் காயப்போடும் என்றால் அது உண்மையில் மனசாட்சியின் குரலாகத்தான் இருக்கும். அப்படியான படைப்பில் மிக முக்கியமானது "சிதம்பர நினைவுகள்" வாழ்வில் ஒரு முறையேனும் இந்த புத்தகத்தை நாம் வாசித்துக் கடந்து விட வேண்டும். ஏன் என்றால் நம்மால் நம் கதையை இவ்வாறு எழுதும் வாய்ப்பு கிட்டாமல் போகலாம் மேலும் ஒவ்வொரு படைப்பிலும் நம் மனத்தின் பிரதிபலிப்பை நாம் உணர முடியும் என்றாலும் உண்மையில் அதர்க்கும் ஒரு படி மேலே சென்று நம் ஆத்மாவை மீண்டும் ஒருமுறை புனித நீரில் கழுவி நம்மை மனிதனாக்குகிறது இந்நூல். வாசிப்பவர்கள் ஒரே குரலில் இப்படிச் சொல்வார்கள் மொழிபெயர்ப்பு என்று கூறும் நிலையிலிருந்து விலகி தனித்தன்மையோடு எளிய நடையோடு விளங்குகிறது இம் மொழி பெயர்ப்பு. மேலும், எல்லா உணர்வுகளையும் ஒரே சீரான எழுத்தில் விரசமின்றி ஆடம்பர கூச்சலின்றி ஒரு காதலன் தன் காதலியை அணுகுவது போல மிக யதார்த்தமாக அழகான அதேவேளையில் அதுவரை அறியாத  ஏதோ ஒரு உணர்வை இம்மொழி பெயர்ப்பில் கலந்து கதையைக் கொண்டு செலுத்தியதை உணரமுடிகிறது. இது இவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளது. ஷைலஜா அவர்கள் மேலும் இப்பணியில் தொடரவேண்டும் அவருக்கு எல்லா நிலையிலும் துணையாக இருப்போம் வாழ்த்துக்கள் கூறுவோம்.

#அபி இராவணன்

Monday, May 25, 2020

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை


ஃபெர்னாடோ ஸோரன்டினோ
# தமிழில் எம்.எஸ்

மிகச்சிறிய நூல் 11 சிறுகதைகள் மட்டுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில சிறுகதைகளா? என்ற கேள்வியும் வாசிப்பில் எழுகிறது. இதைப் புரிந்து கொள்ள வாசகனின் ஊகிக்கும் திறன் மிகவும் அவசியம் காரணம் கதைகளில் வரக்கூடிய ஆடு… கொசு... மனிதர்களின் மீவியல் சார்ந்த மனநிலை... இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள இயல்பான வாசிப்பு அனுபவம் மட்டும் போதுமானதாக அமைய வாய்ப்பு குறைவே. கதையில் வரும் சம்பவங்கள் விசித்திரமாக இருக்கின்றன என்றாலும் இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் மறைபொருளாகவே படைக்கப்பட்டுள்ளன என்பதைத் தேர்ந்த வாசகனால் எளிதில் அடையாளம் காண முடியும். அதிலிருந்து வாசகனின் கற்பனை மேலும் விரிந்து சிறுகதைகளை மேலும் ஒரு தளத்திற்குக் கொண்டு சென்று அதன் பரந்துபட்ட பரப்பை அவை சொல்லாத குறிப்பு உணர்வை வாசிக்கையில் அனுபவங்களாக நமக்கு ஏற்படுத்தி விட்டுச் செல்வதே இத் தொகுப்பின் சிறப்பு.

#அபி இராவணன்

Thursday, May 21, 2020

"காதுகள்" எம்.வி.வெங்கட்ராம்


எம்.வி.வெங்கட்ராம்

பேய்கள் வாழும் நாவலா? இல்லை தேவதையா? இறைவனா? எதுவோ? 

காதுகள் 

நாவல்...

இது ஒரு வகையான சராசரி நாவல் என்று சொல்லிவிட முடியாது. இது ஒரு தன்வரலாறு நாவல் என்றும் 
மேஜிக்கல் ரியலிச 
நாவல் என்றும் கூறுவர். 
ஆனால் இயல்பான நாவல் எழுதும் தன்மையைக் கடந்தது என்பது மட்டும் உண்மை. காரணம் மகாலிங்கம் இந்நாவலில் மையப் புள்ளி அவனது காதுகளில் கேட்கும் வினோத சத்தம், உரையாடல், மனக்குழப்பம் என என்னவோ எல்லாம் அவனை ஒரு வழி செய்கிறது... எம்.வி.வெ யின் இலக்கிய நடை, அவரின் மனம் எல்லாம் விசித்திரமானதே. இந்த வாழ்க்கை அவருக்குக் கொடுத்த எல்லாமும் இந்த நாவலில் பதிவாகியுள்ளது. என்னமோ இப்படி எழுதி அவர் சென்றது ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. நமக்கும் இந்த மன ரீதியான அனுபவங்கள் உண்டு என்றாலும் நாம் அதைக் கவனித்தோமா இல்லை பதிவு செய்தோமா என்றால் இல்லை என்பதே விடை...

இந்நாவல் 1992 வெளிவந்தாலும் இதன் மொழிநடை வார்த்தைகள் இன்றும் புதிய எழுத்தாகவே உள்ளது. வாசிப்பில் நமக்குப் பைத்தியம் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்பதே என் கருத்து. இதில் இலக்கிய கிண்டல், காந்திய விமர்சனம், அரசியல், அவரின் கால இலக்கி சூழல், உரையாடல் என அனைத்தையும் ஒருவித மொழியில் கற்பனை கலந்த மாயையை எழுதி செல்கிறார். வாசிப்பில் சலிப்பு இல்லை... ஒரே விஷயத்தை இத்தனை விவரணைகளுடன் எழுதிச் செல்வது ஒரு கலை...

#அபி இராவணன்

Sunday, May 10, 2020

"கடவுள் கற்ற பாடம்" (பிரெஞ்சுச் சிறுகதைகள்)



#கடவுள் கற்ற பாடம் (பிரெஞ்சுச் சிறுகதைகள்)

#பிரொஞ்சிலிருந்து தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்ராய நாயகர்.

"பத்து சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் சிறுகதைகள்"

இன்று "கடவுள் கற்ற பாடம்" - பிரெஞ்சு சிறுகதைகள் என்ற நூலை வாசித்த மகிழ்ச்சியோடு என் வாசிப்பு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புனைவு இலக்கியம் என்பது கடந்தகால நிகழ்கால எதிர்கால மனித இயக்க நடவடிக்கைகளைக் குறித்த ஒரு பதிவாகக் கொள்ளலாம். மனித உற்பத்தியில் மிக உன்னதமான படைப்பு என்றால் அது இலக்கியம். அதைப்போல மிகவும் பலவீனமா படைப்பு என்றால் அது கடவுள். சரி அது போகட்டும் தத்துவ விசாரணையில் இறங்காமல் விஷயத்திற்கு வருகிறேன்.

இத்தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. என்னைக் கவர்ந்த மிகச் சிறந்த அல்லது அற்புதமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக,

1. கடவுள் கற்ற பாடம் - பெர்நார் வெர்பெர்.


ஒரு படைப்பாளியின் பார்வையில் உலகத் தோற்றம், கடவுள் குறித்த புனைவுகள், கட்டுக்கதைகள், உயிர்களின் தோற்றம், என எல்லாவற்றின் மீதும் ஒரு விபரீதமான அல்லது கற்பனைக்கு எட்டாத வேடிக்கை தனமான அதேவேளையில் சிந்தனையின் உச்சத்தில் நின்று எல்லாவற்றையும் ஒரு புதிய பார்வையில் அலசக் கூடிய கண்ணோட்டம் கொண்ட ஒரு சிந்தனையாளனாகத் தன்னை வெளிப்படுகிறான் என்பதைக்  கடவுள் கற்ற பாடம் என்ற சிறுகதை எனக்கு உணர்த்திய செய்தியாக நான் கருதுகிறேன்.

கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும் நம்மைப் போலப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வேடிக்கையாகக் கூறி பிரபஞ்ச இயக்கத்தின் ரகசியத்தை அங்கத நடையோடு ஒரு வாசகனை அதுவரையில் எதார்த்த கதைகளில் மூழ்கியிருந்த நிலையிலிருந்து புதிய திசையை நோக்கி ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை இச்சிறுகதை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

2. சிலை - மர்ஸேல் எம்மே.
உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள் அப்படித் தோன்றியவர்கள் சிலர் சாதனைகளின் உச்சம் தொட்டவர்களாகவும் விளங்குகிறார்கள். அப்படி விளங்கிய ஒருவனின் கதையை அவன் நிகழ் காலத்திலேயே அவன் கண்முன்னாலேயே அவனின் எதிர்கால நிலையையும் அதே வேளையில் நிகழ்காலத்தில் தன் ஏழ்மையால் ஒரு கண்டுபிடிப்பாளனின் மன உளைச்சலை மிக அற்புதமாக ஒரு உளவியல் சார்ந்த ஒரு கதையாக எழுதப்பட்டுள்ளது. நடப்பியல் எதார்த்தத்தை மனிதர்களின் அலட்சியத்தை நமக்காக அல்லும் பகலும் உழைத்து அவர்களை நாம் எவ்வாறு எதிர்காலத்தில் நடத்து போகிறோம் அல்லது நிகழ்காலத்தில் நடத்தி இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விரக்தியின் உச்சத்தில் ஒரு படைப்பாளனின் எதிர்பார்ப்பை சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கையைக்  கேள்வி கேட்கும் முகமாக இச்சிறுகதை  அமைந்துள்ளது. அதற்கு இந்த சமூகம் எந்த விதத்திலும் அவர்களுக்கு உரிய மரியாதை என்றுமே வழங்கியதில்லை என்ற குற்றச்சாட்டை வைப்பதாக வாசிப்பில் உணரமுடிகிறது.

3. ழுயில் சித்தப்பா - கி.தெ மொப்பசான்.
மனிதர்களின் எதார்த்த இயல்பான நடப்பியல் வாழ்க்கைச் சித்திரத்தை அப்படியே கண்முன்னே காட்சிகளாக விரித்து எதிர்பார்ப்பின் மூலம் நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் அல்லது நம் எதிர்பார்ப்பு பொய்யாய் போனது என்று உணர்ந்தால் மனிதமனம் அவற்றிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ள எப்பொழுதும் தன்னை சுயநல சிந்தனையைை வைத்துக் கொள்கிறது. என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக மாப்பசானின் இச்சிறுகதை அமைந்துள்ளது.

4. எங்கள் சிறந்த வாடிக்கையாளருக்கு - ஆன்றி த்ரோயா.
சில நேரங்களில் மனிதர்கள் ஆதரவற்ற நிலையில் தங்களை ஒரு அனாதைகளாக உணருகின்ற வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நிற்பவர்களுக்குத் தெரியும் உறவின் உன்னதம் அப்படியான ஒரு முதியவரின் வாழ்க்கையை அந்த கடைசி படிக்கட்டில் நின்று கொண்டு நமக்காக ஒருமுறை அதைப் படம்பிடித்துக் காட்ட முயலும் பணியைச் சிறுகதை செய்துள்ளது.

5. கைகள் - ஆன்றி த்ரோயா.

வாழ்க்கையில் தனக்கான சில அடிப்படையான ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லது விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம் அப்படியான ஒரு பெண்ணின் காதல் கதை.

6. தோளின் மீது ஒரு கை - மிஷேல் லுயி.
நம் நம்பிக்கைகள் நாம் நம்பும் சில விஷயங்கள் அல்லது என்றாவது வாழ்வில் ஒரு நாள் என்றோ நாம் கண்ட கனவு நிஜ வாழ்க்கையில் நடந்தே தீரும் என்று நாம் கொள்ளும் அந்த தீர்மானமான ஒரு மன உணர்வை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் வெவ்வேறு சம்பவங்கள் மூலம் அனுபவங்கள் மூலம் இம்மாதிரியான ஒரு மனநிலை ஏற்பட்டிருக்கும் அப்படியான ஒரு சிறுகதை தான் இது.

மொழிபெயர்ப்பாளரின் அற்புதமான மொழி நடை தங்கு தடையின்றி விரைந்து வாசிக்க முடிந்தது. அந்த வகையில் மொழிபெயர்ப்பாளரைப் பாராட்டியே ஆகவேண்டும். 

மற்றுமொரு நூலோடு உங்களை சந்திக்கும் வரை நன்றி.

Friday, May 8, 2020

"டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி" (Totto-chan, the Little Girl at the Window)

"டோட்டோ-சான்
ஜன்னலில் ஒரு சிறுமி"
(Totto-chan, the Little Girl at the Window)
🌹🌹🌹

✍️ஜப்பானிய மொழியில்:
டெட்சுகோ குரோயாநாகி
✍️தமிழில்:
# அ. வள்ளி நாயகம்
சொ. பிரபாகரன்

📚வெளியீட்டு:
முதல் பதிப்பு:1982 
தமிழ் முதல் பதிப்பு: 1996
5ஆம் பதிப்பு: 2018
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

📎டெட்சுகோ குரோயாநாகி என்ற டோட்டோ-சான் எழுதிய தனது பதின் பருவ பள்ளி நினைவுகளின் தொகுப்பு "டோட்டோ-சான் – ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற இந்நூல் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடந்த கதை ஆகும்.

📌ஜப்பானில் இந்தப் புத்தகம் ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகிது

திரு.கோபயாஷி பள்ளியின் தலைமை ஆசிரியர். இவரை நினைவுகூரும் விதமாக இந்நூலாசிரியர் எழுதிய நூலே இந்நாவல். இது வெறும் நாவல் அல்ல தன்வரலாற்றுப் புனைவிலக்கியம் எனலாம். 
இப்பள்ளிகூடம் மற்ற பள்ளிக்கூடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

ரயில் பெட்டிகள், நீளமான வாகனங்கள் பள்ளி வகுப்பறையாக்கலாக்க மாற்றப்பட்டிருந்தன, விவசாயப் பாடம் நடத்த விவசாயி ஒருவர் சிறப்பு ஆசிரியராகத் தனது வயலில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். சுதந்திரமான பாடமுறை. மதிய உணவு முறையில் (கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்), கற்பிக்கும் முறையில் புதுமை,  திறந்தவெளி வகுப்புகள் (விளையாட்டு, பள்ளி நடை, இசை) என அற்புதமான கல்விச்சூழலை உருவாக்கியது இப்பள்ளி.

டோட்டோ-சான் கதை உண்மையில் சிறுவர் இலக்கியம் அல்ல. தன் பதின்பருவ நினைவுகளின் வழி எதிர்கால தலைமுறைக்கு விட்டுச்செல்லும் பாடம். குழந்தைகளிடத்தில் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை உணர்த்தும் நூல். அதேவேளையில் குழந்தைகளுக்கான கல்வி என்பது அவர்களாகவே கற்றுக் கொள்ளும் சுய அனுபவக் கல்வியை மையமாக கொண்டது.

டோட்டோ சானை வாசித்த பின் அம்மாதிரியான பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் அல்லது இம்மாதிரியான கல்விச் சூழலை நம் மண்ணிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்நூலை வாசிப்பவர்கள் நிச்சயம் பெறுவர். அதன் விளைவாக தற்போது இது போல ரயில் பெட்டியை வகுப்பறையாகக் கொண்ட ஒரு பாலர் பள்ளி கோவையில் உருவாகிக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உந்துதலாக இருந்தது டோட்டாசான் எனத் தனது நண்பர்கள் கூறியதாக எஸ்.ராமகிருஷ்ணன் இந்நூல் பற்றி தம் இணையத்தில் பதிவு செய்துள்ளார். 

மேலும் கவிஞர் மனுஷியும் இந்நூலை வாசித்து இதனடிப்படையில் திருவண்ணாமலையில் ஒரு பள்ளி செயல்படு வருவதாகவும் என்னோடு இந்நூல் பற்றி உரையாடும் போது குறிப்பிட்டார்.

மேலும், புதுவை ஆரோவில் அருகிலும் இயற்கை சூழலில் இத்தகைய புதுமை கல்விக்கூடம் ஒன்று அமைந்ததாகவும் ஆனால் தொடர இயலவில்லை என்றும் தகவல். பிரெஞ்சு பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரும் குறிப்பிட்டு கூறினார்.

இதுவரை டோட்டோ சான் புத்தகத்தை வாசிக்காத பெற்றோர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், இலக்கிய  வாசகர்கள் என அனைவருக்கும் ஏதோ ஒன்றை நிச்சயமாக இந்நூல் வழங்கும் என்பது திண்ணம். நீங்கள் குழந்தைகளை அணுகுவதற்கும் குழந்தைகளைக் குழந்தைகளாக புரிந்துகொள்வதற்கும் ஒரு உளவியல் சார்ந்த பாடத்தை நிச்சயம் கற்றுத்தரும். இந்நூலைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உடனே வாசித்துவிடுங்கள். 


இதை வாசித்தவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத தாம் வாசித்த நூல்களில் ஒன்றாக நிச்சயம் இது இருக்கும். காரணம் நம் பதின் பருவத்தை நோக்கி மீண்டும் நாம் பின்னோக்கி பயணப்பட முடியாத அந்த காலத்தை, நினைவுகளை நோக்கி நம்மை அழைத்து செல்லும் ஓர் அற்புதமான காலசக்கரம் இந்நூல் என்பது என் மதிப்பீடு.

அபி இராவணன்

Monday, May 4, 2020

"வணக்கம் துயரமே"

"வணக்கம் துயரமே"
💕💕💕💕💕💕💕💕

#பிரெஞ்சில்💙
 பிரான்சுவாஸ் சகன்✍️
--------------------------------------------------
#தமிழில் ❤️
நாகரத்தினம் கிருஷ்ணா✍️
~~~~~~~~~~~~~~~~~~~~~

மொழிபெயர்ப்பு நாவல்களைத் தொடர்ந்து வாசித்து வரும் நான் இப்பொழுது எடுத்திருப்பது பிரெஞ்சு மொழி நாவல். வாசிப்பின் நிறைவிலான மனநிலையிலிருந்து இப்போது இதை எழுதுகிறேன். நாவலின் சுருக்கத்தோடு இந்நாவலைப் பற்றிய என் கருத்தை இங்குப் பதிவு செய்கிறேன். மனித மனம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் விளைவு களைவுகளின் மூலமாக நாம் கொடுக்கும் விலையைக் (பிரெஞ்சு கலாச்சாரத்தோடு இணைத்து) கதைக் களமாகக் கொண்டு இந்நாவல் பின்னப்பட்டுள்ளது. 

இந்நாவலை எழுதிய பிரான்சுவாஸ் சகன் 
பிரெஞ்சில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர். மேலும், தீவிரமான பெண்ணியவாதிகூட.

பிரெஞ்சு சமூகத்தில் ஆண், பெண் உறவு, ஆண், பெண் சமம் என்னும் புரிதல். பெண்ணுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை இவையெல்லாம் சில சமயங்களில் அவர்களையே சுய பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டுகிறது. காரணம் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமை. எதையும் தனியே செய்ய முடியும் என்ற மனநிலை இவற்றினூடே மனித மனம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அவற்றால் ஏற்படும் விளைவாக்கல் வாழ்வை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பது பற்றிய கதையாக அமைகிறது.

பிரெஞ்சு சமூகத்தில் ஓர் ஆண் தன் வாழ்வில் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அந்த வகையில் ஒருவன் தன் வயதுக்கு ஒத்த மற்றும் தன் வயதுக்கு மிகக் குறைந்த இரண்டு பெண்களைக் காதலித்துக் கொண்டு தன் மகளுடன் மகிழ்ச்சியாக இருந்த காலங்களில் இவர்களுக்கு இடையிலான வாழ்வின் மன போராட்டங்களை எதார்த்தத்தை "செசில்" என் கதாபாத்திரத்தின் மூலம் உணர்ச்சிப்பூர்வமாக இக்கதை எழுதப்பட்டுள்ளது.

கதையில் வரும் "செசில்ரெமோனின் மகள். ரெமோன் எப்பொழுதும் காதல் வயப்பட்டுக் கொண்டே இருப்பவன். நிலையான மனம் இவனிடத்தில் இல்லை. அவனுக்கு பெண்கள் மீது எப்போதும் காதலும் காகமும் குறைந்ததே இல்லை. வயதானாலும் தன்னை எப்பொழுதும் வலிமை உள்ள ஒரு இளம் வாலிபன் போலவே காட்டிக் கொண்டான். 

ரெமோனை காதலித்த ஆன்னிஎல்சா இருவரும் அவனை ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அவனைக் காதலித்தனர். சில சமயங்களில் செசில் இதை வெறுத்தாலும் பல நேரங்களில் அப்பாவின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவருக்குத் துணையாக நின்றாள். ஆன்னி மிகவும் அழகானவள் அப்பாவின் வயதிற்கு ஏற்றவள் மதிநுட்பம் உடையவள். அப்பாவின் மனதில் முதலிடத்தில் இருப்பவள் கூடிய சீக்கிரம் இவளை அப்பா திருமணம் செய்துகொள்ளப் போகிறார். எல்சா வயது குறைந்தவள் என்றாலும் அப்பாவிற்கு மிகவும் பிடித்தவள். இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மன உறவுகளால் ஏற்பட்ட சிக்கலில் சிக்கியவள் செசில். படகு ஓட்டுபவனை செசிலின் காதலித்தால் என்பதை விட  இல்லை இல்லை செரில்தான் காதலிதான் என்பதே சரி. செசில் அவனைக் காதலித்தால் சில சமயங்களில் அவனுடன் பல முறை உறவிலும் ஈடுபட்டுள்ளாள். என்றாலும் திருமணம் செய்துகொள்ள ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. காரணம் இவளும் ரெமோனை போல இருந்தாள் என்பது உண்மை.

இவளின் முட்டாள்தனமான உணர்ச்சிகளின் செயல்பாட்டால் ஆன்னீ வாகன விபத்தில் இறந்து போனாள். அது செசிலை வெகுவாக பாதித்தது. அவள் வாழ்ந்த சூழல். அப்பாவைச் சுற்றிப் பல பெண்கள் இப்படியான ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அவள் காதல், காமம் இது மட்டுமே வாழ்வில் போதும் இன்பம் மட்டுமே போதும் என்று எண்ணியவளாய் இருந்தாள். அவளது அப்பாவை போலவே வாழத் தொடங்கினாள். எனினும் மனித மனம் சில நேரங்களில் தான் செய்த தவறுகளை எண்ணி மன்னிப்பு கேட்கும் அப்படியான பல தருணங்களை வாழ்வில் சந்தித்த போதும் மீண்டும் மீண்டும் தன் பழைய வாழ்க்கையையே அவர்கள் வாழத் தொடங்கினார்கள். அதுவே அவர்களால் முடிந்தது இதுவே எதார்த்தம். நடந்ததைத் தூக்கிப் போட்டுவிட்டு இனி நடக்கவிருக்கும் செயல்களை நோக்கி எப்பொழுதும் போல மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு வாழ முயல்வோம் எனத் தந்தையும் மகளும் வாழ்வைத் தொடர்ந்தனர். மீண்டும் புதிய உறவுகள்...

ஏன் இப்படியான ஒரு படைப்பு அவசியமா என்று வினா எழுப்பினால் மிக மிக அவசியம் என்பேன். காரணம் இந்நாவலை வாசிக்கும் போது வாசகனின் மனநிலை வேறு பக்கம் பயணத்தைத் தொடங்கி இருக்கும். அதுதான் இப் புனைவின் வெற்றி. வாசகனுக்கு இப்படியான ஓர் அனுபவத்தைக் கொடுப்பதன் மூலமாக நாளைய வாழ்வில் அவன் அடையப்போகும் அனுபவத்தை அவனே தீர்மானிக்கிறான். செசில் என்னும் கதாபாத்திரம் மூலம் மிகுந்த மன உளவியல் சிக்கலை முன்வைக்கிறது.   அவள் அதில் சிக்கிப் படும் அவஸ்தை வாசகனைக் கதையில் கரைத்து விடுகிறது. 


நாவலை ஒரே மூச்சில் வாசிக்கும் படியான சூழல் எனக்கு அமையவில்லை. எனினும் வாசிப்பில் மொழியின் நடை மிகவும் முக்கியம். அந்த வகையில் சரளமான தொருமொழி நடையில் மனித மனத்தின் உளவியல் சிக்கலைப் பேசும் நாவலை இவ்வளவு அழகாகத் தமிழில் கொண்டு வந்திருப்பது அற்புதமே அந்த வகையில் மொழிபெயர்ப்பாளரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

#அபி இராவணன்

Saturday, May 2, 2020

"மகாமுனி"

# 1
மகாமுனி
அன்று இரவு அவன் நினைத்தது போல இல்லை கடும் குளிர். இமயமலைச் சாரலில் தன் குருவை கண்டடையும் பொருட்டு காத்திருந்தான். தனக்குத் தோதான ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு அன்று இரவைக் கழித்து கொண்டிருந்தான். அருகில் இருந்தவர்கள் குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். இவனும் சற்று நேரத்தில் எழுந்து அவர்களோடு சேர்ந்து அமர்ந்துகொண்டான். இரவில் அனைவரும் குளிர் காய்வதற்கு தேவையான விறகுகளை தீயிலிட்டு கொண்டிருந்தனர். இவனுக்கு அந்த வெப்பம் கொஞ்சம் கதகதப்பைத் தந்தது. மனதில் புதுத்தெம்பு ஏற்பட்டது. இந்த வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான். மனதில் எழும் பல கேள்விகளுக்கு விடையைத் தேடித் தன்னந்தனியே வந்த வழிப்போக்கன் போல தன்னை உணர்ந்தான். என்னவானாலும் சரி தன் வாழ்வின் இலட்சியத்தை அடைந்தே தீருவது என்று தீர்மானித்தான். காலையில் மற்ற விஷயங்களைப் பேசிக் கொள்ளலாம் என்று மனதில் உறுதி கொண்டு ஓர் இடத்தில் படுக்க தயாரானான்... 

# 2
மகாமுனி
காலையில் சூரிய வெளிச்சம் வருவதற்கு தாமதமானாலும் குளிரில் நடுங்கி ஒடுங்கி படுத்து இருந்தவர்கள் காலையிலேயே எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி விட்டு வருவதை பார்த்தான். நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவனால்! இந்த குளிரில் எப்படி இவர்களால் அதிகாலையில் நீராட முடிகிறது? என்று நினைத்தான். சரி நாமும் முகம், கை, கால் கழுவி விட்டு வரலாம் என்று எழுந்து நடக்கலானான். சிறிது தூரத்தில் படிக்கட்டுகள் கீழ் முகமாக இறங்கத் தொடங்கியது 20 அல்லது 25 படிக்கட்டுகள் கடந்ததும் இமயமலை பனிக்கட்டிகள் உருகி ஓடும் ஆறு என்பதை உணர்ந்தான். அந்த குளிர்ந்த நீரில் உடலை நனைப்பதற்கு சிறிது அச்சம் என்றாலும் ஞானிகள் முனிவர்கள் இதையெல்லாம் பொருட்படுத்துவது இல்லை, எந்த நீரிலும் அவர்களால் குளிக்க முடியும்  அவர்களால் எதுவும் செய்ய முடியமுடியும் என்று தனக்குள்ளே பேசிக் கொண்டான். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து ஆற்றில் மெதுவாக இறங்க தொடங்கினான். கால்களை இறுக்கிப் பிடித்த அந்த குளிர்ந்த நீர் உடல் முழுக்கவும் பரவத்தொடங்கியது. மூச்சை பிடித்துக்கொண்டு மூழ்கி எழுந்தவன் மூன்று முறை மூழ்கி விட்டு கரை ஏறினான். அதுவரை தெரிந்த குளிர் சற்று அதிகமாகவே உணர்ந்தான் என்றாலும் போகப்போக குளிர் அவனை விட்டு சிறிது விலகியதாக ஓர் உணர்வு ஏற்பட்டது. தான் வைத்திருந்த உடமைகளை ஒரு பையில் வைத்து கட்டிக் கொண்டு எழுந்து நடக்கத் தொடங்கினான். முன்பின் அறியாத அந்த வழிப்பாதையில் தான் முன்பே வந்தது போல யாரிடமும் எதுவும் கேட்காமல் வழி தெரிந்தவன் போல் நடக்கலானான். என்னதான் அங்கு இருக்கிறது என்ற ஆவல் அவனை சோர்வடைய விடாமல் நடக்கச் செய்தது. தொடர்ந்து இப்படியே நடந்து சென்று கொண்டிருந்தான் நீண்ட தூரம் வந்து விட்டான். ஆள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தூரத்தில் ஒரு சிலரின் நடமாட்டத்தை உணர்தான். அங்கு சென்று பார்த்தால் ஆச்சரியம்! அதிசயம்!! அந்த இமயமலைச் சாரலில் அசையாமல் ஒரு கணம் நின்று வேடிக்கை பார்த்தான். மனிதர்கள்...இல்லை வினோதமான உருவம். என்னவென்று சொல்லத் தெரியவில்லை. தூரத்தில் பனிமூட்டத்தில் மிக பெரிய உருவம் அசைவதை மட்டும் அவனால் உணரமுடிந்தது.

# 3
மகாமுனி
என்ன அதிசயம் குரங்கு மனிதர்கள். இதுவரையில் கதைகளில் கேள்விப்பட்ட குரங்கு மனிதர்களை முதன்முறையாகப் பார்த்ததில் எங்கிருந்தோ பயம் வந்து தொற்றிக் கொண்டது. யார் இந்த.குரங்கு மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?  என்ற பல கேள்விகள் எழுந்தன? இருப்பினும் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. விரிந்துகொண்டே போன அந்த மலைச்சாரலில் எங்கு ஒளிந்து கொள்வது?  இல்லை இவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்ன? செய்வது என்று தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்தான். ஒருவழியாக மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களை நோக்கி நடக்கத் தொடங்கினான். அங்கிருந்த மனிதர்கள் பார்ப்பதற்கு நம்மூர் சாமியார்கள் போல் அல்லாமல் மிகவும் வித்தியாசமாக  பயங்கரமான ஒரு அகோரி தோற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களுடன் இருந்த குரங்கு மனிதர்கள் ஏதோ ஒரு மொழியில் உரையாடி கொள்ளும் விதம் அவனுக்கு விளங்கியது. அந்த அகோரிகளில் ஒருவர் பேசுகிற பொழுது இடை இடையே கடவுளே அனைத்தும் அவனே பிரம்மம் என்று கூற இவனுக்கு மேலும் ஆச்சர்யம்! வியப்பு!!தமிழறிந்த ஒரு அகோரி இருப்பதை எண்ணி வியந்தான் அவரருகே சென்று (மகாமுனி) சாமி நான் முன்னூரில் இருந்து வருகிறேன் என்றான். அந்த மகாமுனி ஓ.... உனக்கு இங்கே என்ன வேலை ஏன் இங்கு வந்தாய் என்று கேட்க அவன் ஒருநிமிடம் தயங்கி பேசத்தொடங்கினான். 

# 4
மகாமுனி
அவன் பேசும் முன்பே நிறுத்து முதலில் நீ என்னிடம் உன்னைப் பற்றி சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். என்று கூறினார். அவன் தன்னை பற்றி சுருக்கமாக கூறினான். மகாமுனி தான் சில பரீட்சைகளை வைப்பேன் என்று கூறினார். சில கேள்விகளைக் கேட்பேன் அதன் பிறகே  நீ என்னுடன் பயணிக்கலாம் என்றார் அந்த மகாமுனி. அதற்கு முன்பு அந்த இடத்தை விட்டு போக வேண்டும். ஏனென்றால் குரங்கு மனிதர்கள் நாம் பேசுவதை  கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று மகாமுனி கூற... நான் ஏன் வந்தேன் எதற்காக இங்கு சுற்றி திரிகிறேன் என்று  விளக்கிக் கூறுவதற்கு சூழல் அவ்வளவாக அங்கு சரியில்லை என்று அவனுக்கு தோன்றியது. அந்த மகா முனி முன்னோக்கி  நடக்கத் தொடங்கினார். போகிற வழியில் இருவரும் நிறைய மரங்களையும்  செடிகளையும் கடந்து சென்றனர். பாதைகள் முழுக்க நனைந்தபடியே இருந்தது சமதளத்தில் நடந்து கொண்டிருந்த அவர்கள் வழியில் ஒரு மேடான பகுதியை நோக்கி நடக்கத்தொடங்கினர்.  அந்த மேடான பகுதியில் கோவில் ஒன்று இருந்தது. அங்கு சிலர் இறைவனை பிரார்த்தனை செய்தவாறு நின்றுகொண்டு இருந்தனர். தீபாராதனை  நடந்துகொண்டிருந்த சமயம் என்று தோன்றியது காரணம் அந்த கோவிலில் மணி ஓசை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. உடனே அந்த மகாமுனி வேகமாக நடக்கத் தொடங்கினார். அவர் பின்னே அவனும் எதுவும் கேட்காமல் நடந்தான் மகாமுனி சற்றென்று அந்தக் கோவிலின் கருவறையின் உள்ளே சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். அவனும் அவருக்காக வெளியில் காத்திருந்தான் கருவறையின் உள்ளே லிங்க வடிவிலான உருவம் ஒன்று மங்கலான விளக்கொளியில் தெரிந்தது. மகாமுனி வரும் வரை இந்த இடத்திலேயே அமர்ந்து இருப்பது என்று முடிவு செய்து ஒரு தூணில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டான். அவர் வருவதற்கு நேரமாகும் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது. அங்கிருந்தவர்கள் யாரும் அவரை தடுக்கவோ உள்ளே செல்லக்கூடாது என்றோ கூறவில்லை... என்பதை உணர்ந்து இவனும் மௌனமாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்.

# 5
மகாமுனி
இவனும் அந்த கட்டாந் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் இப்படி இருக்க போகிறோம் என்று தெரியாமலேயே அவன் அப்படியே தியானித்து இறைவனோடு இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்பவன் போல அமர்ந்திருந்தான். அதைவிட வேறென்ன இருக்க முடியும் வாழ்வின் தேடலில். மகாமுனி வெளியில் வருவதாக தெரியவில்லை. தியானத்தில் ஆழ்ந்தவனின் மனம் சஞ்சலம் அடைந்தது. பால்ய கால நினைவுகள் தொடர்ந்து வரவே கண்ணைத் திறந்தது பார்த்தான். அவன் எதிரே ஒரு குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது இவனைப் பார்த்து வாயை திறந்து காட்டியும் கைகளை அசைத்தும் ஏதோ ஒரு செய்கையை செய்து கொண்டும் இருந்தது. இவனுக்கு அதை பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அந்த குரங்கு மிகவும் அழகாக நீண்டு வளர்ந்த ரோமங்களையும் சிவந்த கைகளையும் நீட்டி எதையோ கேட்க வருவதைப் போல் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் பையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்த குரங்கிடம் கொடுத்தான். அதை பெற்றுக்கொண்ட சந்தோஷத்தில் அந்த குரங்கு அவன் அருகில் வந்து அமர்ந்தது. இவனும் எதுவும் செய்யவில்லை திடீரென்று குரங்கு எங்கேயோ தாவிக்குதித்து ஓட அந்த பக்கமாக திரும்பி பார்த்தான். பெரும் முனிவர்களின் கூட்டம் அந்த கோயிலை நோக்கி வருவதை உணர்ந்தான். அதற்குள்ளாக மகாமுனி வெளியில் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் அந்த மகாமுனி தியானத்திலிருந்து எழுவதாக தெரியவில்லை. அந்தப் பெரும் கூட்டம் கோயிலை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. எங்கும் பனிக்காடு  ஆட்டம் பாட்டம் சிலர் கையில் மஞ்சள் நிற துணியை வைத்துக் கொண்டும் மற்றவர்கள் கைகளில் கமண்டலம், ஊன்றுகோல், பிச்சை பாத்திரம், கழுத்தில் உத்திராட்ச மாலைகள், உடல் முழுக்க சாம்பல், ஜடாமுடி, உடம்பில் கருப்பு நிற நீண்ட அங்கி என பார்ப்பதற்கே ரொம்ப வித்தியாசமாக அந்த கூட்டத்தினர் இருந்தனர்.

#6
மகாமுனி
அவர்கள் அனைவரும் கோயிலின் படிக்கட்டுகளில் ஏறி மேலே வரத் தொடங்கினர். கருவறையில் இருந்த மகாமுனி சற்றே கண்  விழித்து உள்ளிருந்து வெளியே தொடந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த கூட்டத்தார். அவரைக் கண்டதும் கையெடுத்து வணங்கினார்கள். மகாமுனி அவர்களை சிறிதும் பொருட்படுத்தாது நடந்து போகலானார். அனைவரும் வந்து அமைதியாக அந்த மண்டபத்தில் நிற்கத் தொடங்கினர். மீண்டும் அந்த மகாமுனி திரும்பவும் வந்தார். கருவறையின் உள்ளே சென்று ஒரு பெரிய ஊன்றுகோலை கையில் எடுத்து  வந்ததும் அனைவரும் ஹர ஹர சம்போ மகாதேவா சம்போ மகாதேவா ஹர ஹர சம்போ மகாதேவா ஹர ஹர மகாதேவா என்று மூன்று முறை கூறி வணங்கினார். பின்பு எதுவும் பேசாமல் மகாமுனி நடக்க அவரை அந்தப் பெரும் கூட்டம் பின்தொடர்ந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவனும் அந்த கூட்டத்தோடு கூட்டமாக கலந்து நடக்கத் தொடங்கினான். பக்கத்தில் வருபவர்கள் ஒவ்வொருவரையும் மேலிருந்து கீழாக உற்று பார்த்த வண்ணமே நடந்துகொண்டிருந்தான். இவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள்? என்ன செய்யப்போகிறார்கள்? என்று எதுவும் தெரியாமலே அவர்களோடு மெதுவாக அந்த மலைச்சாரலில் நடந்து  சென்றான். மேலே செல்ல செல்ல பனி உருகி பாதை எங்கும் நீராக வழிந்தோடியது. கால்கள் வழுக்கிவிடும் அளவிற்கு பாறைகளின் மேல்  நீர் வழிந்தோடியது.  பாறைகளின் மேல் பக்குவமாக ஊன்று கொலை வைத்து பிடித்து நடக்க வேண்டியதிருந்தது. எங்கிருந்தோ வந்த அந்த குளிர்காற்று மேலும் நடுங்கச் செய்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுகிய உடம்போடு அடி மேல் அடி வைத்து நகர்ந்துகொண்டே இருந்தான். எங்கேதான் செல்கிறார்கள்? பின்தொடர்ந்தே செல்லலாம் என்று அவனுக்குத் தோன்றியது. எதுவும் பேசாமல் அவனும் அவர்களோடு ஒருவனாக கலந்து இயல்பாக பயணத்தைத் தொடர்ந்தான். நீண்ட நேரம் பயணம் செய்ததில் சோர்வு தட்டியது அவன் கால்களுக்கு. சிறிது இளைப்பாறலாம் என்று எண்ணினான். மற்றவர்கள் எல்லாம் அதைப் பற்றி கவலைப்படாமல் நடந்து கொண்டே இருந்தனர். மகாமுனி இவனை கண்டுகொள்ளாமல் முன்னோக்கி வேகமாக நடந்து கொண்டே இருந்தார். இவனுக்கு ஒன்று மட்டும் விளங்கியது. இவர்கள் அனைவரும் யாரையோ பார்க்க செல்கிறார்கள் என்பதை ஊகித்து உணர்ந்தான். என்னதான் இருக்கிறது இந்த இமயமலை உச்சியில் முடிந்தவரை ஏறி விடுவோம் என்று எண்ணத் தொடங்கினான். அப்பொழுது திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. அனைவருமே திரும்பி பார்த்தனர். குரங்கு மனிதர்கள் வரும் சத்தம் தான் அது என்பதை அவன் அப்பொழுது  உணரவில்லை.

# 7
மகாமுனி
எல்லோரும் சற்று பதட்டமடைய அவன் மட்டும் குரங்கு மனிதர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தான். சத்தம் வரும் திசையை நோக்கி பார்த்துக் கொண்டே நடந்து சென்றான். அனைவரும் நின்ற இடத்திலேயே ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா என்று கூறினர். மகாமுனி இவர்கள் அனைவரையும் பார்த்து கையை உயர்த்தி சங்கேத மொழியில் பேசத்தொடங்கினார் அப்போது அந்த குரங்கு கூட்டத்தின் சத்தமும் ஒடுங்கிப் போய் இருந்தது. அவனுக்கு மகாமுனி என்ன பேசுகிறார் என்பது விளங்கவில்லை. மொழியும் புரியவில்லை ஒருவழியாக மகாமுனி பேசி முடித்ததும் அந்த கூட்டம் அங்கிருந்து கலைந்து சென்றது. இப்பொழுது மகாமுனி அவனும் மட்டுமே அங்கிருந்தனர். சரி நாளை நாம் பேசிக்கொள்ளலாம் இப்பொழுது நீ இங்கு ஒரு இடத்தில் ஓய்வு எடு என்று கூறி அவரும் ஓரிடத்தில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அப்பொழுது சூரியன் அஸ்தமனம் ஆகியிருந்தது. உறக்கம் இல்லாமல் அவன் விழித்துக் கொண்டிருந்தான் நாம் எதற்காக இங்கு வந்தோம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இவர் ஏன் இன்னும் நம்மிடம் எதையும் கேட்கவில்லை என்று எண்ணிக்கொண்டே ஓரிடத்தில் படுத்துக்கொண்டு தனக்குள்ளாகவே பேசிக்கொண்டு இருந்தான்.

# 8
மகாமுனி
அன்றைய பொழுது நன்றாகத்தான் விடிந்தது. சூரிய ஒளியின் முதல் கிரணத்தின் ஒளி இவன்  முகத்தில் லேசாகப் படரத் தொடங்கியது. கண் விழித்ததும் அந்த காலைப்பொழுதில் மகாமுனியும் மற்ற சிலரும் ஆற்றில் சூரியநமஸ்காரம் செய்துகொண்டிருந்தனர். இவன் இருந்த இடத்தில் பார்த்தவாரே தூரத்தில் தெரியும் அந்த மலை உச்சியின் அழகை ரசித்தபடியே படுத்திருந்தான். இவனுக்கு அந்த விடியற்காலை பொழுது மிகவும் ரம்மியமாக தோன்றியது. இந்த இடத்தை விட்டு இனி போக கூடாது என்று முடிவு செய்தவன் போல தீர்க்கமாக படுத்திருந்தான். மகாமுனி சூரிய நமஸ்காரம் செய்து முடித்துவிட்டு ஈர உடையை உடுத்திக் கொண்டு அவன் அருகில் வந்து நின்றார்.

# 9
மகாமுனி
400 ஆண்டுகளுக்கு முன் தான் தங்கியிருந்த முன்னூரில் இருந்து இந்த இளைஞன் இமயமலை வந்திருப்பது அவருக்கு வியப்பாகவும் அதே சமயத்தில் பழைய நினைவுகளை மனதில் காட்சிகளாகவும் விரிந்தது. மகாமுனி அங்கு தங்கியிருந்த நாட்களில் பல சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் ஏற்பட்டது. பல திருப்பங்களையும் வாழ்வில் ஏற்படுத்தியது. அக்கோயில் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. சோழமன்னர்களின் வம்சாவழியில் வந்த மன்னர்களில் ஒருவன் தென்னிந்தியாவில் ஒரே சமயத்தில் 300 சிவ ஆலயங்களை கட்ட வேண்டும் என்று தீர்மானித்தான். அப்படி கட்டப்பட்ட கோவில்களில் முன்னூறாவது கோயில்தான்ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் முன்னூர். அதனாலே அந்த ஊருக்கு முன்னூர் என்ற பெயர் வழங்கலாயிற்று.

# 10
மகாமுனி
மகாமுனி முன்னூரில் தங்கியிருந்த சமயத்தில். அவ்வூருக்கு ஒரு சமணத் துறவி வந்தார். அவ்வூரில் உள்ள மக்கள் அவரை அவ் ஊரிலிருந்து இருந்து விரட்டி அடித்தனர்.  காரணம் ஆடைகள் எதுவும் இன்றி தெருவில் வந்த அந்த துறவியை ஊர் மக்கள் பார்வையில் சகித்து கொல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் மகாமுனி அவரை பாதுகாத்து முன்னூருக்கு அருகிலுள்ள உப்புவேலூர் எனும் ஊரில் அவரை தங்க வைத்து அவருக்கு வேண்டிய சில உதவிகளை செய்து கொடுத்தார். அதனை ஏற்று அந்த சமணத் துறவியி உப்பு வேலூரில் தங்கிவிட்டார்.

# 11
மகாமுனி
வேலூரில் தங்கியிருந்த சமணத்துறவி அங்குள்ள மக்களின் கல்வியறிவின்மையை உணர்ந்து சமணப் பள்ளியை உப்புவேலூரில் தொடங்க எண்ணினார். அப்பொழுது அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அவ்வூரில் கோவிலில் நடனமாடும் தேவதாசி ஒருத்தி சமணத்துறவிக்கு பொருளுதவி செய்தாள்.

# 12
மகாமுனி
முன்னூரில் உள்ள ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழா சமயம் அது. கோவிலில் அதுவரை நாட்டியம் ஆடி வந்த தேவதாசியை கோவிலுக்கு உள்ளே ஆட அனுமதிக்கவில்லை காரணம் சமணத்துறவிக்கு பொருளுதவி செய்ததோடு தங்க இடமும் உணவும் கொடுத்தாள் என்ற காரணத்தினால் அன்று முதல்
அவளை கோவில் உள்ளே ஆடுவதற்கு யாரும் அனுமதிக்கவில்லை. தேர்த் திருவிழாவின்போது தேவதாசிகள் தெருக்களில் அதாவது தேர் செல்லும் முன்பாக ஆடி சென்றனர்.

#13
#மகாமுனி

13
மகாமுனி

அதிகாலை சூரியன் இன்னமும் உதிக்கவில்லை. குளிர் எங்கும் பரவி இருந்தது. படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து கங்கை கரை நோக்கி நடக்கத்தொடங்கினான். அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதியில் இரங்கி குளித்து விட்டு கரையில் உடைகளை மாற்றிக்கொண்டான். ஈரமான உடைகளை பிழிந்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு போனான். மகாமுனியை அன்று அவன் பார்க்கவில்லை. நாடோடியாக காசிநகரை சுற்றி வந்தான். அந்த ஊரில் ஒரு பெண் துறவி இருந்தார். அவர் உணவு சாப்பிடுவதே இல்லை என்று கேள்விப்பட்டிருந்தான். அந்த பெண் துறவியை அனைவரும் உணவு உட்கொள்ளா யோகினி என்று அழைத்தார்கள் பல ஆண்டுகளாக அவர் உணவின்றி வாழ்ந்து வருகின்றார். இது எப்படி சாத்தியம் என்று யோசித்து கொண்டே நடந்து சென்றான். வீதிகளில் மக்கள் கூட்டம் ஒரு இடத்தில் மட்டும் அனைவரும் கூடி யாருக்காகவோ காத்திருப்பது போல நின்று கொண்டு இருந்தனர். அவன் தோடிவந்த அந்த பெண் துறவியை பார்பதற்கு பலர் காத்திருந்தனர். அந்த பெண் துறவி காற்றையே உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது. அவரை பார்க்க அவனும் அந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டான். அந்த பெண்துறவி அழுக்கு உடை பல நாள் ஒரே இடத்தில் இருந்து எந்த அசைவுகளும் இல்லாமல் இருந்தார். அவரை தலையைச் சுற்றி ஒரே அழுக்கு, சிக்கு அடைந்த (சடைபிடித்த) தலை. இவர் யாருடனும் பேசுவதில்லை.  இவரை போலவே மௌன சாமியாரும் அங்கு ரொம்பவே பிரபலம். அவர் இரண்டு ஒரு வார்த்தை பேசுவார். அதுவும் அவர் விருப்பப்பட்டால்.

#14
#மகாமுனி

சிவந்த ஒளி பொருந்திய முகம், தலைமுடியும் நீண்ட தாடியும் வெண்மையான நிறத்தில் அழகாக இருந்தது. கையில் நீண்ட கைத்தடி, காவி உடை, கழுத்தில் ருத்ராட்ச மாலை, தோலில் ஒரு நீண்ட துணிபை, வயது முதிர்ந்தவர். என்றாலும் அவரிடம் எந்த நடுக்கமும் தளர்வும் காணப்படவில்லை. தெளிவான பார்வை, திடகாத்திரமான உடல், நிதானமான பேச்சு, அவரை ப் பார்த்தால் அமைதியின் வடிவாக தோன்றக்கூடிய உருவ அமைப்பு. 
அவரின் பெயர் சக்திவேல் சுவாமிகள். இவர் புதுச்சேரியில் இருந்து காசிக்கு வந்திருக்கிறார். என்பதை நீண்ட நாள் கழித்து தெரிந்து கொண்டதும் அவரிடம் சென்று பேசலாம் என்று அவன் மனதில் நினைத்ததும் அவரே இவனை அழைத்தார்.

#15
#மகாமுனி

சக்திவேல் சாமிகளுக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தது மிகச்சாதாரணமாக ஆங்கிலத்தில் உரையாடினார் அவருக்கு இந்தியும் தெரிந்திருந்தது அவரைப் பார்த்தவுடனேயே அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது மற்ற சாமியார்களை போலல்லாமல் பார்ப்பதற்கு மிக நேர்த்தியான ஒரு அமைதியான தோற்றம் அவனை வசீகரித்தது. சுத்தமான காவி உடை நெற்றியில் விபூதி. விபூதி  வைப்பதற்கு ஒரு பை வைத்திருந்தார். அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வரும் அனைவருக்கும் அந்த பையில் இருந்து விபூதி வெளியில் எடுக்கும் போது ஒரு அற்புதமான நல்ல வாசனை வரும்.



தொடரும் ...

# அபி ராவணன்

"பழைய நினைவுகள்"

இந்தியச் சிறுகதைகள் (1990-2000)
தொகுப்பாசிரியர் இ.வி. ராமகிருஷ்ணன்,
தமிழில் பிரேம்,
சாகித்ய அக்காதமி வெளியீடு 2011.
விலை. 325.

பழைய நினைவுகளை மனதில் அசை போட முடிகிறது இந்தத் தொகுப்பின் ஊடாக. 
புதுச்சேரி புத்தகக் கண்காட்சியில் இந்நூலை வாங்கினேன். விலை என்னைப் பொறுத்தவரை அதிகம். காரணம் அப்போதெல்லாம் அவ்வளவு பணம் கையில் கிடைப்பது பெரிய விஷயம். அதுவரையில் புனைகதைகளை விரும்பாத நான் தன் வரலாறுகளை மட்டுமே உண்மையான கதைகள், வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் இவற்றை வாசிப்பதுதான் வாழ்க்கைக்கு  உதவும் மற்றபடி யாரோ எழுதும் பொய்யான புனைகதைகளை வாசிப்பதில் என்ன இருக்கிறது என்று நான் எண்ணியதுண்டு. முதன்முதலாகச் சிறுகதைகளை வாசிக்க என்னைத் தூண்டியதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று புனைகதை எழுத்தாளர்கள் பலரை அந்த புத்தகக் கண்காட்சியில் என்னால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. குறிப்பாகப் பிரபஞ்சன், பாவண்ணன் முதலானவர்களை. இரண்டு
நான் மயிலம் தமிழ் கல்லூரியில் பி.லிட் தமிழ் படித்துக் கொண்டிருந்த சூழலில் எனக்கு சமய இலக்கியங்கள் மீதும் இலக்கணங்கள் மீது மட்டுமே அதிக நாட்டம் இருந்தது. அதற்குக் காரணம் நான் பயின்ற கல்லூரி மற்றும் அங்கிருந்த பேராசிரியர்கள். புனைவு இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்தது முனைவர் கா. அய்யப்பன். அவர் ஒரு சமயம் பெருமாள் முருகனுடைய நாவல்களைக் கையில் வைத்திருந்தார். அப்பொழுது புனை கதைகளைக் குறித்து என்னிடம் அவர் நிறையப் பேசிக்கொண்டிருந்தார். அன்று முதல் புனைகதை இலக்கியங்களை வாசித்துத் தான் பார்ப்போமே என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. மற்றுமொரு காரணம் முதுமுனைவர் ஏ. எழிலன்வசந்தன் அவர்கள். கடற்கரையில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து செல்கையில் யாருடைய நூல்களை வாசிக்கலாம் என்று நான் கேட்க அவர் பல எழுத்தாளர்களையும் அவர்கள் படைப்புகள் பற்றி கூறினார். குறிப்பாக ஓஷோவின் நூல்களையும் வாசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். (அப்போது நான் வாங்கிய நூல் காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற நூல் வாங்கி படித்தேன்.) நான் கவிதை எழுதுவேன் ஐயா என்றதற்கு நீ சிறுகதை எழுதலாமே அதற்கு நல்ல வரவேற்பு உண்டு என்றார். அதுமுதல் என்னைப் புனைகதை வாசிக்கவும் எழுதவும் தூண்டியது. மேலும் கீழைத்தேய பிரெஞ்சிந்திய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுவரும் முனைவர் தி. இராஜரெத்தினம் அவர்களும் நானும் பல முறை நவீன புனைகதை எழுத்தாளர்கள் குறித்தும் குறிப்பாக எழுத்தாளர் ஜெயமோகன் குறித்தும் நிறையப் பேசி இருக்கிறோம். இவர்களின் சந்திப்பிற்குப் பிறகு பிரெஞ்சு பேராசிரியர் சு. ஆ. வெங்கட சுப்பராய நாயகர் அவர்கள் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த 'அப்பாவின் துப்பாக்கி' நாவலை வாசித்த பிறகு மொழிபெயர்ப்பு புனைகதைகள் மீதும் காதல் ஏற்பட்டது. பின்பு ஐயா அவர்களுடன் நிறைய உரையாடல்கள் அவரின் இல்லத்தில் நடந்திருக்கிறது.
தமிழ் இலக்கிய உலகில் புதுச்சேரியைச் சார்ந்த பிரபஞ்சனை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரிடம் இந்த தொகுப்பைக் காட்டி அதில் அவரின் கையெழுத்தைக் கேட்டபோது (இந்தியச் சிறுகதைகள்) அவர் கூறிய வார்த்தைகள் இவை "மிக முக்கியமான ஒரு தொகுப்பு வாசிக்க வேண்டிய நூல் தொடர்ந்து படியுங்கள்" என்று கூறி அதில் கையொப்பமிட்டுக் கொடுத்தார். 
முதல் பகுதி-1 1900 முதல் 1950 வரை பகுதி-2 1951 முதல் 2000 வரை எழுதப்பட்ட கிட்டத்தட்ட 21 மொழிகளின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாகப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ்ச் சிறுகதை அழியாச்சுடர் - மௌனி. பகுதி இரண்டில் இடம் பெற்ற ஒரே ஒரு தமிழ்ச் சிறுகதை கொலை - ஆசிரியர் வாஸந்தி. இந்த இரண்டு சிறுகதைகள் மட்டுமே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்ச் சிறுகதைகள். அதில் குறிப்பாக மௌனியின் சிறுகதைகள் புனைகதை உலகில் தனக்கான ஒரு தனித்த இடத்தை பெற்றது. இதற்கு முன்பே நான் ஒரு முறை இந்த சிறுகதையை வாசித்ததாக நினைவு. இரண்டாவது கொலை என்ற சிறுகதை அப்படி என்னதான் சிறப்பு? தமிழில் எத்தனையோ நூறு சிறுகதைகள் இந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பாக இந்த இரண்டு மட்டும் இடம் பெற என்ன காரணம் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. இருப்பினும் இந்த இரண்டு கதைகளில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம் என்ற ஒரு ஆவலில் வாசிக்கத் தொடங்கியதுதான் என் முதல் புனைகதை வாசிப்பு பயணம். மறக்க முடியாத நாட்கள். 
முனைவர் பட்ட ஆய்வை நான் டெல்லியில் செய்து கொண்டிருந்த சமயத்தில் சாகித்ய அகாதெமி விழாவில் கலந்துகொள்ளப் பிரபஞ்சன் அவர்கள் அப்போது டெல்லி வந்து இருந்தார். அவரிடம் இந்த நினைவுகளைக் கூறி பேசும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தில்லியில் உள்ள ஆல் இந்தியா வானொலியில் எழுத்தாளர் பிரபஞ்சனை நேர்காணல் செய்ய எனது நெறியாளர் முனைவர் சந்திரசேகரன் அவர்களுடன் நானும் சென்று இருந்தேன். தமிழ்நாடு உணவகத்தில் காலையில் சந்தித்தோம். என் நெறியாளர் அவர்களும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் நெருக்கமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். இடையில் அமைதியாக அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். காலை உணவு அங்கேயே முடித்துவிட்டு அதன் பிறகு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பிரபஞ்சன் பேசுவதாக இருந்தது மறுநாள் தில்லி ஆல் இந்தியா வானொலியில் பிரபஞ்சினைப் பேட்டி எடுக்கும் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வைப் பதிவு செய்யும் பொறுப்பு என்னிடம் என் நெறியாளர் கொடுத்திருந்தார். அதற்கு முன்பு அவரைப் பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் எழுத்தாளர் பிரபஞ்சனிடம் என்னவெல்லாம் கேட்கலாம்  குறிப்பாகக் காலனிய சூழலில் புனைகதை குறித்துப் பேசலாம் என்று நானும் என்  நெறியாளரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பிரபஞ்சனைப் பற்றிய எழுத்துப்பூர்வமாக சில குறிப்புகளை எழுதி வரும்படி எனக்கு என் நெறியாளர் அறிவுறுத்தி இருந்தார். அன்று 45 நிமிடத்திற்கும் மேல் தன்வரலாறு, புனைகதைகளின் களங்கள், மற்றும் காலனியச் சூழலில் புனைகதைகளின் இலக்கியப் போக்குகள் குறித்து மிக விரிவான ஒரு உரையை வழங்கினார் பிரபஞ்சன். என் நெறியாளரின் அற்புதமான வினாக்கள் தொடுக்க அதற்குப் பிரபஞ்சன் தொடர்ந்து பல செய்திகளைக் கூறிக்கொண்டே இருந்தார் 45 நிமிடம் என்பது கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரம் ஆனது. அனைத்தையும் வானொலி நிலையத்தில் பதிவு செய்தனர் நானும் என் கைப்பேசியில் பதிவு செய்தேன்.

(தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் பிரேம் அவர்களுக்கு நன்றி)

அபி இராவணன்

"நவபாஷாண சித்தர்"

சித்தர்களை நோக்கிய என் பயணமும் நவபாஷாண சித்தரைப் பற்றி நான் எழுதியதும்.

இன்றைய கொரோனாவும்
சந்தி குப்பம் நவபாஷாண சித்தரும்.

சித்தர்கள் நம்மை அழைக்காமல் அவர்களுடைய ஜீவ சமாதிக்கு நாம் செல்ல முடியாது. நீண்ட நாட்களாக சித்தர்களைப் பற்றிய சிந்தனையோடு இருந்த நான் இன்று சற்குரு நவபாஷாண சித்தர் பீடம் - சந்தி குப்பம் என்ற ஊருக்குச் சென்றிருந்தேன்.
விவசாய நிலத்திற்கு நடுவில் அமைந்திருந்தது. உள்ளே சென்று ஜீவசமாதியை வணங்கிவிட்டு கோயிலின் பின்புறமாகச் சென்றேன். தென்னை மரம், நாவல் மரம், அத்திமரம், கொய்யா மரம், நெல்லிக்காய் மரம், வெள்ளெருக்கு, துளசிச் செடி, செம்பருத்தி பூ செடி எனப் பலவகையான செடிகளும் மரங்களும் இயற்கை சூழலில் அமைந்திருந்தது. அதுமட்டுமன்றி அந்தக் கோயிலைச் சுற்றியும் சவுக்கை, அவித்து கீரை, தென்னந்தோப்பு, சாமந்திப்பூ தோட்டம், வாழைத்தோப்பு பார்ப்பதற்கே கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. உச்சிப் பொழுது சரியாக மணி 1:30 (pm) அங்கிருந்தவர்கள் வேலையை முடித்துவிட்டு அந்த கோவில் பின்புறமாக இருந்த தென்னை மரத்தடியில் ஒன்று கூடினார்கள். ஒரு அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் என் எதிரே வந்து அமர்ந்தார். எந்த ஊர் தம்பி நீங்க? என்று கேட்டார். என் ஊர்ப் பெயரைச் சொன்னேன். நானும் அவரிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்ன படிக்கிறபா? இல்லை வேலை பார்க்கிறாயா? என்று கேட்டார். Ph.d படித்து முடித்து விட்டேன் என்றேன். ஒருகணம் மனதில் எங்க இதெல்லாம் இந்த முதியவருக்குப் புரியப் போகிறது என்று யோசித்த பொழுது. உடனே அவர் தனது மனைவி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்ப்பதாகக் கூறினார். தானும் விழுப்புரம் அரசு கல்லூரியில்  படித்ததாகவும் கூறினார். எனக்கு மேலும் வியப்பு. ஆடையின்றி வெறும் கோவணத்தோடு வயலில் வேலை பார்த்துவிட்டு வந்து என்னோடு அமர்ந்து பேசிய பெரியவரை ஒரு நிமிடம் கண்கள் விரியப் பார்த்தேன். எனக்கு மிகுந்த ஆச்சரியம். இந்த எதார்த்தமான பேச்சுக்கள் எல்லாம் கிராமப்புறத்தில் தான் சாத்தியம். நகர்ப்புறங்களில் நிச்சயம் இப்படி ஒரு உரையாடல் நிகழ வாய்ப்பே இல்லை. என்று தோன்றியது. கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்கப் பெண்கள் இருவர் ஏதோ குடும்பக் கதை பேசிக் கொண்டிருப்பதை அவர்களின் உரையாடலிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. என்ன வேலை செய்கிறீர்கள்? பெரியவரே என்று நான் கேட்டதும். அவர் "அது வாப்பா அதோ தெரிகிறது அந்த சவுக்கு நம்மதுதான்இந்தாண்டா வாழ நம்மதுதான் பின்னாடி எள்ளு காயப் போட்டு இருக்கேன்பா என்று சாதாரணமாகக் கூறினார். உடனே அவர் தொடர்ந்து அவர் படித்த காலத்தில் அவருக்கு அரசு வேலை கிடைத்ததாகவும் அது உள்ளூரில் உள்ள சிலரின் காழ்ப்புணர்ச்சியால் அது கிடைக்காமல் போனதாகவும் கூறினார். ஏன் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வீட்டில் இரண்டு பேருக்கு அரசு வேலை எப்படி கோப்பார்கள் என்று கூறினார். யாரோ? ஒருவர் ஆட்சியரிடம் மனுகொடுத்து வேலையைத் தடுத்ததாகவும் கூறினார். அதனால் அந்த வேலை அன்று கிடைக்காமல் போனதாகவும் கூறினார். பின்பு மீண்டும் முயற்சி செய்தும் கைக்குக் கிடைத்த வேலை மீண்டும் கிடைக்காமல் போகவே தன் ஜாதகத்திலே அரசு வேலை கிடைக்காது என்றும் அவருக்கு யாரோ சொன்னது பலித்தது என்று கூறி சிரித்தார். இருந்தாலும் பரவாயில்லை ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாதான் இருக்கிறோம். என்று கூறி துண்டை உதறி அங்கு விரித்து அதன் மீது அமர்ந்து. ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டார். என்ன சாப்பிடப் போகலையா என்று நான் கேட்க தன்னுடைய பெரிய மகன் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதாகவும் கூறினார். அவர் கூறிய ஐந்து நிமிடத்தில் அவரது மகன் சாப்பாடு கொண்டு வந்திருந்தார். கூடவே பெரியவரின் பெயர்த்தி வந்திருந்தாள். அவளது பெயர் அவந்திகா. இங்கே வா உன் பேர் என்ன சொல்லு? என்ன படிக்கிற என்று கேட்டேன். நாணு இன்னும் பள்ளிக்குப் போல என்று மெதுவாகக் கூறிவிட்டு தன் தாத்தாவின் மடியில் போய் ஏறி அமர்ந்து கொண்டாள். மூன்று வயது இருக்கும் அந்த குழந்தைக்கு. தாத்தா சாப்பிடு என்று சொல்லிக்கொண்டே பையை தன் பக்கமாக இழுத்தாள். அந்த பெரியவர் எங்கே கீழே விழுந்து விடப்போகிறது என்று அவள் கையிலிருந்து வாங்கி உள்ளிருந்த சாப்பாட்டை வெளியிலெடுத்து சாப்பிடத் தயாரானார். கீரை குழம்பு உருளைக்கிழங்கு பொரியல். டப்பாவிலிருந்து உருளைக்கிழங்கு இரண்டு துண்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவள். தாத்தாவின் மடியிலேயே உட்கார்ந்து சாப்பிட்டாள்.

ஶ்ரீ நவபாஷாணம் சித்தர் செவிவழி வரலாற்று.

கடலூர் மாவட்டம் கிளிஞ்சிக் குப்பம் பஞ்சாயத்து உட்பட்ட சந்திக் குப்பம் கிராமத்தில் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னால் வடலூரிலிருந்து புறப்பட்டு வந்த சித்தர்களில் ஒருவர் தான் இந்த நவபாஷாண சித்தர்.

வடலூரிலிருந்து தல யாத்திரை  புறப்பட்ட சித்தர் பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு சந்தி குப்பம் அருகில் உள்ள புண்ணிய தலமான திருக்காஞ்சி காசிவிஸ்வநாதரை தரிசிக்க வந்தார். 

அப்போது சந்திக்குப்பம் மக்களை மர்மமான நோய் ஒன்று தாக்கி பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருந்தது நோய்க்கு ஏற்ற மருந்து தெரியாததால் தகுந்த சிகிச்சையும் அளிக்க முடியவில்லை. அந்த கிராமத்தில் சாவு என்பது தொடர் நிகழ்வாகிக் கொண்டிருந்தது.

அதிகாலையில் அவ்வூரிலுள்ள சங்கராபரணி ஆற்றில் நீராடிய சித்தர் சூரிய வழிபாட்டினை முடித்துவிட்டு ஆற்றங்கரை ஓரமாகச் சுடுகாட்டை வந்தடைந்தார்.

அங்கே முதல் நாளுக்கான பிணங்களைப் புதைத்தும் எரித்தும் இருந்த நிலையில் மக்கள் கூட்டத்தில் ஒவ்வொருவரும் அழுகையும் ஓலமுமாய் இருந்தனர்.

சித்தர் அங்கிருந்தவர்களை நோக்கி ஏன் இப்படி இங்கு இவ்வளவு சடலங்களைப் புதைக்கிறீர்கள் ஒரே நாளில் இவ்வளவு மரணங்களா? என்று கேட்க.

ஐயா எங்கள் ஊரில் இன்னதென்று தெரியாத ஒரு மர்ம நோய் தாக்குதலால் எல்லோரும் கும்பல் கும்பலாய் மடிந்து கொண்டிருக்கிறார்கள். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாததால் சிகிச்சையும் இல்லை யாரிடமும் சொல்லி முறையிடுவது என்றும் தெரிய இல்லை என்று கூறினர்.

சரி வாருங்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கலாம் என்னால் முடிந்த சிகிச்சையை நான் செய்கிறேன் என்று கூறினார்.

எல்லா வகையான நோய்களையும் தீர்க்கும் படியான கூட்டு மருந்தினை சித்தர்கள் எப்போதும் கைவசம் வைத்திருப்பார். அப்படியான நவபாஷாணத்தைப் பக்குவப்படுத்திக் கூட்டு மருந்துகளைச் சேர்த்து உண்ணும் விதத்தில் பக்குவப்படுத்தி வைத்திருந்தார்.

அந்த நவபாஷாணத்தினை தண்ணீரில் போட்டு சில மணிநேரம் கழித்து அந்த நீரை நோய்த்தொற்று உடையவர்களுக்குக் கொடுத்தார். தண்ணீரில் போட்டாலும் அந்த நவபாஷாணம் நீரில் கரையாது. ஒரு குண்டுமணி போலவே கிடக்கும்.

நோய்த் தொற்று உடையவர்கள் பூரணமாகக் குணமடைந்தனர். இந்த செய்தி அவ்வூரை மட்டுமல்லாமல் பக்கத்து ஊர்களிலும் பரவவே மக்கள் கூட்டம் சந்திக்கும் இடத்தை நோக்கிப் படையெடுத்தனர்.

அப்படி இருந்த சமயத்தில் பெரும்பாலான நேரங்களில் சித்தர் தியான நிலையிலேயே இருப்பார் அவரை தேடி வருபவர்களுக்குக் குறைகளைக் கேட்டு அதற்கு மருந்தாக மண்ணை அள்ளி அவர்கள் கையில் கொடுப்பார். அதை நெற்றியில் பூசி அவர்களுக்கும் அதை மருந்தாக உட்கொண்டார்கள். தங்கள் நோயும் குறையும் தீர்ந்தது என்று மக்கள் கூறவே மேலும் இந்த செய்தி காட்டுத்தீயாக எங்கும் பரவியது அன்றுமுதல் பெயர் தெரியாத அந்த சாமியார் நவபாஷாண சாமியார் என்றே மக்களால் அழைக்கப்பட்டார். 

தான் வந்த வேலை முடிந்துவிட்டது இனி ஊரிலிருந்து கிளம்புகிறேன் என்று சொல்லிக் கிளம்புகிற சமயத்தில் ஊர் மக்கள் அவரை தடுத்து நிறுத்தி தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே அங்கேயே சிலகாலம் தங்கி வாழ்ந்தார். தன்னை தேடி வருகின்ற பக்தர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தும் அவர்களுக்கு வேண்டிய ஆசிகளை வழங்கியும் வந்தார்.

ஒரு சமயம் சந்தி குப்பம் அருகிலுள்ள மனவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி சித்தரை வந்து சந்திக்க வந்தனர். அவரோ மண்ணை அள்ளி அவர்கள் கையில் கொடுத்து இதையே பிரசாதமாக உண்ணுங்கள் என்று கூறி விட்டுச் சென்றார். அவர்களும் அதைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு உண்டனர். அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டியது. என்ற செய்தியால் மிகப் பிரபலமடைந்தார்.

தான் ஜீவ சமாதி அடையப் போவதை உணர்ந்த சித்தர். ஊர் மக்களை அழைத்து எல்லோரும் சேர்ந்து பச்சரிசி பொங்கலைச் செய்து வாருங்கள் என்று அவர் கூற ஊரில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு கைப்பிடி பச்சரிசி போட்டு பொங்கலைச் செய்து வந்து அவரிடம் கொடுத்தனர். அப்பொழுது அவர் அதை வாங்கி உண்டுவிட்டு இன்னும் மூன்று தினங்களில் நான் சித்தி அடைந்து விடுவேன் என்னைச் சுடுகாட்டில் புதைக்காமல் எரிக்காமல் ஒரு மேடான இடத்தில் என்னை ஜீவசமாதி வைக்கும்படி கூறினார். 

அவர் கூறிய வண்ணமே மூன்று நாட்களில் அவர் ஜீவசமாதி அடைய ஊர்மக்களும் வயல்வெளியில் ஒரு மேடான பகுதியில் அவருக்குச் சமாதியை எழுப்பினர். 

சிலகாலம் ஊர் மக்கள் அவரை சக்தியை உணராமல் அவரை கண்டு கொள்ளாமலும் இருந்தனர். அங்கு மாடு மேய்க்கும் விளையாட்டு சிறுவன் ஒருவன் இவரெல்லாம் பெரிய சாமியாரா?  என்று சொல்லி அந்த சமாதியின் மேல் வைத்து இருந்த இளநீரை தன் காலால் எட்டி உதைக்க அந்த சிறுவனின் கால் இழுத்துக்கொண்டது. கடும் சுரத்தில் படுத்த படுக்கையானான் இதை அறிந்த அவரது பெற்றோர் அவன் செய்த தவற்றை மன்னிக்கும்படி வேண்டி சித்தரிடம் மன்றாடினார் அதன் பிறகு அந்த சிறுவன் குணமடைந்தான்.

இந்த செய்தியைக் கேட்ட ஊர்மக்கள் சுவாமிகளுக்குப் பூஜைகள் செய்தும் அவர் இருந்த சமாதியின் மேல் ஒரு லிங்கத்தை வைத்து வழிபாடும் செய்யத் தொடங்கினர். இப்படியாக அவரைப் பற்றிய செவிவழி கதைகள் உள்ளது.

இதுமட்டுமில்லாமல் மற்றொரு கதையும் உண்டு சுவாமிகள் ஜீவசமாதி அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்களிடம் அந்த நவபாஷாண மணியைக் கொடுத்து இதை வாழைப்பழத்தில் வைத்துச் சாப்பிடும் படி கூறினார். அச்சத்தில் அவர்கள் வேண்டாம் என்று கூற சரி நானே இதை உண்டு விடுகிறேன் என்று கூறி தனே அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார். அதன்பிறகே அவர் ஜீவசமாதி அடைந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு சில வாரங்கள் கழித்து வடலூரிலிருந்து சிலர் இவரைத் தேடி வந்தனர். அப்பொழுது சித்தருக்கான வழிபாட்டு முறைகளின் படி நாங்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி நாள் முழுக்க அங்கே சில பூஜைகளை நடத்திக் கொண்டிருந்தனர். அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடவை துணிகளை அந்த சமாதியைச் சுற்றிக் கட்டி வைத்துவிட்டு உள்ளே அமர்ந்து பூஜைகளைச் செய்து கொண்டிருந்தனர் பகல் பொழுது முழுக்கவும் பூஜைகள் நடந்தவாறே இருந்தன இரவும் தொடர்ந்தது. ஊர் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல யாரும் இல்லாத நேரத்தில் அந்த சமாதியைத் தோண்டி சித்தரை வெளியில் எடுத்து அவர் தொண்டையைக் கிழித்து அதிலிருந்த நவபாஷாண மணியை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கேயே புதைத்து விட்டுச் சென்று விட்டனர். காலையில் வந்து பார்த்த ஊர்மக்கள் மண்மேடு புதிதாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர். 

தொடரும்...
அபி இராவணன்

ஃபுக்குஷிமா (ஒரு பேரழிவின் கதை)

ஃபுக்குஷிமா (ஒரு பேரழிவின் கதை)
மிக்காயேல் ஃபெரியே
# பிரெஞ்சிலிருந்து தமிழில்
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்.

# இந்நாவலை வாசிக்கையில் இறுக்கமான ஒரு மனநிலையையே நான் உணர்கிறேன். இயல்பான மன நிலையிலிருந்து மாறி பேரழிவின் உச்சத்தில் நின்று கொண்டு எந்த உணர்வும் சலனமும் அற்ற தனி ஒருவனாக இந்த நாவலைக் கடக்க முயற்சி செய்கிறேன்.

பேரழிவுகள் மூலம் மனிதர்களுக்கு இயற்கை தன் பாடத்தைப் புகட்டிக் கொண்டே தான் இருக்கிறது. இன்றைய சூழலில் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல்.  முன்னேற்பாடுகளுடன் நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வைத்துக்கொள்ளவேண்டும் என்ற முன் எச்சரிக்கையை விடுகிறது இந்நாவல்.

நிலநடுக்கம், பூகம்பம், ஆழிப்பேரலை, புயல், பெருமழை, வெள்ளம், தீ போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மனிதன் தன்னை காத்துக்கொள்ள எவ்வாறெல்லாம் போராடுகிறான் என்பதை உணர்ந்து கொண்டாலும் அவற்றிலிருந்து தப்பிக்க வழிகளை கற்றுக் கொண்டாலும் மனிதனுடைய அனைத்து முயற்சிகளும் ஏதோ ஒரு புள்ளியைத் தோல்வியின் படிக்கட்டுகளைத் தொட்டுவிட்டுத் தான் வருகின்றன. இயற்கை விதியின் முன் மனிதனின் சக்தி சிறு புள்ளி என்பதை உணர முடிகிறது இந்நூலை வாசிக்கையில்.

ஃபுக்குஷிமா (ஒரு பேரழிவின் கதை) ஒரு நடந்த சம்பவம் வரலாற்றில் பதிவாகிப் போன ஒரு சோகமான கதை அதை வாழ்ந்து அனுபவித்த ஒருவரால் எழுதப்படும்போது உண்மை தடையாக அமைகிறது.

வரலாற்றில் இன்று நேற்றல்ல காலம்தோறும் பேரழிவுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதைத் தீர்க்கவும் அல்லது முன்னெச்சரிக்கைக்கான வழியைத் தெரிந்து கொள்ள அறிஞர்கள் அரும்பாடுபட்டு மனித சமுதாயத்தைக் காக்கக் காலந்தோறும் போராடி வருகின்றனர். உதாரணமாக கி.பி 132 ஜங் ஹெங் என்பவர் நிலநடுக்கங்களை அறியும் முதல் கருவியைக் கண்டுபிடித்தார். ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளாமலும் அவர் கண்டுபிடிப்பைப் பற்றி அவதூறு பேசி அவரை அழித்து ஒழிக்கவும் தான் செய்தனர். இது அன்று தொடங்கி இன்று வரை இதே நிலைதான் தொடர்கதையாகத் தொடர்கிறது. அறிஞர்கள் பின்னாளில் நம்மை தன் கண்டுபிடிப்பை நிரூபித்து வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது வரலாறு...

மூன்று பகுதிகளாகக் கதை அமைந்துள்ளது.

1. விசிறியின் கைப்பிடி 
2. தண்ணீரிலிருந்து தப்பித்த கதைகள்
3. அரை ஆயுள் - வாழும் முறை

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள் ஒரு வெள்ளிக்கிழமை என்று கதை தொடங்குகிறது. அதிலிருந்து நிலநடுக்கம், சுனாமி, அணு உலை வெடிப்பு வரை மாட்டிக்கொண்ட ஒருவரின் மனநிலையை அப்படியே தத்ரூபமாக உணர்வுப்பூர்வமாக அசைவின் அத்தனை மாறுதல்களையும் கண்முன்னே கொண்டுவந்து காட்சிப்படுத்தி விவரிக்கிறார் நூலாசிரியர். இடையே சரியான நேரம் , காலம், ஆண்டு, புள்ளி விவரங்கள் எனத் தரவுகளோடு எழுதி இருப்பது ஒரு வரலாற்று நூல் போல் எண்ணத் தோன்றுகிறது.

ஒரு இலக்கியவாதி என்றால் அவனுக்குக் கணிதம், அறிவியல், வானசாஸ்திரம், இலக்கணம், மொழியியல், பண்பாட்டியல் என அனைத்தையும் ஒருசேரப் பெற்றவனாக இருக்க வேண்டும். காரணம் ஒரு இலக்கியப் படைப்பை உருவாக்குவதற்கு இவ்வளவும் தேவைப்படுகிறது. அதனால் தான் படைப்பாளர்கள் அவர்களுக்குக் கல்வி என்பது மிக விரிந்தது தளத்தைக் கொண்டது...

இந்நாவல் ஆசிரியரும் அத்தகைய தன்மை கொண்டவர் ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழி பேராசிரியராக பணிபுரிந்த சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் கூடுதலாகத் திரட்டிய தகவல்கள் அனைத்தையும் கொண்டு எழுதி இருப்பது இதன் சிறப்பு.

வாழ்வின் யதார்த்தத்தை உணராத மனிதர்கள் இம்மாதிரியான பேரழிவுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள் என்ற எதார்த்த சம்மட்டி கொண்டு ஓங்கி நம் தலையில் அடிக்கும் விதமாக நடந்ததை நடந்தவாறு பதிவு செய்துள்ளார். வாசிப்பதற்கு ஒரு புனைவு போலத் தோன்றினாலும் வரலாற்றில் அதன் தடத்தையும் கோபுரத்தையும் விளங்கிக் கொள்வதற்கு இந்நூல் சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது.

# இந்நூலாசிரியர் மிக்காயேல் ஃபெரியே 

இவர் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர், கட்டுரையாளர் இவருடைய பாட்டி ஒரு இந்தியர். தாத்தா மொரிஷியர். பிரான்சில் 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தன் இளம் வயதைக் கழித்து பாரிசின் புகழ்மிகு சொர்போன் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவருடைய படைப்புகளில் கலை இசை தத்துவம் விமர்சனம் ஆகிய பன்முகத் தன்மைகளைக் காணமுடியும்.

# மொழிபெயர்ப்பாளர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்.

இவர் புதுச்சேரியில் 1963 ஆம் ஆண்டு பிறந்தவர். புதுச்சேரி அரசு கல்லூரியில் பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சுவிட்சர்லாந்து பிரெஞ்சு எழுத்தாளர் "பிலேஸ் சாந்த்ரார் படைப்புகளில் விலகித்தப்புதல்" எனும் ஆய்வினை முடித்து பிரெஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.

குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை ஆகிய சங்க நூல்களை முழுமையாகப் 
பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். பல நவீனத் தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் இவர் பல பிரெஞ்சு நாவலாசிரியர்களின் புனைவு இலக்கியங்களைப் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர்.

இந்நூலாசிரியரின் படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளை மீது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வும் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அபி இராவணன்